Thursday, 18 June 2015

போரும் இராணுவமும்

இந்தியா கடந்த பல ஆண்டுகளாக எந்த போரிலும் ஈடுபடாததால் இராணுவத்தின் மரியாதை குறைந்துவிட்டது. - மத்திய அமைச்சர்

இது உண்மைதான். பொதுவெளியில் இராணுவத்தில் இருப்பவர்களின் மீதான மரியாதையும், இராணுவத்தின் மீதான ஈர்ப்பும் குறைந்துவிட்டது.

நமது இராணுவ வீரர்கள் அமரிக்க, நேட்டோ மற்றும் ருசிய படைகளைப் போல் 1971க்கு பிறகு ஒரு முழு மற்றும் நேரடியான யுத்தத்தில் ஈடுபடவில்லை. அவ்வளவுதான். ஆனால் அவர்கள்தான் உலகிலேயே இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஒரு யுத்ததில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுதான் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தம்.

1971 ஆம் ஆண்டு வங்கதேச சுதந்திரப் போரில் கிடைத்த தோல்வி பாகிஸ்தானுக்கு ஒரு முக்கியப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. அது இந்தியாவை நேரடியான ஒரு யுத்ததில் வெல்ல முடியாது என்பது. அந்தப் பாடம் அவர்களை ஒரு புதிய யுத்தமுறையைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.

1984ல் இந்தியா மீண்டும் பாகிஸ்தானைத் தோற்கடித்தது. இம்முறை ஒரு துப்பாக்கியையும் வெடிக்காமல் ஒரு யுத்தம் நடந்து முடிந்தது. களம் சியாச்சின் பனிப்பரப்பு. 1971 யுத்தத்துக்கு அப்பறம் போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தில் இந்த பனிப்பரப்பின் உரியை யாருக்கென்று தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனவே இருதரப்பும் அதை உரிமை கொண்டாடத்துவங்கினர். பாகிஸ்தான் அந்தப் பிரதேசத்தில் இந்தியாவுக்குத் தெரியாமல் படைகளை இறக்கி தனதாக்கிக்கொள்ளலாம் என்று திட்டம் போட்டு அதை அமைதியாக செயல்படுத்த ஆரம்பித்தது. ஆனால் இந்தியாவின் காதுகளுக்கு அந்த செய்தி வந்துவிட்டது. அதிவிரைவாகச் செயல்பட்ட இந்தியா பாகிஸ்தானுக்கு முன்னராக தனது படையணிகளை நகர்த்தி அங்கு நிலைகொண்டுவிட்டது. இப்படித்தான் உலகின் உயரமான யுத்தகளத்தில் இந்தியா ஒரு துப்பாக்கியைக்கூட வெடிக்காமல் எதிரியை out maneuver செய்து வென்றது.

இதற்கிடையே சோவியத் கூட்டமைப்பு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தது. முதலில் அங்கொரு கம்யூனிச அரசை நிறுவியது. அடுத்ததாக அந்த கம்யூனிச அரசுக்கு பாதுகாப்பு என்று தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பியது. இந்த நிகழ்வு இந்தியாவின வடமேற்கு எல்லைப் பகுதியில் ஒரு பெறும் சலணத்தை ஏற்படுத்தியது. இன்றுவரை மத்தியகிழக்கிலிருந்து காஷ்மீர் வரை உலுக்கிக்கொண்டிருக்கும் ஜிகாத் விதைக்கப்பட்டது அப்போதுதான். சார்லி வில்சனின் யுத்தம் (charlie wilsons war) மற்றும் ராம்போ 3 படங்களைப் பார்த்தவர்கள் அந்த ஜிகாதிகளை அமரிக்காவும் பாகிஸ்தானும் எப்படி உருவாக்கி வளர்த்தார்கள் என்பதை ஓரளவு தெரிந்துகொள்ளலாம்.

1989வாக்கில் ஆபகானிஸ்தானை விட்டு சோவியத் ருசியா வெளியேறிய பிறகு வேலையில்லாமல் இருந்த லஷ்கர், ஹர்கத்துல் முஜாகிதீன் போன்ற ஜிகாதி அமைப்புகளுக்கு காஷ்மீரில் தனது நிழல் யுத்தத்தை முன்னெடுக்கும் வேலையைத் தந்தது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ. அதிலிருந்து இன்றுவரை இந்த நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சரி இந்த நிழல் யுத்தம் என்ன அவ்வளவு கடுமையானதா?

