Thursday, 26 June 2014

ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா

விக்கிரமாதித்தியாவை வாங்க முடிவு செய்தது 1990களில், ஆனால் அன்றைய பொருளாதார சூழல் நம்மை அந்த கப்பலை வாங்க விடவில்லை...
ஆனால் பொருளாதாரம் வளரத்துவங்கிய காலகட்டத்தில் இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் கடற்படையின் தொலைந்துபோன காலகட்டமான 1980-2000 இருந்த பொருளாதார நெருக்கடிகளால் புதிய கப்பல்கள் வாங்காமல், பலகாலம் உழைத்து அரதப்பழசாகிப்போன கப்பல்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்த படையைத் தூக்கி நிறுத்தவும், ஏற்கனவே ஐம்பது ஆண்டுகளாக உழைத்துக்ககொண்டிருக்கும் ஐஎன்எஸ் விராத்தின் ஆயுட்காலம் முடிவுறும் தருவாயில் இருந்ததாலும் நமது விமானந்தாங்கி கப்பல் இயக்கும் நுட்பத்தை இழந்துவிடாமலிருக்கவும், விராத்தின் ஓய்வு மற்றும் உள்நாட்டில் கட்டமுடிவு செய்யப்பட்ட விமானந்தாங்கி கப்பல் படையில் இணைவதற்குமான கால இடைவெளியை இட்டுநிரப்பவும், அதே கால இடைவெளியில் படையினை அடுத்தகட்டத்திர்கு கொண்டுசெல்லும் பொருட்டும் வாங்கப்பட்டதுதான் விக்கிரமாதித்யா என்று புதுப்பெயர் பெற்ற சோவியத்தின் அட்மிரல் கோர்பசேவ். அந்தக்கப்பலின் சகோதரக் கப்பல்களில் ஒன்று உடைக்கப்பட்டுவிட்டது, இரண்டு கப்பல்கள் சீனாவில் ஆடம்பர விடுதிகளாக இருக்கின்றன..



அந்த கப்பலை ருசியா நமக்கு இலவசமாகத்தந்தது. ஆனால் நாம் அதன் புனரமைப்பிர்கு செலவு செய்யவேண்டியிருந்தது... அத்தோடும் மிக்29க ரக ஜெட் விமானங்களை வாங்கவும் செலவானது. இந்த புணரமைப்பு பற்றிய தவறான மதிப்பிடல்தான் அந்த கப்பல் பல்லாண்டுகளாக கட்டுமானதளத்தில் இருக்கவும் படையில் இணைய தாமதமானதற்கும் காரணம். உதாரணமாக அந்த கப்பலின் மின்சார மற்றும் தொலைத் தொடர்பு கேபில்களை முற்றாக மாற்றவேண்டி வந்ததது. இது பற்றிய மதிப்பீடு முதலில் செய்யப்படவில்லை. அதோடும் அந்த கப்பல் அதுவரை பல்லாண்டுகளாக வெறுமனே மிறுத்திவைக்கப்பட்டு இருந்ததால் பல இயந்திரங்கள் துருவேறி பயன்படுத்தமுடியாத நிலையிலிருந்தன. அதோடும் அந்த கப்பல் ஒரு முழுமையான விமானந்தாங்கிக் கப்பல் கிடையாது. அது ஒரு Aircraft Carrying Cruiser. அதாவது விமானங்களையும் பல்லாயிரம் கிமீ தூரம் பறந்து கப்பல்களையும் கரையிலிருக்கும் இலக்குகளையும் தாக்கும் ஏவுகணைகளையும் கொண்ட கப்பல். அந்த கப்பல் மிக்29க போன்ற சற்றுப் பெரிய போர் விமானங்களை இயக்குமாறு வடிவமைக்கப்படவில்லை. மாறாக நாம் விராத்தில் இயக்கும் Harrier போன்று குறைவான தூரம் ஓடி மேலெழும்பும், செங்குத்தாகத் தரையிறங்கவல்ல Yak38 எனும் STOVL (Short Take-Off and Vertical Landing) ரக விமானங்களை இயக்க வடிவமைக்கப்பட்டது. ஆனால் நமது தேவையோ மிக்29க ரக குறைந்ததூரம் ஓடி மேலெழும்பும், இறங்கையில் கயிற்றால் இழுக்கப்பட்டு நிறுத்தப்படும் STOBAR (Short Take-Off But Arrested Recovery) ரக விமானங்களை இயக்குவது. அதற்காக அந்த விமானத்தின் அகலம் அதிகப்படுத்தப்பட்டது, அதன் முன் பகுதியிலிருந்த ஏவுகணை எவுதளங்கள் நீக்கப்பட்டு 13 கோணம் சாய்வான நிலையிலுருக்கும் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. ஓரே ஒடுபாதை மட்டும் இருந்த நிலையில் இரண்டு ஓடுபாதைகள் அமைக்கப்பட்டன. ருசியக் கடல் பிராந்தியங்களுக்கு குளிரூட்டு அமைப்புகள் தேவைப்படாது மாறாக நமது தட்பவெப்பத்திற்கு தகுந்தார்போல் குளிரூட்டு அமைப்புகள், நமது கடல் வெப்பத்தைத் தாங்கும் வகையிலான பூச்சுக்கள் என் செய்யவேண்டிய வேலை ஒரு புதுக் கப்பலைக் கட்டுவதற்கு இணையாக இருந்தன.


