Sunday, 7 June 2015

கடன், உதவி மற்றும் முதலீடுகள் -புவி அரசியல்

பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் இந்த பிற நாடுகளுக்குப் பயணம் போகும்போதெல்லாம் கடனோ அல்லது உதவியோ தந்துவிட்டு வருவார்கள்... நம்மவர் வங்கதேசத்துக்கு அறிவித்தது போல... அதேபோல் சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் பணக்கார நாடுகளுக்குப் போகும் போது கடனோ அல்லது உதவியோ அல்லது முதலீடுகளோ வாங்கி வருவார்கள்... நம்மவர் ஜப்பான், கொரியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போனபோது நடந்தது போல...

இதை லைன் ஆப் கிரெடிட் என்கிறார்கள்... அதாவது நாம் இன்னொரு நாட்டுக்கு கடன் கொடுப்போம்... அவர்கள் தங்களுக்குத் தேவையானதை நம்மிடமிருந்து அந்தப் பணத்தைக் கொண்டு வாங்கிக் கொள்வார்கள்... பிறகு அந்தப் பணத்துக்கு வட்டியும் கட்டுவார்கள்... ஒரு வகையான வியாபாரத் தந்திரம்...

இரண்டாம் உலகப் போரின்போது அணி நாடுகளுக்கு உதவ இது போன்றதொரு திட்டத்தை அமரிக்கா வைத்திருந்தது... அது lend-lease திட்டம்... அதாவது இங்கிலாந்து, சோவியத் போன்ற அணி நாடுகள் அமரிக்காவிடமிருந்து டாங்கி, விமானம், கப்பல் போன்ற இராணுவ தளவாடங்களை குத்தகைக்கு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அவர்களிடம் குத்தகைக்கு கட்ட பணமிருக்காது... அதற்கு அமரிக்காவிடமே கடன் வாங்கிக் கொள்ளவேண்டும்... அந்த குத்தகைக்கு பெற்ற பொருட்கள் பெரும்பாலும் யுத்தத்தில் அழிந்திருக்கும், அப்படி திருப்பி தர முடியாத பொருட்களுக்கும் வட்டியுடன் பணம் தர வேண்டும்... இப்படியாக பல நாடுகள் அமரிக்காவுக்குக் கடன் பட்டன... சோவியத் கூட்டமைப்பு பனிப்போர் காலத்தில் கூட இந்தக் கடனைக் கட்டிக்கொண்டிருந்தது... இன்றைய அமரிக்கவின் பல அயல்தேச இராணுவ தளங்கள் அப்படிக் கொடுக்கப்பட்ட கடனுக்கு பதிலாக உரிமை அடிப்படையில் அமைக்கப்பட்டதே... பிரிட்டன் காலனியாதிக்கக் காலத்தில் பாரதத்தில் பல இராச்சியங்களின் உள் விவகாரங்களில் இப்படியாகத்தான் முதலில் மூக்கை நுழைத்து பின் அதிகாரத்தைக் கைப்பற்றியது...

இந்த முதலீடுகளும் கிட்டத்தட்ட இப்படித்தான் செயல்படும்... ஆனால் அவை பணம் பண்ணுவது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செய்யப்படுபவை... உதாரனமாக சீனாவிடம் கிட்டத்தட்ட மூன்று டிரில்லியன் (1 டிரில்லியன் = ஒரு லச்சம் கோடி) டாலர்கள் அளவுக்கு அன்னிய செலாவனி குவிந்து கிடக்கிறது...இது கிட்டத்தட்ட மொத்த இந்திய பொருளாதாரத்தை விட ஒன்னரை மடங்கு அதிகம்... இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் இயற்கை வளம் அதிகம் ஆனால் அவற்றை எடுக்கவும், தொழிலாக மாற்றவும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போக்குவரத்து வசதிகளும் குறைவு... அவற்றுக்கான முதலீட்டுக்கும் அந்த நாடுகளிடம் பணமிருக்காது... இப்போது சீனா அந்த நாடுகளில் முதலீடு செய்யும்... அதாவது சீன நிறுவனங்களுக்கு அந்த நாடுகளில் சுரங்கம் அமைக்க, ரயில்-சாலை-துறைமுகங்கள் அமைக்க, தொழிற்சாலை துவங்கி ஏற்றுமதி செய்வது போன்ற வேலைகளுக்கு கடன் கொடுக்கும்.. அந்தப் பணத்தைக் கொண்டு அந்த நிறுவனங்கள் முதலீடு செய்யப்படும் நாடுகளின் மனித மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி தொழில் செய்து லாபம் சம்பாதிப்பார்கள்...அல்லது அந்த நாட்டில் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை விலை கொடுத்து வாங்கி பங்குதாரராகி லாபம் சம்பாதிப்பார்கள்... நமது நாட்டிலிருக்கும் கட்டணச் சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தனியார் விமான நிலையம், துறைமுகங்கள் போன்றவற்றுக்கு இப்படித்தான் முதலீடு வருகிறது...

இதில் முதலீடு செய்யும் நாட்டுக்கு என்ன லாபம்? அமரிக்காவில் வங்கிகளில் கடன் வாங்கினால் அதற்கு வட்டியாக 1-2% தான் கட்ட வேண்டும்... அப்படிக் கடனாக வாங்கும் பணத்தை ஒரு இந்திய வங்கியில் அந்நிய நேரடி முதலீடாக போட்டு பங்கு வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அந்த இந்திய வங்கி முதலீடாக வந்த பணத்தைக் கொண்டு கடன் கொடுக்கிறது, அந்தக் கடனுக்கு வட்டியாக 10-12% கிடைக்கிறது... இந்த அதிக வட்டி அந்த முதலீட்டாளருக்கு லாபமாகப் போகிறது... அதேபோல் தான் மற்ற முதலீடுகளும்... அமரிக்கப் பொருளாதாரம் வருடத்துக்கு 0.5-2% வரை வளர்கிறது... அதே இந்தியப் பொருளாதாரம் 6-8% வரை வளர்கிறது... இப்போது அமரிக்காவில் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி இந்தியப் பங்குச் சந்தையில் அல்லது தொழில்களில் நேரடியாக முதலீடு செய்தாலோ அந்தப் பணம் வருடத்துக்கு 6-8% வளரும்... பணக்கார நாடுகளின் முதலீடுகள் இப்படித்தான் பணத்தை முதலீடு செய்து பெருக்கிக் கொள்கிறார்கள்...

இப்போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8% இருந்து குறையத் தொடங்குகிறது... இந்தியப் பொருளாதாரம் சீனாவை விட வேகமாக வளரத் துவங்குகிறது... இது அதிகமாக அந்நிய செலாவனி வைத்திருக்கும் சீனாவுக்கு இந்தியாவில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதித்துத் தரும்... இதுதான் இந்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கான USP...

முதலீடுகளுக்கு முன்னோட்டமாக கடன்களும் உதவிகளும் வழங்கி அந்த நாடுகளின் அரசை தங்களுக்கு சார்பாக மாற்றிக் கொள்வார்கள்... பிறகு சந்தையை அவர்களுக்குச் சாதகமாக திறந்துவிடச் செய்வார்கள்...

இப்படித்தான் கடன்களும், உதவிகளும், முதலீடுகளும் வேலை செய்கின்றன...

புவி அரசியலில் அதி முக்கிய ஆயுதங்கள் இவை...

No comments:

Post a Comment