நாம் நமது தேவைகளை ஈடுசெய்யமுடியாத பொது நிறுவனங்களைத் தனியாருக்கு தந்து அவை நன்றாக இயங்குமா என்று சோதிக்கப்போகிறோமா அல்லது அந்த நிறுவனங்களை செம்மைப்படுத்தி, அவற்றால் நம்மக்களுக்கு நன்மைகளை விளைவிக்கப்போகிறோமா? பிரச்சினை என்பதற்காக தற்கொலை செய்வதற்குச் சமம் தனியார்மயம். அரசே நடத்தும்போது அந்த நிறுவனங்கள் மக்களுக்குச் சேவை செய்யவே.
அவை இலாபம் தரும் நிறுவனங்களாக இருப்பதைவிட, மக்களுக்கு மக்களின் பணத்தில் நன்மை விளைவிப்பவையாக இருக்கவேண்டும். அதாவது தொடர்வண்டி அமைப்பு தனது அன்றாட பணிகளுக்கும், தொழிலாளர் ஊதியத்துக்கும், சொத்து நிர்வாகத்துக்கும், விரிவாக்கத்துக்கும், கணிக்கமுடியாத சூழ்நிலைகளுக்கும் மட்டும் பயனாளிகளிடம் வசூலித்தால் போதுமானது. மாறாக அது தனியாரிடமிருக்கும்போது அதில் முதலீடு செயதவர்களுக்கு இலாபம் சம்பாதித்துத்தரவேண்டும்.
எடுத்துக்காட்டாக பிரட்டனில் தனியாரால் இயக்கப்படும் குடிநீர் வழங்கும், மின்வழங்கும், தொடர்வண்டி இயக்கும் நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு வருடத்துக்கு வட்டி மற்றும் ஈவுத்தொகையாக 12.7 பில்லியன் பவுண்டு (1,27,000 கோடி ரூபாய்) வழங்குகின்றன. இந்தபணம் வாடிக்கையாளரிடம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இந்திய தொடர்வண்டி கழகம் உலகின் முன்னணி வோலைவாய்பு வழங்கு நிறுவனம். தோராயமாக பதிமூனுலச்சம் பேர் பணிபுரிகின்றனர். தனியாருக்கு விற்பதற்கு முன்வைக்கப்படும் முக்கியமான காரணங்கள் மேம்படுத்தப்பட்ட சேவை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம். ஆனால் இந்திய மக்கள் தொகையில் ஆயிரம்பேரில் ஒருவருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் நிறுவனத்தில் தனியாரால் மேலும் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கவிடமுடியும்?
சேவைகளை அரசு இயக்கும் நிறுவனங்களால் மேம்படுத்தமுடியாது என்பது ஏற்கமுடியாத வாதம். அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும். இந்திய அரசின் நிர்வாகத்துக்காக தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் இந்தியாவின் தலைசிறந்த அறிவாளிகளாவர். அவர்களை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்கமுடியாது என்பது எந்தவகை வாதம்?
சீனாவால் தனது அரசு தொடர்வண்டி நிறுவனத்தை வைத்துக்கொண்டு உலகின் மிகநீளமான அதிவேக இருப்புப்பாதை அமைப்பை குறுகியகாலத்துக்குள் அமைக்கமுடியும்போது நம்மாள் இருக்கும் தொடர்வண்டியமைப்பை மேம்படுத்தமுடியாது என்பது வேடிக்கையாக இருக்கிறது.
பாரதப் பிரதமர் தொடர்வண்டி நிலையங்களைத் தனியார் மையமாக்குவது குறித்து பேசியிருக்கிறார். அது அந்த நிலையங்களைப் பயன்படுத்தும் மக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் என்று தெரிவித்தார். அதோடும் தொடர்வண்டி சேவையைப்பயன்படுத்துபவரில் பெரும்பாண்மையினர் ஏழைகள் என்றும் தெரிவித்தார். சரி. இப்போது அரசே அவற்றை நடத்தும்போது சேவைகள் குறைபாடாக் இருந்தாலும் எல்லாரும் பயன்படுத்துமளவு குறைந்த கட்டணத்தில் அவை இயங்குகின்றன. தனியாரிடம் போகும்போது அவர்கள் இலாப நோக்கில் அவற்றை நடத்தும்போது ஏழைகளுக்கு அது சுமையாகிவிடுமே?