இதுநாள்வரை நமது கடற்படையின் முன்கள தாக்குதல் விமானமாக இருந்த Sea Harrier விமானம் முந்தைய தலைமுறை விமானம். ஆனால் மிக் 29க நான்காம் தலமுறையைச் சார்ந்த போர் விமானம். இது நமது கடற்படையின் விமான இயக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை.. அதிகப்படியான கடற்பரப்பை நமது கடற்படையால் இந்த விமானங்களைக் கொண்டு கட்டுப்படுத்தமுடியும்.


விராத்திற்கு  இப்போது 61 வயதாகிறது. அதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகாலத்திற்குள் ஓய்வளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சியில் புதிதாகக் கட்டப்படும் விமானந்தாங்கிக் கப்பலான விக்கிராந்த் 2019 அல்லது 2022 ஆம் ஆண்டில் படையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அப்போது நமது கடற்படை இரண்டு நவீன விமானந்தாங்கிளில் 60 முன்கள போர் விமானங்களை இயக்கும் நிலையிலிருக்கும்...


தற்போதைய சூழலில் நமக்கு மேற்கு கடற் பிராந்தியத்தில்தான் விமானந்தாங்கிக் கப்பல் அவசியம். பாகிஸ்தானுடன் போர் வந்தால் அணுவாயுதத் தாக்குதல்களுக்கு முன்னதாக போரினை முடிக்க இந்த விமானந்தாங்கிகளும், படையிறக்கு கப்பல்களும் அவசியம். அப்போது நம்மால் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று பக்கங்களிலிருந்து தாக்குதல் நடத்தமுடியும். அவர்களால் தற்போதைய நிலையிலும் எதிர்காலத்திலும் நமது கடற்படையின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியவே முடியாது. கிழக்கு கடற் பிராந்தியத்தில் அணுசக்தி நீர்மூழ்கிகளும், நீர்மூழ்கி வேட்டையாடிக் கப்பல்களும் அவசியம். எனென்றால் அங்கு சீனக் கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கிகளின் நடமாட்டமும், சீனாவின் அணுவாயுத பலத்தைச் சமன்படுத்த அணுவாயுதம் தாங்கிய ஏவுகணைகளை நீர்மூழ்கிகளிலிருந்து ஏவும் வசதியைப்பெறவும் நமக்கு அத்தகைய கப்பல்கள் அவசியம். ஆனால் அதோடும் தென் சீனக்கடலில் மாறிவரும் அரசியல் மற்றும் கிழக்காசியாவிலிருக்கும் நமது வியாபாரத்தைப் பாதுகாக்கவும் நமக்கு விமானந்தாங்கிகளை நடுநாயகமாகக் கொண்ட படைக்கல அணிகள் அவசியமாகின்றன.. அதை நோக்கி ஆமை வேகத்தில் நமது கப்பல் கட்டும் தளங்கள் இயங்கிக்கொண்டும் இருக்கின்றன...


ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியாவை வாங்கியது போன்றே ஐஎன்எஸ் சக்ரா அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கியை குத்தகைக்கு வாங்கியதும் ஆரம்பம்தான்... இவை நமது கடற்படைக்கு புதிய தலைமுறை தளவாடங்களை அறிமுகப்படுத்தும்,,,, இவற்றை இயக்கி நாம் கற்கும் விசயங்கள் நாம் கட்டிக் கொண்டிருக்கும் விக்ராந் ரக விமானந்தாங்கிக் கப்பல், அரிகந்த் ரக அணுசக்தி நீர்மூழ்கிகளின் கட்டுமானத்திலும் எதிரொளிக்கும்...
இன்றைய நிலையில் விக்கிரமாதித்தியாவிற்கு நாம் செலவு செய்ததற்கு இத்தாலியிலிருந்தோ பிரான்சிலிருந்தோ புதிய விமானந்தாங்கியை வாங்கியிருக்கலாம் என்று பலர் சொல்கிறார்கள்.. ஆனால் நாம் விக்கிரமாதித்தியாவை வாங்க முடிவு செய்தபோது நம்மிடமிருந்த பொருளாதாரத்திற்கு விக்கிரமாதித்தியா மட்டும்தான் வாங்கக்கூடியதாக இருந்தது, அதோடு ருசியா மட்டும்தான் நமக்கு ஒரு விமானந்தாங்கிக் கப்பலை விற்க முன்வந்தது. 

Wednesday, 25 June 2014

விமர்சனம் : ஆல் இன் ஆல் அழகுராசா

கொஞ்சம் பழசுதான்,,, ஆனா இப்ப படிக்கவும் சிரிப்பு வரும்...

ஒரு படம் பார்க்கப் போனா, நுழைவுச் சீட்டு குடுக்குறப்பவே முன்னெச்சரிக்கை செய்யனுமா இல்லையா?? இங்கப் பாருப்பா தம்பி படம் பார்கறப்போ உனக்கு வாந்தி எடுக்கனுமுனு தோனும், தலை சுத்தி மயக்கம் வரும்.. ஏதோவொரு சமயத்துல உனக்கு கை தட்ட தோனும், ஆனா அப்ப உன் சத்தம் மட்டும் தான் பெரிசாக் கேக்கும் (அப்ப மத்தவங்க???) ஏனா மத்தவனெல்லாம் பத்தாவது நிமிடத்துல ஓடியிருப்பான் இல்லையினா ஒரு ஓரமா மயங்கி மட்டையாகியிருப்பான்.. எப்பவாவது நல்ல (உண்மையிலயே!?) நகைச்சுவைக் காட்சி ஒன்னு வரும், அப்பக் கூட அது நகைச்சுவைக் காட்சினு புரியாம சிரிக்கனுமா வேண்டாமானு தெரியாம முழிப்ப... அப்படியே உன் சுய நினைவ இழந்து உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்குன, உன்ன இந்த படத்துக்கு கூட்டியாந்த நண்பன், இடைவேளை அப்போ எதிரியா மாறியிருப்பான்... (ஆமா என் நண்பன் என்ன ஆனான்??) அவன தேடிப் பார்த்தியானா, அவன் ஏதாவது ஒரு தெருமுனையில தலை முடியெல்லாம் பிச்சிக்கிட்டு சுத்திட்டு இருப்பான்... இப்ப சொல்லு இந்த படம் பார்க்க உனக்கு சம்மதமா??

இந்த மாதிரியெல்லாம் எச்சரிக்கை செய்யனுமா இல்லையா?? தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கா இல்லையா???

கார்களுக்கான உற்பத்தி வரி குறைப்பு நியாயமானதா? அது முதலாளித்துவமில்லையா?

அந்த செய்தி முதலில்,

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=98076

இது சோசலிசமும் முதலாளித்துவம் கலந்தது. கார் விற்பனை நிகழ்ந்தால் முதலாளிகளுக்கு லாபம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த கார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு காரும் சம்பளம் தருகிறது. கார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் (பணியாளர்களில் பெரும்பாண்மையினர்) சம்பளமானது அவர்கள் எவ்வளவு மணிநேரம் பணிபுரிகிறார்கள் என்பதைப் பொருத்தே. இப்போது ஒரு வாகன உற்பத்தி நிறுவனம் மாதம் 6000 கார்களையே விற்கிறது என்று வைத்துக்கொண்டால் அந்த நிறுவனத்தின் மணிக்கு 50 கார் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையில் வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு வேலை நடந்தாலே போதும். அந்த வகையில் அங்கு பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாண்மையினருக்கு நான்கு நாட்களே வேலையிருக்கும். அதாவது மூன்று நாட்களுக்கான சம்பளம் கிடையாது. 

