என் வாழ்கையில் எனது நிலை கண்டு மிக மிக வருத்தப்பட்டது என்று ஒரு நாள் இருக்கிறது.
முதல் செமஸ்டரில் மொத்தம் பத்து பாடங்கள். கல்லூரியில் பாடங்களை சூலை மாதம் ஆரம்பித்திருந்தார்கள்... ஆனால் நானோ பொறியியல் வேண்டாம் என்றிருந்ததால் அக்டோபர் வரை கல்லூரிக்குப் போவதா வேண்டாமா என்று வீட்டில் வழக்காடிக் கொண்டிருந்தோம்... பிறகு வீட்டில் அறப்போர் தீவிரமடைந்ததால் பொறியியல் படிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்...
கடுப்பில் சுற்றியதால் மீதமிருந்த இரண்டு மாதங்கள் போன சுவடு தெரியாமல் பரிட்சையும் வந்தது... இருந்த கடுப்பில் பரிட்சையும் வந்த சுவடு தெரியமல் போய்விட்டது...
அந்த நாளும் வந்தது... தேர்வு முடிவுகளும் வந்தன... பத்தில் எழுதியது எட்டு மட்டம் போட்டது இரண்டு... எழுதிய எட்டில் நான்கு ஊத்திக்கொள்ள மொத்தம் ஆறு அரியர்கள் கிடைத்தன.. இதனாலெல்லாம் மனம் வருந்தவில்லை.. மகிழ்ச்சியாகவே இருந்தேன்.. அப்பாடா இத வச்சே பொறியியலுக்கு முழுக்குப் போட்டுடலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டே அடுத்தநாள் கல்லூரிக்குப் போனேன்..
நம்மவர்களின் பழக்கங்களில் மிகச்சிறந்த பழக்கம் நமக்கு ஒரு கண் போயிருக்கலாம் ஆனால் அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போயிருக்க வேண்டும் என்பதுதான்... அவனவன் தான் வைத்திருக்கும் அரியர்களைவிட அதிகமாக யாராவது வைத்திருக்கிறார்களா என்பதில் குறியாக இருந்திருப்பார்கள் போல...
நான் உள்ளே நுழைந்ததும் அவன் வந்தான்.. வந்தவன் என்னைத் தழுவிக்கொண்டு "மச்சி உனக்கு ஆறு அரியர் மச்சி!!! அப்பாடா எனக்கு துணையா நீயிருக்க!!! இப்படியே கடைசிவரைக்கும் உனக்கு நான் எனக்கு நீனு துணையா இருக்கனும்... அடுத்த செமஸ்டர்ல பாசாயிடாதடா" என்றான்...
அப்பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது... எல்லாரும் சேர்ந்து என்னை எந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறார்கள் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்... சில நிமிடம் பேச்சற்று நின்றுவிட்டேன்... அவனோ மேலும் "இதுக்கே இப்படி வருத்தப்பட்டா எப்படி மச்சி? இன்னும் எவ்வளவோ செமஸ்டர் இருக்கு எத்தனையோ அரியர் வைக்க வேண்டியிருக்கு... நானிருக்கேன் உனக்கு" என்று சொல்லிவிட்டு அடுத்து யார அரியர் அதிகம் வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கப் போய்விட்டான்...
என் வாழ்நாளில் என்றுமில்லாது நான் அன்று அடைந்த அந்த நிலை!!! அப்பப்பா!!! அதற்கும் பிறகு கலங்காமல் நின்றதுதான் உண்மையான ஜென் நிலை!!! இன்று நினைத்தாலும் என்னைப் பார்த்து நானே விழுந்து விழுந்து சிரித்துக்கொள்வேன்...
No comments:
Post a Comment