சர்வ வல்லமை படைத்த இந்திய ராணுவத்தை ஏகே47 துப்பாக்கிகளைத் தாங்கியபடி சல்வார் கமீசை அணிந்துவரும் சில நூறு ஜிகாதிகளால் என்ன செய்துவிடமுடியும்? இந்த சின்ன கொசு பல நோய்களைப் பரப்பி பலநூறு பேரை பலிவாங்குவதுபோல் தான் இந்த பாகிஸ்தான் ஏவிவிடும் பயங்கரவாதமும். இதுவரை 5000-8000 பாதுகாப்புப் படையினர் பலியாகி உள்ளனர். 50,000 குறையாத பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதுவரை நடந்த நான்கு நேரடி யுத்தங்களிலும் இந்தியா இத்தனை உயிர்களை இழந்ததில்லை. இதுதான் பாகிஸ்தானின் முதல் வெற்றி. இந்தியாவை தொடர்த்து ரத்தம் சிந்தவைப்பது.

காஷ்மீரில் தீவிரவாதமும் ராணுவ நடமாட்டமும் இல்லாமல் இருந்தால் அது ஒரு சுற்றுலாத் தளம். உலகம் முழுவதுமிருந்து கோடிக்கணக்கில் சுற்றுலாப் பயணிகளை கவரவல்ல பூலோக சொர்கம் அது. இந்தியாவின் பணக்கார மாநிலமாகும் தகுதி காஷ்மீருக்கு உண்டு. இந்திய அரசுக்கு பல்லாயிரம் கோடி வருமானம் வந்திருக்கும். ஆனால் இப்போது சுற்றுலா என்பது பெயரளவில் தான் இருக்கிறது. இதனால் இந்திய அரசு காஷ்மீரின் நிர்வாகத்துக்கு பல்லாயிரம் கோடி ஒதுக்கவேண்டிய நிலை. மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புக்காக செலவாகிறது. வரவில்லாமல் செலவு மட்டும். இது பாகிஸ்தானுக்கு இரண்டாவது வெற்றி.

அதோடு வேறொரு நுட்பமான நோக்கமும் இருக்கிறது. அது இந்திய ராணுவத்தின் உறுதியை உடைப்பது. தொடர்ந்து ஒரு படைவீரன் களத்தில் முன்னணியில் இருந்தால் அவனது உள்ளம் கலங்கிவிடும். எதிரி யாரென்று புரியாது, எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியாது, பார்ப்பவர்களை எல்லாம் சந்தேகப்படவேண்டும், நண்பர்கள் மரணிப்பதை அருகிலிருந்து பார்க்கவேண்டும், திடீர் குண்டுவெடிப்புகள் என ஒரு தொடர் யுத்த சூழலில் வாழவேண்டும். இந்த சூழல் யாருடைய உறுதியையும் குழைத்துவிடும். கண்பறிக்கும் வெண்மை மட்டுமே பரவிய வெள்ளைப் பனிப்பிரிதேசங்களிலும், அடர் வனங்களிலும் தொடர்ந்து ரோந்து சுற்றுவது மனதைப் பேதலித்துவிடும். இத்தகைய சூழலில் தொடர்ந்து இயங்கும் ஒரு படையணி கண்ணாடி போன்ற எளிதில் உடைந்துவிடும் நிலையில் இருக்கும்.

அதுபோன்றே இந்த ஊடுறுவல்கள் ஒரு patternல் வருவதுபோன்ற தோற்றத்தைத் தருவது போல தந்திரமாக செய்வது. வருடத்தின் குறிப்பிட்ட காலங்களிலும் குறிப்பிட்ட இடங்களிலுல் அதிகமாக ஊடுறுவலை நிகழ்த்துவுது. இது பாதுகாப்பைத் திட்டமிடுபவர்களிடம் ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். இப்படி ஒரு பேட்டர்னை உருவாக்கியாயிற்று, வீரர்களும் சோர்ந்துபோயிருக்கின்றனர், இதுதான் தகுந்த சூழல். இந்த எதிர்பாராத வகைநில் சூழலில் ஒரு திடீர்த் தாக்குதலை நடத்தினால்போதும், அவர்கள் இராணுவம் நமது முன்கள அரண்களைத் தகர்த்துவிட்டு அதிக தூரம் உள்ளே நுழைய முடியும். பிறகு அமைதிப்புறாவைப் பறக்கவிட்டு சரவதேச சமுதாயத்தை பஞ்சாயத்துக்கு அழைத்துக்கொள்ளலாம். கார்கிலில் நடந்தது இதுதான். இதுதான் பாகிஸ்தான் நடத்தும் நிழல் யுத்தத்தின் இலக்கு.