இப்போது விற்கபடும் பொருட்களின் விலையில் அதற்காக உற்பத்தியாளர் கட்டும் வரியும் சேர்க்கப்படுகிறது. அதாவது ஒரு காரின் உற்பத்திச்செலவு மற்றும் உற்பத்தியாளரின் லாபம் ஆகியவை சேர்ந்து 4 லட்ச ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதன் மீதான உற்பத்தி வரி 12% என்றால் அதன் விற்பனை மதிப்பு இப்போது,

உற்பத்திச்செலவு + உற்பத்தியாளர் லாபம் = 400000
உற்பத்தி வரி = பொருள் மதிப்பின் மீது 12% = 48,000.
தொழிற்சாலைக்கு வெளியே பொருளின் மதிப்பு = 4,00,000 + 48,000 = 4,48,000.

இப்போது, விற்பனையாளரின் லாபத்தையும் கணக்கில் சேர்த்தால், 

விற்பனையாளர் லாபம் = தொழிற்சாலைக்கு வெளியேயான பொருளின் மதிப்பின் மீது 10% = 44,800.

இப்போது இதையும் காரின் மதிப்போடு இணைத்தால் காரின் விற்பனை விலை வரும். இப்போது,

விற்பனை விலை = 4,92,800.

இப்போது ஒருவர் அந்த காரை வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் அவர் 4,92,000 கொடுத்து அதை வாங்க வேண்டும்.

அடுத்து அந்த வாகனத்தை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய தமிழகத்தில் சாலை வரியாக 10% கட்ட வேண்டும், அந்த காருக்கு 12,500 கொடுத்து காப்பீடு செய்யவேண்டும் மற்றும் பதிவுக்கட்டணமாக 5000 செலுத்த வேண்டும். 

இப்போது,

காரின் சாலை விலை= 492000 + 49200+12500+5000 = 558700.

இதே அந்த காரின் மீதான விற்பனை வரி 12% பதிலாக 8% ஆக இருந்தால் அந்த வாகனத்தின் சாலை விலை 5,38,000 ஆக இருக்கும். அதாவது 20000 குறைவாக இருக்கும். இது குறைவான விலையாகத் தெரியலாம். ஆனால் வாங்குபவர் அந்த காரை வாகனக்கடன் பெற்று வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் அவர் செலுத்தவேண்டிய மாதத்தவணை சற்று குறையும், வாங்குபவருக்கு அதனால் 20000 லாபமெனில் அவர் அந்த பணத்தை வைத்து வேறேதாவது பொருளைக்கூட வாங்கலாம்... அந்த பொருளின் விற்பனை வேறு சிலருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும்...

இப்போது இந்த விலை குறைவதினால் அந்த கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு மாதம் 1000 கார்கள் கூடுதலாக விற்றால் அதன் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு கூடுதலாக அரை நாளுக்கு வேலை கிடைக்கும், இதுதான் இந்த வரிகுறைப்பிற்கு பின்னிருக்கும் கணக்கு.

இலங்கையில் நமக்கு நண்பர்கள் அவசியம்!

சிங்களவர்கள் நமது எதிரிகளாக இருக்கலாம். அதற்காக நம் இனத்தவருடன் இணைந்து வாழும், அவர்களது துன்பத்தில் பங்கேற்கும் சிங்களவர்களையும் எதிர்ப்பது நியாயமற்ற, நம்மை இராசபச்ச போன்றோரின் தரத்திற்கு தாழ்த்தும் செயலாக மாறிவிடும்... அந்த நிலைக்குத் தரந்தாழ்ந்து நாம் செய்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலைகளன்றி வேறேதுமில்லை... வெற்று அரசியல் மட்டுமே செய்ய ஈழத்தைக் கைகளில் எடுத்திருக்கும் சிலருக்கும் ஓட்டுப்பொறுக்கி அரசியல் செய்பவர்களுக்கும் வித்தியாசமில்லை... அப்படி ஈழத்தை தங்களுக்கு சோறிடும்பாத்திரமாக எண்ணிக்கொண்டிருப்பவர்களை அடையாளங்கண்டு ஒதுக்கிவைப்பது நமது கடமை...
இன்றும் ஈழத்தமிழர்கள் எதிரியின் பிடியிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கு முதலில் சுதந்திரத்தை வாங்கித்தருவது நமது கடமை. அதனினும் முதன்மையானது அவர்களுக்கு சமகால இலங்கைக்குள்ளாக நண்பர்களை உருவாக்கிக் கொடுப்பது. அதன் முதல் படியாக இலங்கையின் அரச பயங்கரவாதத்தை எதிர்பவர்களுடனும், தமிழர் நலனில் அக்கரை கொண்ட, தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் சிங்களவர்களுடனும் நாம் இணைந்து செயல்படவேண்டும்... எதிரிகளை அழிப்பதை விட முதலில் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க முனையவேண்டும்... எதிரியை வீழ்த்தும் பயணத்தில் எடுத்து வைக்கவேண்டிய முதல்படி, அவனது செயல்களைக்கண்டு வருந்தும் அவனது உறவினர்களை நமது நண்பர்களாக்கிக்கொள்வதே... இலங்கையின் மீதான படையெடுப்பின் முன் இராவனனின் செயல்களுக்கு வருந்திக் கொண்டிருந்த விபீடணனை நண்பனாக்கிக் கொண்டதைப் போல (எடுத்துக்காட்டு அவ்வளவே. இராவணனை தமிழர் என்ற அடையாளத்தில் காண்பவர்கள் பொறுத்தருளவும்).
சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சிங்களர் இயக்கிய படமான With you, Without You திரைப்படத்தின் கதைச்சுருக்கம் இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரிகளில் படிக்கக் கிடைக்கிறது.

