நவீன உலகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் நிற்கும் அந்த ஒற்றைக்கருவியும், உற்பத்திமுறையும்.
உலகின் (அதாவது மனிதனின் வாழ்க்கையை) மாற்றியமைத்த கண்டுபிடிப்புகள் ஏராளம். கல்லை வைத்து வேட்டையாடியது, தீயை உருவாக்கியது, விதையைப்போட்டு முளைக்கவைத்தது, மண்ணை உருக்கி உலோகம் படைத்தது என நவீன மனிதகுலத்தின் வாழ்வியலை மாற்றியமைத்த கண்டுபிடிப்புகள் ஏராளம்.
கிடைப்பதை உண்டது, உடுத்தியது, உணவு தேடி இடம்பெயர்ந்தது, இயற்கையாக விதை விழுந்து முளைக்கும் வரை காத்திருந்து சேமித்தது, விதையைப்பாதுகாத்துவிளைவித்தது, காடுகளை அழித்து கழணிகள் உருவாக்கியது முதல் பாய்மரக்கலங்களில் பயணித்து நாடுகள் பிடித்தது வரை நமது உற்பத்தி முறைகள் கண்டுபிடிப்புகளின் பின்னணியில் பரிணமித்து வந்தே இருக்கின்கறன.
இப்படி நாம் கண்டுபிடித்த கருவிகளும் பரிணமித்த உற்பத்தி முறைகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதகுலத்தின் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்து அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியவை.
சரி, இன்றைய நவீன யுகத்திற்கு மனிதகுலத்தை நகர்த்திய அந்த கண்டுபிடிப்பு, உற்பத்திமுறை எதுவோ?
அந்த கண்டுபிடிப்பு, நீராவி இயந்திரம். ஆம், அதுவரை சோர்வடைந்து இடைநின்றுவிடும் (மனித மற்றும் மிருக) உடல் உழைப்பை நம்பியிருந்த போக்குவரத்தும், எந்திரங்களும் முதன்முதலில் ஒரு இடைநில்லா உந்துசக்தியைப் பெற்றன. மாதங்கள் வாரங்களாகின, வாரங்கள் நாட்களாகின, நாட்கள் மணிகளாகவும், மணிகள் நிமிடங்களாகவும் மாறிய கணம் முதல் நீராவி இயந்திரம் தனது வெப்பமூச்சை வெளிவிட்ட கணத்தில்தான். மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் வராத நேரத்தை முதன்முதலில் வேகத்தால் கடக்க முடியும் என்ற நிலை வந்தது இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகுதான்.
அந்த உற்பத்தி முறை, தொடர் ஒருங்கிணைப்பு உற்பத்தி முறை. அதாவது ஆங்கிலத்தில் Assembly Line Production. இந்த உற்பத்திமுறை புழக்கத்தில் வந்தபிறகுதான் வணிகம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது. தேவையை அடிப்படையாகக்கொண்ட வணிகம் உற்பத்தியை அடிப்படையாக்கொண்ட வணிகமாக மாறியது இதன்பின்தான். பல்லாண்டுகள் வடிவம் மாறாது புழக்கத்திலிருந்த பொருட்கள் சில ஆண்டுகளில் வடிவம் மாறவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றன. காரணம், எந்தவொரு பொருளும் திகட்டத்திகட்ட உற்பத்தி செய்து குவிக்கப்பட்டிருக்கும். தொடர் ஒருங்கிணைப்பு உற்பத்தி தொழிற்சாலைகளில் இலாபமானது தொடர் உற்பத்தியில்தான் அடங்கியிருக்கிறது. தொடர் உற்பத்தியை விற்றுத்தீர்க்க சந்தைகள், சந்தைகளில் பொருட்களைக்கொண்டு சேர்க்க போக்குவரத்து, பொருட்களை வாங்கவைக்க புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது. அதைச்சாத்தியப்படுத்த தொடர் ஆய்வுகள், வாடிக்கையாளர்களைக் கவர விளம்பரம், தக்கவைக்க விற்பனைக்குப்பின்னான சேவை என நமது உற்பத்திமுறையும் வணிகமும் மாறியது இந்த தொடர் ஒருங்கிணைப்பு உற்பத்திமுறையின் வருகைக்குப்பிறகுதான்.
இந்த தொடர் ஒருங்கிணைப்பு உற்பத்திமுறையைச் சாத்தியப்படுத்தியது அந்த நீராவி உந்து எந்திரம். அந்த நீராவி உந்து எந்திரத்தை இன்று நீரைப்பிளந்து எரிசக்தியை தூண்டுவது வரை பரிணமிக்கவைத்தது தொடர் ஒருங்கிணைப்பு உற்பத்திமுறை.
இவையே இன்றைய பெருமுதலாளித்துவத்துக்கு அடிப்படை.
-நெருப்பிளஞ்சேரன்.