இராணுவ வீரர்கள் என்றாலே உறுதியானவர்களாயிற்றே? ஆமாம். ஆனால் எறும்பு ஊர கல்லும் தேயும்தானே? 2003லிருந்து வருடத்துக்கு சராசரியாக 100க்கும் குறையாமல் ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இத்தகைய தற்கொலைகள் ராணுவத்தின் பலத்தை மெல்ல அரிக்கும் கரையான் போன்றது.

சரி ராணுவம் எப்படி இந்த நிழல் யுத்தத்தை எதிர்கொள்கிறது? படை சுழற்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் வழியாக. அதாவது காஷ்மீரில் எந்தப் படையணியும் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான் பணியில் இருப்பர். பிறகு அவர்களை அங்கிருந்து வெளியே எடுத்துவிட்டு வேறு படையணியினர் அங்கு அமர்த்தப்படுவர். இது படைவீரர்களின் சோர்வைப் போக்குவதோடு எல்லா படையணிகளுக்கும் முன்கள அனுபவத்தை வழங்கும். எதிரியை தடுப்பது, படைவீரர்கள் சோர்வடைவதைத் தடுப்பது, எல்லா படையணிகளுக்கும் யுத்தகள அனுபவத்தை அளிப்பது என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துக்கொண்டிருக்கிறது இராணுவம்.

ஆனால் இதிலொரு பிரச்சினை இருக்கிறது. ஒரு படையணி குறிப்பிட்ட காலம் தான் பாதுகாக்கும்/ரோந்து சுற்றும் பிரதேசம் குறித்து கற்கும் அனுபவ அறிவை முழுமையாக அடுத்த படையணியிடம் கையளிக்க முடியாது. இது அடுத்த படையணியை எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து அறிந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இப்படியான பல சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் ராணுவம் செயல்பட்டிக்கொண்டிருக்கிறது.

அடுத்தது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது. ராடார்கள், ஆளில்லா விமானங்கள், சிறு ரோபோக்கள், செயற்கைக்கோள் என தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பது. அதோடு ஈரான், நேட்டோ, ஆப்கானிஸ்தான், ருசியா, இசுரேல் போன்றவர்களுடன் உளவுத் தகவல்களைப் பரிமாறியும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்தும் தடுத்தும் தாற்காத்துக்கொள்வது.

இப்படியொரு யுத்ததில் ராணுவம் ஈடுபட்டுக்கொண்டிருப்பது மக்களுக்குத் தெரியாதது வெட்கக்கேடு. அதை ஒரு யுத்தமாகவே கருதாத அரசு இன்னொரு வெட்கக்கேடு... என்ன செய்வது? கைபர் கனவாயின் வாயிலில் அன்று மத்திய ஆசிய படைகள் கொட்டிய போர்முரசின் சப்தம் இன்றும் எல்லைகளில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது... ஆனால் அந்த சப்தம் நமது உறக்கத்தைக் கெடுக்காமல் இருக்க ராணுவம் கண்விழித்துக் கிடக்கிறது. அவர்களுக்குறிய மரியாதையை நாம் வழங்கித்தான் ஆகவேண்டும்.

பின்குறிப்பு : நான் இதில் இந்திய அமைதிப்படை குறித்த தகவல்களைத் தரவில்லை. அது வேறொருநாளில் வேறொரு பதிவில்.

Sunday, 14 June 2015

அடிமைகள்

சே குவேரா.

அண்ணாரது பிறந்தநாளில் வாழ்த்துகளும் புரட்சிக்கோசங்களும் ஏற்கனவே நிறைந்து கிடக்கின்றன.

