ஒரு நண்பர் ஆண்களின் பொது அறிவுத்திறன் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தார்...
அதைப்படித்ததும் எனது கல்லூரி நாட்கள் நினைவு வந்தது... முதலாமாண்டில் எங்கள் துறையில் நடந்த அகில இந்திய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கின் ஒரு பகுதியாக பொது அறிவுப் போட்டி ஒன்றையும் நடத்தினார்கள்... சரி நாம் கலந்து கொள்ளலாம் என்று நண்பர்களுடன் போனேன்...
அங்கிருந்த மூன்றாமாண்டு அண்ணன்களிடம் இதில் கலந்துகொள்ள என்ன செய்யவேண்டும் என்றபோது, அவர்கள் "நீங்க எந்த கல்லூரி" என்று கேட்டனர்.. இதே கல்லூரிதான், இயந்திரவியல் முதலாமாண்டு என்றவுடன், நக்கலாகப் பார்த்துவிட்டு, "தம்பி இது நாம நடத்துறோம். அதனால நீ கலந்துகொள்ள முடியாது. அரங்கத்துல போய் உக்காருங்க. போட்டியாளர்கள் சரியான பதில் சொல்லலனா பார்வையாளர்களுக்கு அந்த கேள்வி வரும் அப்ப சரியா பதில் சொன்னீங்கனா உங்களுக்கு மிட்டாய் குடுப்போம். அத உங்களுக்குள்ள சண்டை போடாம சாப்பிட்டுக்கனும்! புரியுதா" என்று எகத்தாலமாகப் பதில் சொன்னார்கள்...
சரி என்ன பெரிய பொது அறிவுப்போட்டி நடத்துறாங்கனு பாக்கலாம்னு நாங்களும் போனோம்... கடைசி வரிசேயில் அமர்ந்துகொண்டோம்.. போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் கேள்வி பாசாகி பார்வையாளர்களுக்கு வந்தது.. பதில் சொன்னேன்.. மேடைக்கு அருகில் வந்து மிட்டாயை வாங்கிக்கொள்ள சொன்னார்கள்... அடுத்தடுத்து மூன்று கேள்விகள் பாசாகவும் அதற்கு நான் பதிலளிக்கவும் செய்தேன். நான்காவது முறையாக மிட்டாய் வாங்க எழுந்தபோது துறைத்தலைவர் ஒலிப்பெருக்கியில் "தம்பி நடந்து கஷ்டப்படாதே. நீ எத்தன மிட்டாய் ஜெயிக்கிறையோ அத்தனையையும் நான் வாங்கி வச்சிருந்து போட்டி முடிஞ்சவுடனே தரேன்" என்றார். பின்னர் மைக்கை பின்வரிசைக்கு அனுப்பி உன் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்துகொள் என்றனர். நானும் கம்பீரமாக "Nirranj Prabhu M, first mech" என்றேன். அப்பொழுது எழுந்த ஆரவாரமும் விசிலும் இன்றும் எனக்கு புல்லரிக்க வைத்திடும்...
கடைசியாகப் போட்டி முடிந்தபோது கிட்டத்தட்ட பன்னிரண்டு மிட்டாய்கள் வென்றதாக நியாபகம்... நண்பர்கள் அனைவரும் அடித்துக்கொள்ளாமல் ஆளுக்கு ஒன்றாக சாப்பிட்டோம்...
இரண்டாமாண்டு படிக்கையிலோ மூன்றாமாண்டு படிக்கையிலோ கல்லூரி அளவிலான பொது அறிவுப்போட்டியை டெக்ஸ்டைல் துறையினர் நடத்தினர்.. அவர்களுக்கும் எங்களுக்கும் எப்பொழுதும் வாய்க்கால் தகராறு நடப்பது வழக்கம்... உள்ளே நுழையும்போது ஒரு விரிவுரையாளர் பெயர், துறை, வருடம் ஆகிய தகவல்களை வாங்கிக்கொண்டிருந்தார்.. இயந்திரவியல் என்றதும் ஏறஇறங்கப் பார்த்துவிட்டு, "தம்பி இது பொது அறிவுப்போட்டி" என்றார். ஆமாங்க அதுக்குத்தாங்க வந்துருக்கோம் என்றோம்.. "அறுபது கேள்வி இருக்கும். அதிகமான கேள்விகளுக்கு சரியான பதில் எழுதர முதல் ஆறு அணி அடுத்த கட்டத்துக்குப் போகும். நீங்க என்ன பண்றீங்கனு பார்ப்போம். உள்ள போய் உக்காருங்க" என்று சற்று நக்கலான தொனியில் சொன்னார்... சரி அதையும் பார்ப்போமே என்று உள்ளே போனோம்... அறுபதில் ஐம்பதோ ஐம்பத்திரண்டோ சரியானது. இரண்டாமிடத்தில் இருந்த அணி இருபத்தெட்டு மதிப்பெண் பெற்றார்கள் என நினைக்கிறேன்... முதல் சுற்றின் முடிவை அறிவிக்கையில் அந்த ஆசிரியர் அளவில்லா ஆச்சரியத்தை முகத்தில் வைத்தபடி கைகொடுத்தார்...
