Tuesday, 22 April 2014

பெண்களும் ஒழுக்கமும்

பெண்களின் ஒழுக்கத்தை கேள்விக்கு உட்படுத்துவது தவறு. உண்மை. ஆனால், பெண்கள் தங்களது சுயபாதுகாப்பில் அக்கறை கொண்டவர்களாக இருப்பது உத்தமம். யாரும் தெரியாதவர்கள் கூப்பிடுகிறார்கள் அல்லது ஏதாவது ஒதுக்குப்புறமான இடத்திற்குப் போக வேண்டிய தேவை இருக்கிறது என்றால் முன்னெச்சரிக்கை செய்து கொண்டு போவதில் தவறில்லை. தங்களது பாதுகாப்பில் அவரவர்க்கு அக்கறை வேண்டும். விபரீதங்கள் நிகழ்ந்த பின்பு அழுது புண்ணியமில்லை.

தில்லி சம்பவமே ஒரு நல்ல முன்னுதாரணம். அந்த பெண்ணும் அவளது நண்பனும் செய்த முட்டாள்தனமான செயலையும் (தனியார் வாகனத்தில் தெரியாதவர்களுடன் பயனித்தது) நாம் கேள்விக்கு உட்படுத்திட வேண்டும். சில நாட்களுக்கு முன் திண்டுக்கல்லில் ஒரு பெண் அவரது காதலன் மற்றும் அவனது நண்பர்களால் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம்கூட பெண்களிடம் விழிப்புணர்வு இல்லாத சூழலயே காட்டுகிறது. காதலனுடன் உறவு கொள்வது தனிமனித சுதந்திரம். ஆனால் அதற்கு அவன் ஆள்நடமாட்டமில்லாத ஒதுக்குப்புறமான இடத்திற்கு கூப்பிட்டால் அதை மறுக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களது உடல் உங்கள் உரிமை. ஆனால் அந்த உரிமை மீறப்படுவதற்கான வாய்ப்பு அதுபோன்ற இடங்களிலும் சந்தர்பங்களிலும் அதிகம், அந்த விழிப்புணர்வுதான் அவசியம். அந்த விழிப்புணர்வுதான் உங்களது தனிமனித சுதந்திரத்தையும் பாதுகாக்கும். சமூகத்தில் நிறைந்திருக்கும் ஒழுக்கமின்மை ஆண்களுக்கும் கூட புதியவர்களுடனிருக்கையில் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில், ஆள்நடமாட்டமற்ற நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழலையே உருவாக்கியிருக்கிறது.

இப்போது பணியிலிருக்கும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்துகள் ஏராளம்.. குறிப்பாக இரவு நேரங்களில் பயணமும் அதனால் விளையும் ஆபத்துகளும். பெண் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு எல்லா நிறுவனங்களும் பொருப்பேற்க வேண்டும். காவல்துறையினரும், நிபுணர்களும் கொடுக்கும் தற்காப்பு வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுற்றுப்புற மற்றும் புற உலக விழிப்புணர்வு முதலிய கற்றல்களை எல்லா நிறுவனங்களும் தங்கள் பெண் பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும். பெண்களும் இவற்றை சிரத்தையாக கேட்டறிந்தும் கற்றறிந்தும் வைத்துக்கொள்ளவேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்த பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவேண்டும். கண்துடைப்பாக இன்றி உண்மையிலேயே பயனளிப்பதாக இருத்தல் வேண்டும்.

ஒரு உதாரணம், காவல்துறையினர் எவ்வளவு ரோந்து சுற்றினாலும், மயங்கிய நிலையில் இருக்கும் பெண்ணிடம் நூருபேர் அத்துமீறினாலும் அதை கண்டுபிடித்து தடுக்க முடியாது. ஆனால் அந்த பெண்ணால் மட்டுமே தன்னை சுயநினைவு இழக்கும் நிலைக்கு போகாமல் தற்காத்துக்கொள்ள முடியும்.

தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வது முக்கியம். தன்னைச்சுற்றியிருக்கும் சூழலைப்பற்றிய விழிப்புணர்வும் அவசியம்.

No comments:

Post a Comment