சே எனும் ஒரு ஆளுமை. போற்றப்படவேண்டியவர். அவரைப் பின்பற்றலாம். அவரது வாழ்க்கையைப் படித்து நமது வாழ்வியலை வடிவமைத்துக் கொள்ளலாம்.

இந்தப் பதிவு சே'வைப் பற்றியதல்ல.

வேறு இருவரையும் நமது பொதுப் புத்தியையும் பற்றியது. ஒரே காலகட்டத்தில் இருவரும் சாதித்தனர். அவர்களது சாதனையை அவர்கள் சார்ந்த சமூகங்கள் எப்படிக் கொண்டாடின என்பதைப் பற்றியது இந்தப் பதிவு. இரண்டாம் உலகப்போருக்காக உலகம் சித்தாந்தங்களின் அடிப்படையில் பிளவுபட்டுக் கொண்டிருந்த நேரமது. 1936. பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டிதான் களம். அந்த ஒலிம்பிக்கை ஹிட்லர் ஆரிய இனத்தின் மேன்மையைக் காட்டும் போட்டியாகவும் நாசிக்களின் வல்லமையைக் காட்டும் போட்டியாகவும் நடத்தினார்.

முதலாமவர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் (Jesse Owens) எங்கோ கேள்விப் பட்ட பேராக இருக்கிறதா? நான் எனது பாத்தாம் வகுப்பு மெட்ரிக் பாடத்திட்டத்தில் இவரைப் பற்றி படித்தேன். இவர் ஒரு அமரிக்காவைச் சார்ந்த கருப்பின தடகள வீரர். நீளம் தாண்டுதலில் அன்றைய காலத்தில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்த இருவரில் ஒருவர். அந்த இன்னொருவர் ஜெர்மனியின் லஸ் லாங் (Luz Long).ஹிட்லரின் செல்லப்பிள்ளை. லஸ் லாங்கின் வெற்றியை ஹிட்லர் எதிர்பார்த்து காத்திருந்தார்.

நமது நாயகரோ அமரிக்காவில் சம உரிமை கிடைக்கப்பெறாத கருப்பினத்தைச் சார்ந்தவர். எதிரியோ தாங்கள்தான் உலகின் உயர்ந்த இனம் என்று மார்தட்டிக்கொள்ளும் கூட்டத்தைச் சார்ந்தவர். போட்டியில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வெற்றி பெருகிறார். அதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக மேற்குலகம் கொண்டாடியது. நமது பத்தாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் வருமளவு சிறப்பிக்கப் பட்ட வெற்றி அது.

இரண்டாமவர், அந்த ஒலிம்பிக்கில் பங்குபெற்ற இந்திய ஹாக்கி அணி. ஒரு தனி நபர்ல்ல. தயான் சந்த் தலைமையில் சென்ற வளைமட்டைப்பந்தாட்ட அணி.

அந்த அணி அங்கு வரும் வரை செய்ததைப் பாருங்கள். 1928 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக நடந்த ஒரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்து அணியைத் தோற்கடித்தனர். இங்கிலாந்து அந்த தோல்விக்குப் பின் இந்தியா சுதிந்திரம் அடையும் வரை தனது ஹாக்கி அணியை ஒலிம்பிக் கோட்டிகளுக்கு அனுப்பு மறுத்துவிட்டது. தனது அடிமைகளிடம் தோற்பதை அவர்கள் விரும்பவில்லை. அந்த ஒலிம்பிக் போட்டியின் இறுதியில் நெதர்லாந்து அணியைத் தோற்கடித்து தங்கம் வென்றனர். இதுதான் இந்தியா ஒலிம்பிக்கில் வென்ற முதல் தங்கப்பதக்கம்.

அடுத்து வந்த 1932ன் லாஸ் ஏஞ்சலீஸ் ஓலிம்பிக் போட்டிகளின் முதல் போட்டியில் ஜப்பானை 9-0 என்ற கணக்கில் வென்றவர்கள் இறுதியில் அமரிக்காவை 25-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றனர். இது இரண்டாவது தங்கப்பதக்கம்.