அதேபோல் கல்லூரி முடிப்பதற்குள் இன்னும் எத்தனையோ போட்டிகள், எத்தனையோ வெற்றிகள்... அதெல்லாம் பன்னிரண்டாம் வகுப்புவரை நூலகங்களிலும், கையில் கிடைத்ததையெல்லாம் படித்ததாலும் சாத்தியமானது...
சிறுவயதிலிருந்தே காலையில் எழுந்ததும் செய்தித்தாள் வாசித்துவிடுவேன்... எங்கள் வீட்டில் வறுமையின் காரணமாக செய்தித்தாளை நிறுத்தியபோது அதிகாலையிலேயே எழுந்து பக்கத்துவீட்டுக்கு செய்தித்தாள் போடுபவர் வரும் முன்னே வாசலில் நின்றுகொண்டிருப்பேன்.. பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு என் ஆர்வம் புரிந்தபடியால் சிறுவர் மலரை எனக்கு தந்துவிடுவார்கள்... ஒருமுறை ஊருக்கு வந்திருந்தபோது காலையில் மாமா ஒருவரின் (பக்கத்து வீடுதான்) வீட்டுக்குப் போயிருந்தேன்.. அங்கு என்னுடன் சிறிதுநேரம் விளையாடிவிட்டு மாமாவும் அப்பச்சியும் வெளியே போய்விட்டார்கள். அவர்கள் போனவுடன் என் கண்ணில் ஒரு இயர் புக் பட்டது. மதிய உணவை மறந்துவிட்டேன்... அந்தி சாய்ந்தபோது என் அம்மச்சி (அம்மாவின் அம்மா) பையனைக் காணவில்லை என்று கதற ஊர் முழுவதும் சேர்ந்து என்னைத் தேடியிருக்கிறார்கள். கடைசியில் மாமாவின் வீட்டில் என்னை புத்தகமும் கையுமாகப் பிடித்தார்கள்... அன்று எனக்கு அந்த புத்தகம் பரிசாகக் கிடைத்தது...
இதெல்லாம் பார்த்துவிட்டு கல்லூரியில் நான் முதன் மாணவனாக வந்திருப்பேன் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்...
பொறியியல் வேண்டாம் என்றும் இளங்கலை வரலாறுதான் என் வாழ்க்கைக்கான் படி என்றும் வீட்டில் போராடித் தோற்று பொறியியல் படிக்கச் சேர்ந்ததால் வகுப்புக்குப் போகாமல், போனாலும் பாடம் கவணிக்காமல் வேறு ஏதாவது படித்துக்கொண்டும், தேர்வறை வாசலில் நின்று காசு சுண்டிப்பார்த்து எழுதலாமா வேண்டாமா என்று முடிவு செய்து தேர்வுகளுக்கு மட்டமடித்தும், வேண்டுமென்றே ஒரு கேள்விக்கு மட்டும் விடையளித்துவிட்டு நார்ப்பத்தைந்து நிமிடத்தில் வெளியே வந்தும், கால்க்குலேட்டரைப் பயன்படுத்தாமல் நானேதான் கணக்குகளை போடுவேன் என்று மூன்று மணிநேரத்தில் இரண்டு கணக்குகளைமட்டும் போட்டும் இரண்டாமாண்டு முடியும்போது பதிமூன்று அரியர் வைத்திருந்தேன்... என் ஆசிரியர்கள் எவ்வளவோ முயன்றும் என்னை பாடம் கவணிக்க வைக்கமுடியவில்லை... ஆனால் மூன்றாமாண்டில் ஒரு மாலைப்பொழுதில் நிகழ்ந்த ஒரு சந்திப்புக்குப் பிறகு என் கல்லூரி படிப்பு தலைகீழாக மாறியது வேறு கதை...
இப்படியெல்லாம் படித்தாலும் எனது மிகப்பெரிய பலமே எனது மனதில் நிறைந்திருக்கும் அன்பும் என்னைச்சார்ந்தவர்களின் உள்ளத்தை அறிந்துகொள்ள உதவும் empathyயும் தான்... அன்பு இயல்பாக வந்தாலும், இரக்ககுணமும், மனதைப் புரிந்து கொள்ளுதலும் படித்ததில் வந்தது... என் மூளைக்குப் பிடித்த பாடங்களாக இருந்தவை புவியியலும் வரலாறும். ஆனால் எனது மனதுக்குப் பிடித்த பாடங்கள் மாரல் சயின்சிலேயே இருந்தன...
ஆனால் இன்று அந்த தேடலும் கற்றலும் என்னைவிட்டு பலதூரம் போய்விட்டன...
No comments:
Post a Comment