Friday, 9 May 2014

நதிநீர் இணைப்பெனும் கானல் நீரும், உள்ளூர் நீர் வழி மேம்பாடு எனும் அட்சய பாத்திரமும்..

முதல் படம்.. பாரதத்தில் நதிகளை இணைக்கும் திட்டம்...
அது தேவையற்ற, வீண் செலவு வைக்கும், பிரம்மாண்ட ஊழல்களுக்கு வித்தாகும், சூழலைக் கெடுக்கும் திட்டம்... இந்த வரைபடத்திலிருக்கும் கோடுகளை வரைந்தவருக்கு பரதகண்டத்தின் புவியியல் என்றால் என்னவென்பதே தெரியாதென நினைக்கிறேன்....
2006-2007ல் கனமழை பெய்த பொழுது காவிரியில் வீணாக கடலில் கலந்த நீரின் அளவு மட்டும் 30-40 டிஎம்சி... பவானியில் வீணாக சென்று காவிரியில் கலந்தது சுமார் 5 டிஎம்சி நீர்... இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் பருவமழை சரியாகப் பெய்யும் ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தபட்சம் 20 டிஎம்சி தண்ணீராவது கடலில் வீணாக கலக்கிறது... அந்த உபரி நீரை நாம் சேமித்தாலே தமிழகத்தில் முப்போகம் விளைவிக்க முடியும்...
பவானிசாகர் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் வீணாக காவிரியில் போய் கலந்தாலும் கலக்கும் ஆனால் பண்ணாரியிலிருந்து வடகிழக்காக மேட்டூர் வரையிலுமுள்ள பல சிறிய அணைகளுக்கோ அல்லது திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பல்லாண்டுகளாக வரண்டே கிடக்கும் பிரம்மாண்ட ஏரிகளுக்கு அந்த நீர் போகாது... இந்த நிலையில் நாம் கங்கை நீரை கொண்டு வந்து என்ன செய்யப்போகிறோம்???

அடுத்து வரும் படங்களில், பவானிசாகர் அணைக்கட்டுக்கு அருகிலிருக்கும் (அருகிலென்றால் ஒரு முப்பது கிமி க்கும் குறைவான தூரத்தில்) வரண்டே கிடக்கும் பெரிய ஏரிகள்.

முதலில் நல்லூர் ஏரி.

கோவை - சத்தியமங்கலம் சாலையில், புஞ்சைப் புளியம்பட்டி தாண்டியதும் வரும் ஊர் நல்லூர். இந்த ஊரிலிருக்கும் ஏரியானது பல்லாண்டுகளாக வரண்டே கிடக்கிறது.



இரண்டாவது, புங்கம்பள்ளி ஏரி. 

கோவை - சத்தியமங்கலம் சாலையில் நல்லூருக்கு அடுத்தபடி வரும் ஏரி... பல்லாண்டுகளாக வரண்டே கிடக்கிறது.
மூன்றாவது, அன்னூர் ஏரி. 

கோவை - சத்தி சாலையில் வரும் முதல் பெரிய ஊர். அன்னூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ஒரு பெரிய வரண்ட ஏரி இருக்கிறது... அருகிலிருக்கும் பேருந்து நிலையத்தைப் போல பல மடங்கு பெரிய ஏரி...


கடைசிப்படம், பவானிசாகரும் அந்த (2-4 படங்களில் காட்டப்பட்டிருக்கும்) ஏரிகளும் அமைந்திருக்கும் இடம்.


பவானிசாகர் அணையிலிருந்து புங்கம்பள்ளி மற்றும் நல்லூர் ஏரிகள் இருபது கிமி க்கு குறைவான தூரத்திலும், அன்னூர் ஏரி நாற்பது கிமி க்கு குறைவான தூரத்திலும் இருப்பது இந்த கூகுல் எர்த் வரைபடத்தில் தெரிகிறது.. 

இவ்வளவு அருகிலிருந்தும் இந்த மூன்று பெரிய ஏரிகளும் வரண்டே கிடப்பது எவ்வளவு பெரிய பொருளாதார இழப்பு??? எத்தனை ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கின்றன... எத்தனை ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் வரட்சியினால் தங்கள் நிலங்களை வணிகர்களுக்கு விற்றுவிட்டு நகரங்களுக்கு பெயர்ந்திருக்கும்...

ஆறு அங்குல குழாய்களை என்பது கிமி தூரத்திற்கு பதித்து இந்த ஏரிகளை நிரப்ப முடியாத நாம் கங்கையையும் காவிரியையும் இணைப்பது பற்றி பேசியும் என்னாகப்போகிறது???

இந்த ஏரிகள் நிரம்பிட வழியும் நீர் அவற்றின் கிளை வாய்க்கால்களில் பாய்ந்து இன்னும் எத்தனையோ ஏரிகளையும் குளங்களையும் நிரப்பிடும்... 

இவ்வளவு பெரிய அணையை பக்கத்தில் வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய ஏரிகளை நாம் வரல விட்டிருக்கிறோம்... ஒரு ஏரி நிரம்பினால் அதிலிருந்து பிரியும் கால்வாயில் நீரோடி அடுத்த ஏரியை நிரப்பும்.. அதிலிருந்து அடுத்தது என ஒரு தொடர் கன்னியாக இயற்கையாக இணைப்புகள் இருந்தன. அப்பா அடிக்கடி சொல்வார் அந்த இணைப்புச் சங்கிலி காவிரிக்கரை வரையிலும் நீழும் என்று...  

அந்த இயற்கையை நாசப்படுத்திவிட்டு, பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து கங்கையின் தண்ணீரை, பிம்மபுத்திராவின் தண்ணீரை காவிரிக்கும் வைகைக்கும் கொண்டு சேர்க்க துடித்துக்கொண்டிருக்கிறோம்... தண்ணீர் கொண்டு வர பிரயத்தனம் செய்கிறோம்...