இப்போது 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டி.  ஜெர்மனியுடன் நடந்த பயிற்சிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் சந்தித்த ஒரே பெரும் தோல்வி இதுவாகத்தான் இருக்கவேண்டும். அடுத்து ஒலிம்பிக்கின் முதல் போட்டியில் ஹங்கேரியை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்களது வெற்றிப்பயணத்தை துவங்கினர். அடுத்தடுத்து அமரிக்காவை 7-0, ஜப்பானை 9-0 என்று தோற்கடித்துவிட்டு அரையிறுதியில் பிரான்ஸ் அணியை 10-0 என்ற கணக்கில் பந்தாடினர்.

இறுதியில் மீண்டும் ஜெர்மனி. இப்போது நம்மவர்களுக்கு சிறு பதட்டம். இயல்புதானே? போட்டி நடப்பது பெர்லினில். அவர்களோ தாங்கள்தான் உலகிலேயே உயர்ந்தவர்கள் என்று மார்தட்டிக்கொள்பவர்கள். இத்தனை ஆண்டுகளுல் தங்களைத் தோற்கடித்த ஒரே அணியும் ஜெர்மனி அணிதான். களத்துக்குப் போகும் முன் ஒருவர் இந்திய தேசியக் காங்கிரசின் மூவர்ணக் கொடியை எடுத்து வந்து துணிமாற்று அறையில் விரிக்கிறார். நம்மவர்கள் அந்த பொடிக்கு மரியாதை செலுத்திவிட்டு களம் புகுகிறார்கள். ஜெர்மனியை பெர்லினில் வைத்து 8-1 என்ற கணக்கில் தோற்கடித்து ஒலிம்பிக்கின் முதல் ஹாட்ரிக் ஹாக்கி தங்கப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்தனர்.

நிற்க. இப்போது ஜெஸ்ஸி ஓவன்சின் சாதனையை நான் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை. இரண்டும் சமமான சாதனைகள்தான். ஆனால் அவருக்கு அவரது தேசத்திலும் உலகம் முழுவதும் கிடைத்த அங்கீகாரமும் புகழும் நம்மவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த ஒலிம்பிக்கில் இந்திய அணியைத் தலைமைதாங்கி வழிநடத்தியவர் தயான் சந்த். அந்த மூன்று ஒலிம்பிக்கிலும் அதிக கோல் அடித்தவரும், ஹாக்கி போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோலடித்தவரும் என ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி எனப் போற்றப்பட்டவர். அவரது இறுதிக்காலத்தில் ஏழ்மையில் இறந்தது ஒரு சமூகமாக நமக்கு எவ்வளவு பெரிய அவமானம்?

இன்றும் நாம் மார்க்ஸ், லெனின், சே, பாப் மார்லே, எல்விஸ் பெர்ஸ்லீ, பீலே, ஷூமாக்கர் முதல் ஃபெடரர், ரொனால்டோ, மெஸ்ஸி, பெய்பர் வரை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நம்மிடம் அவர்களுக்கு இணை சொல்ல ஒருவரும் இல்லையா? அல்லது நமது பொதுப்புத்தி வெளிநாட்டினரை மட்டும்தான் கொண்டாடுமா?

யாரென்றே தெரியாமல்தான் பலரும் பாப் மார்லே படம் போட்ட துணிகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த படம்போட்ட துணி அணிவதைக் குறைகூறவில்லை. ஆனால் அதுவே ஒரு நரேன் கார்த்திகேயனோ, சாய்னா நேவாலோ, மேரி கோமோ, ஆனந்தோ, மில்கா சிங்கோ அந்த துணியில் இருந்தால் விற்குமா? அல்லது போராட்டங்களைநும் பொதுக்கூட்டங்களையும் தவிர்த்து பாரதியையோ அல்லது அம்பேத்காரையோ  தன் துணியில் வைத்துக்கொண்டு எத்தனைபேர் கல்லூரி விழாக்களுக்கோ, கலை நிகழ்ச்சிகளுக்கோ போகிறோம்?

எப்படிப்பட்ட புரிதல் இது? நாம் எப்போதுமே நம்மை இரண்டாம் இடத்தில்தான் வைத்துக்கொள்ளப் போகிறோமா? அப்படி ஒரு தாழ்வு மனப்பாண்மை இருப்பதால்தானே நமது சர்வ வல்லமை படைத்த கிரிக்கெட் அணியால்கூட ஆஸ்திரேலியாவில் அவர்களைத் தோற்கடிக்க முடிவதில்லை.