தொடரவண்டி அமைப்பின் சொத்துக்கள் பயன் தராமல் இருக்கின்றன. குறிப்பாக நிலம் பெரும்பாலும் வீணாகக் கிடக்கிறது என்பதும் அவரது பேச்சில் வெளிப்பட்ட உண்மை. உண்மைதான். பல்லாயிரம் கிமீ நீளமுள்ள இருப்புப்பாதைகளின் இருபுறமும் பல லச்சம் ஏக்கர் நிலம் பயன்படாமல் கிடக்கிறது. இருப்புப்பாதைகளில் இரயில் கடந்த பிறகு அவையும் காற்றுவாங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கு நாம் தனியார்மயம் என்பதை விட வேறு வழிகளைக் கண்டறியவேண்டும். என்னைக்கேட்டால் இருப்புப்பாதைகளின்மேல் சூரிய மின்னுர்பத்தி தகடுகளை அமைக்கலாம். இது தொடர்வண்டி நிறுவனத்தின் எரிபொருள் தேவையை பெருமளவு குறைப்பதுடன் உபரி மின்சாரத்தை விற்பதன் வழியே மேலும் வருமானம் கிடைக்கும். இருப்புப்பாதைகளின் இருபுரமும் உள்ள காலிநிலங்களில் விறகு தரும் மரங்களை நடுவது, காகிதக் கூழ் உற்பத்திக்கு ஏற்ற மரங்களை நடுவது, விவசாயிகளுக்கு வருட குத்தகைக்கு ஏலத்தில் விடுவது, நகரங்களில் கட்டிடங்களைக் கட்டி வர்த்தக்நோக்கில் வாடகைக்கு விடுவது ஆகியனவற்றைச் செய்யலாம்.
தொழில்நுட்பங்கள் மேம்படுவதில்லை என்பது அடுத்த குற்றச்சாட்டு. ஆனால் இதிலிருக்கும் முரன் பெரிது. செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பமுடிந்த விஞ்ஞானிகள் நம்மிடமிருக்கிறார்கள். அணுவாயுதங்களிலிருந்து, டாங்கிகள், தானியங்கித் துப்பாக்கிகள் வரை நாம் உருவாக்கியுள்ளோம். தொடர்வண்டி அமைப்பை மேம்படுத்த அரசு ஒரு தொழில்நுட்பக் கொள்கையை முதலில் அறிவிக்கவேண்டும். வண்டிகளிலேயே கழிவுகளைச் சேமிப்பது, அவற்றை பாதுகாப்பாக அகற்றி மக்கச்செய்வது முதல் அதிவேக மற்றும் சிக்கனமாக இயங்கும் மின்சார உந்துகளைக்கொண்ட நவீன வண்டிகளை உருவாக்குவது, அதிக பாரம் சுமக்கும் வகையிலான வடிவமைப்புகள், விண்வெளியாய்வு மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆய்வகங்கள் உருவாக்கியுள்ள "குறைவான எடை - அதிக திரன்" செயற்கையிழை தகடுகளைத் தொடர்வண்டிகளை கட்டும்போது பயன்படுத்துவது, விபத்துகளைத் தடுப்பது, ஆளில்லா சாலை-இருப்புப்பாதை சந்திப்புகளை தானியங்கிகளாக்குவது, இருக்கைகளை மக்களின் உடலுக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பது வரை அனைத்துத் துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவதற்கு ஒரு தேசியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தேவையான ஆய்வகங்களை உருவாக்குவது, தொழிற்சாலைகளை மேம்படுத்துவது, பல்கலைக்கழகங்களை அமைப்பது, இருக்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வகங்களின் திரன்களை பயன்படுத்துவது என செய்ல்பட்டு அடுத்த பத்தாண்டுகளில் தொடர்வண்டித் துறையை ஒரு நவீனமான, பாதுகாப்பான, எல்லாரும் பயன்படுத்தும் நட்டம் ஏற்படுத்தாத அமைப்பாக மாற்ற முயலலாம்.
அரசே நடத்தும்போது இவற்றில் ஊழல் நடக்கும். அந்த ஊழலைக் கட்டுப்படுத்தத்தான் அரசு. அந்த அரசை வழிநடத்தத்தான் நாம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம்.
பின்குறிப்பு : இந்திய தொடர்வண்டி கழகம் 2012-13 ஆம் நிதியாண்டில் இலாபமாக பதிமூனாயிரம் கோடி ரூபாய் ஈட்டியிருக்கிறது அரசுக்கு இலாபத்தில் ஈவுத்தொகையாக 5300 கோடிரூபாயை வழங்கியிருக்கிறது.
No comments:
Post a Comment