Thursday, 5 June 2014

சென்னையின் படித்த மூடர்கள்

சென்னையின் வாக்காளர்கள் உண்மையிலேயே என்னை வெட்கப்பட வைத்துவிட்டார்கள்... இன்னிலை சென்னையில் மட்டுமல்ல... பெங்களூருவிலும் இதே நிலை... பெரு நகரங்கள் தனியாக இயங்குகின்றனவா?? அவற்றின் செழுமை அந்நகராங்களின் மக்களுக்கு பணம் மட்டுமே பிரதானம் என்றஎண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறதா?? இவர்கள்தானே இங்கு எதுவும் ஒழுங்கில்லை என்று கூப்பாடு போடுகிறார்கள்... இவர்கள் தானே சிறு நகரம் மற்றும் கிராமத்தின் மக்களை காட்டான்கள் என்றும் நாட்டான்கள் என்றும் சொல்லி ஒதுக்குகிறார்கள்???

தருமபுரி தமிழகத்தின் பிந்தங்கிய பகுதிகளில் ஒன்று... அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிக்கு அந்த மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாபெரும் கடமை இருக்கிறது... இனி இறைவனிடம் வேண்டும்போது மக்களாட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தருமபுரி போன்ற ஊர்க்காரர்கள் நன்றாக இருக்க வேண்டிக்கொள்வேன்... சென்னையின் படித்த மூடர்க்கூட்டம் திருந்தட்டும்... அதுவரை என்பார்வையில் அவர்கள் பணப்பேய்கள், படித்தும் அறிவில்லாதவர்கள்...

படித்தவர்களின் அறியாமை அச்சமூட்டுகிறது

//புல்லெட் ப்ரூப் ஜாக்கெட் டன் இருந்த ஆறு இந்திய வீரர்களிடம் வெளியில் இருந்து சுடும் தீவிரவாதிகளை நீங்கள் ஆப்கான் காவல்துறை உத்தரவுக்ககவோ அல்லது நேட்டோ அமெரிக்கன் படை உத்தரவுக்ககவோ காத்து இருக்க வேண்டாம், தீவிரவாதிகளை வேட்டையாடி முடித்துவிட்டு இன்றிரவு தன்னுடன் இரவு விருந்துக்கு வாருங்கள் என உத்தரவு இட்ட ஒரு மணி நேரத்தில் அனைத்து தீவிரவாதிகளும் இந்திய ராணுவ வீரகளால் கொல்லப்பட்டு விட்டனர்.//

இப்படியொரு பொய்யை சிலர் (பாஜகவினரோ அல்லது சில விசிலடிச்சான் குஞ்சுகளோ) பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்தியாவின் எந்த பிரதமரும் இராணுவத்தினருக்கு கொடுக்க முடியாத ஒரு உத்தரவை மோடி அவர்கள் ஆப்கானத்தில் இந்திய தூதரகங்களுக்க பாதுகாப்பளிக்கும் இந்திய திபேத் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு வழங்கியதாகவும், அவர்கள் அந்த உத்தரவின்படி தூதரகத்தின் உள்ளே நுழைந்த தீவிரவாதிகளை கொன்றுவிட்டு நேற்று இரவு தில்லி வந்து பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு மோடி அவர்களுடன் விருந்து உண்டதாகவும் ஒரு பொய்யைப் பரப்புகிறார்கள்... இந்த பொய்யை ஆயிரம் பேர் விரும்புகிறார்கள் மற்றும் ஐநூறு பேர் பகிருகிறார்கள்...