ஒரு வித்தியாசத்தைப் பாருங்கள். வெள்ளையனுக்கு அடிமையாக இருந்தபோது அத்தனை வெள்ளையின அணிகளையும் அவர்களது ஊரில் வைத்து நமது ஹாக்கி அணியினர் தோற்கடித்தனர், வெள்ளையனை எதிர்த்து அமைதி முறையிலும் ஆயுதமேந்தியும் போராடி சுதந்திரம் வென்றோம், வெள்ளையனின் ஆட்சிக்காலத்திலேதான் அத்தனை கலாச்சாரத் தினிப்புகளையும் மீறி நமது கலாச்சார வேற்களைத் தோண்டி எடுத்தோம்! அப்போது நம்மாளும் முடியும் என்ற நம்பிக்கையும், நாம் யாருக்கும் அடிமையல்லை என்ற திமிரும் இருந்திருக்கும்தானே?

சே, ஐன்ஸ்டீன் போன்றோர் ஆளுமைகள். அவர்கள் இந்த உலகத்துக்குப் பொது. பாரதியும் ராமானுஜமும் அப்படிப்பட்டோர்தானே? அவர்களை நம்மாள் உலகத்துக்குப் பொதுவானவர்களாக அடையாளம் காட்டமுடியவில்லையே? ஏன் நம் சந்ததிகளிடமே கொண்டு சேர்க்க முடியவில்லையே?

நமக்கு நம்மீது நம்பிக்கை வரவேண்டும். நாம் செய்யும் சாதனைகளை முதலில் நாம் உணர வேண்டும். சச்சினின் சாதனைகளுக்கு ஒரு பிராட்மேன் சான்றிதழ் தரவேண்டிய அவசியமில்லை. நமக்கு அது சாதனைதான் என்ற புரிதல்வேண்டும். அப்படிப்பட்ட புரிதல் வந்தாலொழிய நாம் இந்த அடிமை மனநிலையை விட்டு வெளியே வரமாட்டோம்.

சேவும் பாரதியும் வர்க்கரீதியான அடிமைகளுக்காக மட்டும் போராடவில்லை, மனதளவில் அடிமைப்பட்டிருக்கும் நமக்கும் சேர்த்துதான் போராடினார்கள்.

Friday, 12 June 2015

INS விக்கிராந்த்

நவீன பாரதத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான INS விக்கிராந்தை உடைக்கும் பணி துவங்கிவிட்டது.

விக்கிராந்து விமானந்தாங்கி கலம் இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்தின் கடற்படைக்காக எர்குலசு என்ற பெயருடைய கப்பலாக கட்டப்பட்டது. யுத்தம் முடிவடைந்தபின் இதன் கட்டுமானப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. பாரதத்தின் விடுதலைக்குப்பின் வலிமையான கடற்படைக்கான அவசியத்தை உணர்ந்த அன்றைய அரசு இங்கிலாந்திடமிருந்து ஒரு விமானந்தாங்கி கலத்ததை வாங்க பேசியது. அதன்பின் 1961ஆம் ஆண்டு இ.க.க விக்கிராந்தாக படையில் இணைந்தது. 1

1965ஆம் ஆண்டின் யுத்தத்தின்போது விக்கிராந்து பராமரிப்பிலிருந்ததால் பாகிசுதானுக்கு மரண அடி குடுக்க நம்மால் முடியவில்லை.

ஆனால் 1971 ஆம் ஆண்டு பாரதத்தின் வீர வரலாற்றில் ஒரு மைல்கல். முப்படைகளை வைத்து ஒரு மூன்றாம் உலகநாடு ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெறமுடியும் என்று மேற்கிற்கு உணர்த்திய யுத்தம். குறிப்பாக விக்கிராந்து யுத்தத்தின் நாயகர்களில் ஒன்றானது. கிழக்குப் பாகிசுதானை உலகிலிருந்து பிரித்துவைக்கவும், பாகிசுதானிய படைகளின் நிலைகளைத் தகர்க்கவும், நமது வான்படையின் கவனத்தை மேற்கிலேயே வைத்திருக்கவும் நமக்கு ஒரு வாய்ப்பளித்தது. விக்கிராந்தை வீழ்த்த பாகிசுதானின் காசி நீர்மூழ்கி கப்பல் (அன்றைய நிலையில் அதிநவீன அமரிக்கத்தயாரிப்பு) வங்கக்கடலுக்குள் நுழைந்து விசாகப்பட்டினத்துக்கு அருகில் நிலைகொண்டது. ஆனால் நமது ஒற்றர்படையும் கடற்படையும் இணைந்து காசியை மூழ்கடித்தது மேலும் ஒரு வரலாற்று நிகழ்வு.

