நவீன பாரதத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான INS விக்கிராந்தை உடைக்கும் பணி துவங்கிவிட்டது.
விக்கிராந்து விமானந்தாங்கி கலம் இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்தின் கடற்படைக்காக எர்குலசு என்ற பெயருடைய கப்பலாக கட்டப்பட்டது. யுத்தம் முடிவடைந்தபின் இதன் கட்டுமானப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. பாரதத்தின் விடுதலைக்குப்பின் வலிமையான கடற்படைக்கான அவசியத்தை உணர்ந்த அன்றைய அரசு இங்கிலாந்திடமிருந்து ஒரு விமானந்தாங்கி கலத்ததை வாங்க பேசியது. அதன்பின் 1961ஆம் ஆண்டு இ.க.க விக்கிராந்தாக படையில் இணைந்தது. 1
1965ஆம் ஆண்டின் யுத்தத்தின்போது விக்கிராந்து பராமரிப்பிலிருந்ததால் பாகிசுதானுக்கு மரண அடி குடுக்க நம்மால் முடியவில்லை.
ஆனால் 1971 ஆம் ஆண்டு பாரதத்தின் வீர வரலாற்றில் ஒரு மைல்கல். முப்படைகளை வைத்து ஒரு மூன்றாம் உலகநாடு ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெறமுடியும் என்று மேற்கிற்கு உணர்த்திய யுத்தம். குறிப்பாக விக்கிராந்து யுத்தத்தின் நாயகர்களில் ஒன்றானது. கிழக்குப் பாகிசுதானை உலகிலிருந்து பிரித்துவைக்கவும், பாகிசுதானிய படைகளின் நிலைகளைத் தகர்க்கவும், நமது வான்படையின் கவனத்தை மேற்கிலேயே வைத்திருக்கவும் நமக்கு ஒரு வாய்ப்பளித்தது. விக்கிராந்தை வீழ்த்த பாகிசுதானின் காசி நீர்மூழ்கி கப்பல் (அன்றைய நிலையில் அதிநவீன அமரிக்கத்தயாரிப்பு) வங்கக்கடலுக்குள் நுழைந்து விசாகப்பட்டினத்துக்கு அருகில் நிலைகொண்டது. ஆனால் நமது ஒற்றர்படையும் கடற்படையும் இணைந்து காசியை மூழ்கடித்தது மேலும் ஒரு வரலாற்று நிகழ்வு.
குறிப்பாக ஒரு நிகழ்வு நமது படைகளின் எந்த சூழலையும் சமாளிக்கும் திறனைப் பறைசாற்றும். விக்கிராந்திலிருந்து விமானங்களை ஏவ நீராவி உந்துகள் இரண்டு இருந்தன. விமானந்தாங்கிளின் ஒடுபாதை அதிக எடைகொண்ட போர்விமானங்களைச் செழுத்துமளவு நீளமானதல்ல. எனவே அவற்றிலிருந்து விமானங்களை நாம் உண்டிவில்லை வைத்து கல்லை எறிவதுபோல எறியவேண்டும். இதைத்தான் அந்த நீராவி உந்துகள் செய்யும். அதில் ஒன்றை இயக்கம் நீராவி உருளையில் உடைப்பேற்பட்டதால் அதை இயக்கமுடியவில்லை. இங்கிலாந்து பாகிசுதானுக்கு சாதகமாக இருந்ததால் அந்த உருளைக்கான மாற்றை வாங்கமுடியவில்லை. ஆனாலும் நம்மவர்கள் தயங்கிநிற்கவில்லை. பிற இயந்திரங்களுக்கான நீராவியை மடைமாற்றி உந்துகளை இயக்கினர். அதன் விளைவை பாகிசுதான் அனுபவித்தது.
விக்கிராந்திலிருந்து போர்புரிந்தோர் 2 மகாவீரச்சக்கிரம், 12 வீரச்சக்கிரப் பதக்கங்களை வென்றதும் வரலாறு.
அத்தகைய பெருமைமிகு விக்கிராந்தை உடைக்கும் பணி நேற்று மும்பையைல் துவங்கியது பலரையும் வருத்தமடையச்செய்யும் செய்தி.
தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு 2012 மார்கழியில் நான் ஒரு வின்னப்பம் செய்திருந்தேன். அதாவது மகாராட்டிர அரசு பராமரிக்கமுடியாது என கைவிட்ட விக்கிராந்தை தமிழக அரசு விலைக்கு வாங்கி மாமல்லபுர கடல்சார் அருங்காட்சியகத்தில் ஒரு மிதக்கும் உணவகம் மற்றும் தங்குவிடுதியாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தேன். ஏற்கனவே அந்த அருங்காட்சியகத்துக்கென சோவியத்திலிருந்து வாங்கப்பட்ட நீர்மூழ்கிக்கலமான இ.க.க வக்லியை கடற்படை தந்திருக்கிறது. அதோடு விக்கிராந்தும் இணைந்திருந்தால், ஏற்கனவே உலக சுற்றுலா வரைபடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மாமல்லபுரத்தின் சுற்றுலா கவர்ச்சியை மேலும் அதிகரித்திருக்கும்.
அப்படி அதை பாதுகாக்கமுடியவில்லையென்றால் நமது ஏவுகணைகளின் தாக்குதிறனை சோதனைசெய்தறிய விக்கிராந்தை இலக்காகப் பயன்படுத்தி மூழ்கடித்திருக்கலாம். மீன்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக மீன்கள் அதிகமுள்ள கடல்பகுதியில் மூழ்கடித்திருக்கலாம். அல்லது அந்தமானுக்கருகில் மூழ்கடித்து கடலில் மூழ்கி நீர்மூழ்கு விளையாட்டுக்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். ஏவுகணைகளைக்கொண்டு மூழ்கசெய்திருந்தால் ஒரு வீரனுக்கு நடுகல் நட்டார்போல் இருந்திருக்கும்.
ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் இன்று உடைபடுகிறது ஒரு வரலாறு.
No comments:
Post a Comment