இப்படி பொய்களை படித்தவர்கள் பரிசோதனை செய்யாமல் நம்புவது ஒருபக்கம் வேடிக்கையாகவும் மறுபக்கம் அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது...

எந்த பொய்யையும் மக்களிடம் எளிதாக விதைக்கமுடியும் என்பதை இப்படியான வதந்திகளின் பரவல் உறுதி செய்கிறது... கனிமொழி ஜாபர்சேட்டிடம் சொன்னது போல, 70% கேனையன்கள் எதைச்சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்பது உண்மைதான் போல...

படித்த முட்டாள்களே, உங்களை நம்பித்தான் மோடி அவர்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றும் கனாக்கண்டு கொண்டிருக்கிறார். எதைச் சொன்னாலும் உடனடியாக அதை அப்படியே நம்பாமல், வள்ளுவப் பாட்டன் சொன்னது போல,

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் குறளையும்,

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் குறளின் கருத்திற்கேற்ப எதையும் சொன்னவன் சொன்னது போல நம்பாமல் அதை ஆராய்ந்து பாருங்கள்...

கூகுலில் இந்தியத் துணைத்தூதரகத்தின் மீதான தாக்குதல் என்று தேடினாலே அது உடனடியாக பல செய்திகளுக்கான இணைப்பை வழங்கும். எந்த செய்தி நிறுவனமும் இப்படியான ஒரு செய்தியை வழங்கவில்லை என்பது தெளிவாகும்.

மாற்றுச் சிந்தனை : சாலைகளின் மீது மின் உற்பத்திக் கூரைகள்

சூரிய மின் சக்தி திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக இருக்கும் நெடுஞ்சாலைகளின் மீது அவற்றை கூரையாக அமைத்துவிடுவது பல நன்மைகளைக் கொடுக்கும். 

முதலாவது, நமது குறைந்த நிலவளத்தை பல்நோக்குப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி அதிக பலன் பெறலாம். 

இரண்டாவது, சாலைகளின் கற்களும் தாரும் அதிகப்படியான வெப்பத்தை உள்வாங்கி சுற்றுப்புரத்தைச் சூடாக்குகின்றன. கூரையாக சூரிய மின் தகடுகளை அமைக்கும்போது சுற்றுப்புரத்தின் வெப்பநிலை ஓரளவு குறையும்.

மூன்று, அதிக வெப்பம் வாகனங்களின் திரனை பாதிக்கும். இப்படி குறைந்த வெப்பநிலையில் வாகனங்கள் இயக்கப்படும்போது தேய்மானச்செலவுகளும் குறையும். பகல் நேர வெப்பத்தைக் குறைக்க வாகனங்களில் குளிர்சாதன வசதிகளின் பயன்பாட்டினைக் குறைக்கவும் அதனால் எரிபொருள் சேமிப்பிற்கு வழியேற்படுத்தவும் முடியும். அதோடு ஓட்டுனர்களுக்கு அதிக வெப்பத்தால் உடல் சோர்வு ஏற்படுவது குறைவதற்கும் வாய்ப்பு ஏற்படும். ஒரு தேசியச் சேமிப்பிற்கு வழியமைக்கலாம்.

நான்கு, நெடுஞ்சாலைகள் நாட்டை இணைப்பதால், நெடுஞ்சாலைகளின் மேல் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தை நுகர்வோருக்கு கடத்துவதும் எளிது. நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே மின்வழித்தடங்களையும் அமைக்கும்போது அதிக மின் நுகர்வு பகுதிகளான நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மின்சாரத்தை கொண்டுசேர்க்க முடியும், இது வயல்வெளிகளின் நடுவே பெரும் கம்பங்களை அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்வதை விட சிக்கனமானதாக இருக்கும்.

ஐந்து, ஒரு பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டமாக இது இருக்கும். அதிகப்படியான முதலீடும் அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிட முடியும்.

ஆறு, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை இந்த திட்டத்தால் அதிகரிக்கமுடியும்.