குறிப்பாக ஒரு நிகழ்வு நமது படைகளின் எந்த சூழலையும் சமாளிக்கும் திறனைப் பறைசாற்றும். விக்கிராந்திலிருந்து விமானங்களை ஏவ நீராவி உந்துகள் இரண்டு இருந்தன. விமானந்தாங்கிளின் ஒடுபாதை அதிக எடைகொண்ட போர்விமானங்களைச் செழுத்துமளவு நீளமானதல்ல. எனவே அவற்றிலிருந்து விமானங்களை நாம் உண்டிவில்லை வைத்து கல்லை எறிவதுபோல எறியவேண்டும். இதைத்தான் அந்த நீராவி உந்துகள் செய்யும். அதில் ஒன்றை இயக்கம் நீராவி உருளையில் உடைப்பேற்பட்டதால் அதை இயக்கமுடியவில்லை. இங்கிலாந்து பாகிசுதானுக்கு சாதகமாக இருந்ததால் அந்த உருளைக்கான மாற்றை வாங்கமுடியவில்லை. ஆனாலும் நம்மவர்கள் தயங்கிநிற்கவில்லை. பிற இயந்திரங்களுக்கான நீராவியை மடைமாற்றி உந்துகளை இயக்கினர். அதன் விளைவை பாகிசுதான் அனுபவித்தது.

விக்கிராந்திலிருந்து போர்புரிந்தோர் 2 மகாவீரச்சக்கிரம், 12 வீரச்சக்கிரப் பதக்கங்களை வென்றதும் வரலாறு.

அத்தகைய பெருமைமிகு விக்கிராந்தை உடைக்கும் பணி நேற்று மும்பையைல் துவங்கியது பலரையும் வருத்தமடையச்செய்யும் செய்தி.

தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு 2012 மார்கழியில் நான் ஒரு வின்னப்பம் செய்திருந்தேன். அதாவது மகாராட்டிர அரசு பராமரிக்கமுடியாது என கைவிட்ட விக்கிராந்தை தமிழக அரசு விலைக்கு வாங்கி மாமல்லபுர கடல்சார் அருங்காட்சியகத்தில் ஒரு மிதக்கும் உணவகம் மற்றும் தங்குவிடுதியாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தேன். ஏற்கனவே அந்த அருங்காட்சியகத்துக்கென சோவியத்திலிருந்து வாங்கப்பட்ட நீர்மூழ்கிக்கலமான  இ.க.க வக்லியை கடற்படை தந்திருக்கிறது. அதோடு விக்கிராந்தும் இணைந்திருந்தால், ஏற்கனவே உலக சுற்றுலா வரைபடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மாமல்லபுரத்தின் சுற்றுலா கவர்ச்சியை மேலும் அதிகரித்திருக்கும்.

அப்படி அதை பாதுகாக்கமுடியவில்லையென்றால் நமது ஏவுகணைகளின் தாக்குதிறனை சோதனைசெய்தறிய விக்கிராந்தை இலக்காகப் பயன்படுத்தி மூழ்கடித்திருக்கலாம். மீன்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக மீன்கள் அதிகமுள்ள கடல்பகுதியில் மூழ்கடித்திருக்கலாம். அல்லது அந்தமானுக்கருகில் மூழ்கடித்து கடலில் மூழ்கி நீர்மூழ்கு விளையாட்டுக்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். ஏவுகணைகளைக்கொண்டு மூழ்கசெய்திருந்தால் ஒரு வீரனுக்கு நடுகல் நட்டார்போல் இருந்திருக்கும்.

ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் இன்று உடைபடுகிறது ஒரு வரலாறு.