Wednesday, 10 June 2015

மரங்களும் குளிர்ச்சியும் இன்னபிற நற்பயன்களும்...

பெங்களூருவுக்குள் நுழயும்போதே  குளிர் நம்மைத்தாக்கும்.. கருநாடக மாநிலத்துக்கே அது பொருந்தும்... மைசூருவிலிருந்து சாமராஜநகரம் - திம்பம் வழியாக வருவோர், பெங்களூருவிலிருந்து பாகளூர் வழியாகவோ, அத்திபள்ளி - ஓசூர் வழியாகவோ வருவோரும் கருநாடக எல்லையைத் தாண்டியவுடன் தமிழகத்தின் சுடுகாற்று பட்டு குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியே வருவது போன்ற ஒரு உணர்வுக்கு ஆட்படுவர்...

அதேபோல, குமுளியிலிருந்து வருவோர் தேனி தாண்டியவுடனும், உதகையிலிருந்து வருவோர் கோத்தகிரியிலிருந்து கீழிறங்கும் போது கடைசி சில சுற்றுக்களை அடையும்போதும் அந்த உணர்வுக்கு ஆட்படுவர்

அதே போன்றதொரு உணர்வு இன்று சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியைக் கடக்கும்போது எனக்கு உண்டானது... அந்த கல்லூரியைச்சுற்றி அடர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கள் சுற்றுப்புற வெப்பத்தின் மீது ஒரு குளிர்சாதனப்பெட்டியின் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன...

கருநாடகத்தில் தோட்டமோட்ட இடம்பார்க்க சில நாட்கள் சுற்றிவந்த என் தம்பி இதைச் சொன்னான், "அந்த ஊருக்காரங்க நம்மாளுங்க தோட்டம் எதுனு பாத்தவுடனே சொல்லிடுவாங்க... எங்கள தன்னோட தோட்டத்த சுத்திக்காட்ட கூட்டிப்போனவரு, வழியில இருந்த தோட்டங்கள இது எங்காளுங்க தோட்டம், இது தமிழ்நாட்டுக்காரங்க தோட்டம்னு சொல்லிட்டு வந்தாரு.. எப்படி சொல்றீங்கனு கேட்டோம். அவரு, அதெல்லாம் ஒரு பெரிய விசயமில்லீங்க... எங்காளுங்க நடு வயல்ல மரமிருந்தாலும் அத சுத்திதான் விதைப்பாங்க... உங்க ஆளுங்க வேலியில இருக்க மரத்தையும் வெட்டிட்டுத்தான் அடுத்த வேலையே பாப்பாங்கனு சொன்னார்... "

நாம் அப்படித்தான் இருக்கிறோம்... எமது வீட்டின் முன்னே இருக்கும் வேப்ப மரத்தை "வாசல் முழுசும் இலை விழுந்து குப்பையாகிடுது, அத வெட்டிடிடலாம்னு அப்பாவும் அம்மாவும் முடிவு பண்ணப்போ, என் அக்கா அழுது அடம்பிடித்ததால் வாசலின் மீது நீண்டிருந்த ஒரு வாதை மட்டும் வெட்டிவிட்டு மரத்தை விட்டுவிட்டனர்"..அதே பெங்களூருவில் மரங்களை வெட்டாமல் அவற்றுக்கு இடம்விட்டு மதில் கட்டுவோரை பார்த்திருக்கிறேன்...

சென்னை வண்டலூரில் ஒரு புதிய பேருந்து நிலையம் கட்டுவதாக முன்னாள் முதல்வர் சட்டமன்றத்தில் "110" விதியின்கீழ் ஒரு அறிவிப்பு வெளியிட்டவுடன் அந்த திட்டம் அமையும் பகுதியிலிருக்கும் சுமார் நாற்பது பெரிய மரங்களை வெட்டினர்.. அந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானங்கூட இன்னும் ஆரம்பிக்கவில்லையாமே?? சத்தியிலிருந்து கோபி செல்லும் சாலையிலிருந்த, என் அப்பாவின் வயதுடைய பல மரங்களை காரணமேயின்றி சமீபத்தில் வெட்டினர்... அதேபோல் நான் பவானி-சேலம் சாலையில் குமாரபாலையத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தங்க நாற்கர திட்டத்தின் கிளைத்திட்டமான வடக்கு தெற்கு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திட்டத்துக்காக அந்த நெடுஞ்சாலையின் ஓரத்திலிருந்த அத்தனை பெரிய மரங்களை வெட்டிப்போட்டனர்... அதுவரை பசுமையாக, நல்ல நிழலுடனிருந்தது அந்த சாலை.. இப்போதோ பாலைவனத்தின் நடுவே பயணிப்பது போன்ற ஒரு உணர்வே வருகிறது... அம்மாம்பெரிய மரங்களை வெட்டிவிட்டு இன்று துக்கிளியூண்டிருக்கும் அரளி செடிகளை வளர்த்துவருகிறோம்... அந்த வழியில் சங்ககிரி, இந்தியன் சிமன்ட் ஆலை ஆகிய பகுதிகளிலிருக்கும் பழைய நெடுஞ்சாலை தடத்தில் அப்பொழுது வெட்டுப்படாமல் தப்பிய மரங்களைக் காணலாம்...

மரங்கள் மழையை மட்டும் தருவதில்லை... நிழல் தருவது, குளிர் தருவது, வியர்வையை தடுத்து உடலில் சத்து விரையத்தை குறைப்பது, வாகனங்களில் வெப்பத்தினால் ஏற்படும் தேய்மானத்தை குறைப்பது என பல உப செயல்களிலும் ஈடுபடுகின்றன...

மரம் வளர்ப்போம்... பயன் பல பெருவோம்...

No comments:

Post a Comment