ஏழு, தேசிய அளவில் பொறியியல் மற்றும் ககட்டமானத்தில் ஒரு புதிய மற்றும் உதிவேகமான வளர்ச்சியை இந்த திட்டத்தில் எட்டமுடியும். இந்த திட்டம் தூண்களில் நிற்கப்போவதால் காற்றையும் வெப்பத்தையும்,, மழையையும், திடீர் வாகன மேதல் விபத்துக்களையும் தாங்கி நிற்கும் திரன்வாய்ந்த கட்டமைப்பு அவசியம். இந்த திட்டத்திற்கான முனைப்பு, திட்டமிடல், ஆய்வுகள், உறுதிப்படுத்தல் என பலவும் கட்டுமானத்ததிலும் பொறியியலிலும் பல்நோக்கு திரன்வளர்ப்பிர்கு உதவும்.

எட்டு, தற்போதிருக்கும் 17,000 கிமீ நீள நான்குவழிச்சாலைகளில் 15,000 கிமீ சாலைப்பரப்பின் மீது இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தினால் குறைந்தபட்சம் 25,000 வெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். இதுவே இப்போது திட்டமிடலிலிருக்கும் 25,000 கிமீ நான்குவழிச்சாலைகள், நான்குவழிச்சாலைகளாக மாற இருக்கும் மாநில நெடுஞ்சாலைகள் என குறைந்தபட்சம் 50,000 கிமீ பரப்பில் எதிர்காலத்தில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் குறைந்தபட்சம் 75,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். சூரிய மின்சார தொழில் நுடபம் வளரும்போது இந்த உற்பத்தியளவு அதிகரிக்கவும் செய்யும்.

ஒன்பது, சூழல் மாசுபடுவதை பெருமளவில் தடுக்க முடியும்.

இது அதிக செலவு பிடிக்கும் திட்டம். எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானவையாக இருந்திடும். இன்றை நிலையில் இப்படியான திட்டங்களை விட வரண்ட விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வதே சிறந்தது. ஆனால் அவை இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யவே பயன்படும். எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும்போது இவை போன்ற திட்டங்களை செயல்படுத்துவது முக்கியம். அப்போதுதான் நமது இடநெருக்கடியையும் நமது வாய்ப்பாக மாற்றமுடியும்.

கிரிக்கெட்டை விட்டொழித்தது நல்ல முடிவு!!!

அந்தக்காலத்துல இந்த 20-20 ஓவர் போட்டிகள புதுசா ஆரம்பிக்கப்போறாங்கனு செய்தி வந்தப்பவே கிரிக்கெட் பாக்கறதுல இருந்து நான் விருப்ப ஓய்வு எடுத்துக்கிட்டேன்... இந்த ஐபிஎல் கருமம் வந்தப்ப கிரிக்கெட்ட என் வாழ்க்கையிலயிருந்தே தூக்க முடிவு பண்ணேன்... நான் முந்திக்கிட்டேன்... இன்னைக்கு நிறையபேர் அத ஏன் பாக்கிறோம்னு வருத்தப்படுறது கேக்குது... 

அது ஒரு வீணாப்போன விளையாட்டுங்க மக்களே... அந்த சூதாட்டத்தப் பாத்து உங்க நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காம பொழைக்கப்பாருங்க...

அன்னைக்கே இந்த கிரிக்கெட் பாக்கறதுல இருந்து விருப்ப ஓய்வு எடுத்துக்கிட்டது எவ்வளவு நல்ல முடிவு!!!

இருநூறுரூபாவும் துடைக்கப்பட்ட களங்கமும்!!!

ஆனா பாருங்க.. அவங்களுக்கு எதிரா ஓட்டுப்போட்ட எல்லாரும் இருநூறு ரூபா வாங்கிட்டுத்தான் ஓட்டுப்போட்டாங்களாம்... 

நானும் அவங்களுக்கு எதிரா ஓட்டுப்போட்டவன்தான்... அப்ப நானும் இருநூறு ரூபா வாங்குனேனு வச்சுக்குவோம்... 

அடடா... இப்ப நாடு இருக்க நிலையில இருநூறுங்கறது எவ்வளவு பெரிய தொகை... அத குடுத்தா யாரு குடுத்தாங்கனு பாக்காம, அவங்க சின்னத்த மட்டும் நினைவு வச்சிக்கிட்டு பாஞ்சு போய் ஓட்டுப்போடலாம்... 

ப்படிப்பாஞ்சு போறது?? நான் பெங்களூர்ல இருக்கேன்... என் வாக்குச்சாவடி நீலகிரித்தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்துல இருக்க இக்கரைநெகமம் ஊராட்சிக்கு உட்பட்ட கெஞ்சனூர் அரசுப்பள்ளியில இருக்கு.... ஆனாலும் பாஞ்சு போய்த்தானே ஆகனும்!!! இருநூறு ரூபா குடுத்துட்டாங்களே...

இருந்த இடத்துல இருந்து அப்படியே பாய நானென்ன அனுமனா இல்ல சூப்பர்மேனா?? நான் இருநூறு ரூபாவுக்கு லாட்டரி அடிக்கிற தமிழன்ல... அதனால உடனே பெங்களூர்ல இருந்து கோயம்புத்தூருக்கு ஒரு தனியார் பேருந்துல பயனச்சீட்ட முன்பதிவு பண்றேன்... விலை 400ரூபா... கோயம்புத்தூருல இருந்து சத்திக்கு அரசுப்பேருந்து... விலை முப்பது ரூபா... இதுல வயித்துக்கடுப்பு வேற... இடையில மூனு வாட்டி...

வீட்டுக்குப்போயி கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு (நான் இருநூறுக்கு வக்கத்த தமிழன்... உடம்பு அவ்வளவு ஊக்கமாயில்ல) சாப்பிட்டுட்டு (அன்னைக்கு வரைக்கும் அப்படி ஒரு சாப்பாட எங்க வீட்டுல யாரும் சாப்பிடல, அன்னைக்குத்தான் எல்லாரும் இருநூறு ரூபா வாங்கிருப்போம்ல) குடும்பமே போய் ஓட்டுப்போட்டோம்...

யாருக்குப்போட்டோம் அப்படிங்கறத விட, யாருக்கு எதிராப்போட்டோம்னு கேளுங்க... நாங்க என்னதான் இருநூறுக்கே வக்கத்த தமிழனா இருந்தாலும் தமிழினத்த சார்ந்த ஒருத்தர், பெரும் புரட்சியெல்லாம் பண்ணி 176000,00,00,000 ரூபாவ (சத்தியமா அது இருநூறு ரூபாவ விட பெரிய தொகைதான்) இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நட்டப்படுத்தி, உலக வரலாற்றுலையே (வெள்ளக்காரன் நம்மகிட்ட தோத்தது இந்த ஒரே ஒரு விசயத்துலதானு சொன்னாங்க) இப்படியொரு புரட்சி நடந்ததில்லை, நடக்கப்போறதில்லைனு சொல்ற மாதிரி ஒரு பிரம்மாண்டப் புரட்சி செஞ்சவருக்கு எதிராத்தான் சத்தியமா ஓட்டுப்போட்டோம்....

அதெப்படிங்க??? 176000,00,00,000 புரட்சிபண்ணிட்டு இருநூறுக்கு வக்கத்த தமிழனுங்க மத்தியில அவரு போட்டியிடலாம்??? எங்களுக்கெல்லாம் அதுல பங்கா தலைக்கு ஒரு இருநூறு குடுத்திருந்தா அவருக்கு போட்டிருக்கமாட்டோமா??? இந்த மாதிரி எங்களுக்குப் பங்கு கொடுக்காம அவரு மறுபடியும் தன் சாதனைய தானே முறியடிச்சுட்டாருனா??? அதனாலதான் அவருக்ககு எதிரா ஓட்டுப்போட்டோம்...

ஓட்டுப்போட்டாச்சு... வீடே பஞ்சத்துல இருந்து விடுபட்டுடுச்சு, இருநூறு வாங்கியாச்சுல!!! இனி பெங்களூருக்கு போகனும்ல... அதுக்கும் ஒரு தனியார் பேருந்துல முன்பதிவு... இப்ப குளு குளுனு குளிர்சாதன வசதிகொண்ட பேருந்து... அதுக்கு செலவு 600!! பெங்களூர் போயாச்சு... அங்கயிருந்து தங்கியிருக்க இடத்துக்குப்போக பயனச்செலவு 60... ஆக மொத்த செலவு 400+30+600+60=1090ரூபா... ஆனாப்பாருங்க, 200>1090!!! இதுதான் அவங்க கணக்கு...

ஆனா இருநூறு வாங்கியிருந்தாக்கூட வராத மகிழ்ச்சி, அவரு தோத்துட்டாருனு செய்தி பாத்தப்போ வந்துச்சு... எங்க தொகுதிதான் பாரதத்துக்கு 176000,00,00,000 நட்டப்படுத்துன தொகுதிங்கற அவச்சொல்ல இருநூறுரூபா கூலி வாங்கி இப்ப துடைச்சிருக்கோம்... !!!