Wednesday, 10 June 2015

நமது வளர்ச்சிக்கு அமரிக்கா முன்னோடியில்லை

அமரிக்கா போன்ற ஒரு நாட்டை முன்னேற்றத்துக்கான எடுத்துக்காட்டாகக் கொள்வது இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல... அவர்களைப் பார்த்து நாம் நமது நில உரிமைகளை தீர்மானிப்பதைப் போன்ற முட்டாள்தனம் வேறேதும் இருக்க முடியாது...

அமரிக்கா என்பது ஒரு குடியேற்ற நாடு.. வெவ்வேறு தேசங்களிலிருந்து பணம் எனும் ஒற்றைக் குறிக்கோளுடன் குடியேறியவர்களின் தேசம் அது... அப்படி குடியேறியவர்களுக்கு தான் கால் வைத்த இடம் தனது நிலம் என்றானதால் நிலம் என்பது அவர்களுக்கு மரபுரீதியிலான ஒரு உணர்வு சார்ந்த உரிமையாக இருப்பதில்லை... இப்படி புதிதாக ஒரு குடியேற்ற நாடாக, மரபு சார்ந்த நில உரிமைகளற்ற நாடாக உருவானதால்தான் அவர்களால் பிரம்மான்டமான திட்டமிடப்பட்ட நகரங்களையும், புவியியல் ரீதியிலான தொழில்களையும் பெருமளவில் கட்டமைக்க முடிகிறது... ஆயிரமாயிரம் ஏக்கர் பரப்பளவில் அவர்களால் பண்ணைகள் அமைக்க முடிவதும் அதனால்தான் சாத்தியப்பட்டது..  அவர்களுக்கு விவசாயம் என்பதும் ஒரு தொழில் அவ்வளவே...

இந்தியா அப்படியான நாடல்ல... இது உலகில் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்துவரும் ஒரு பகுதி... உதாரணமாக இன்று நாம் பேசும் தமிழிலிருக்கும் பல சொற்கள் இதே இடத்தில் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பேசியிருக்கிறார்கள்... நமக்கு நிலமென்பது ஆயிரமாயிரமாண்டுகளாக உரிமை சம்பந்தப்பட்ட ஒன்று...

நமது விவசாய நிலங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப பிளவுபட்டே வந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக நபார்டு வங்கி இரண்டாண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஒரு ஆய்வில்  "கடந்த நாற்பதாண்டுகளில் மொத்த சாகுபடிப் பரப்பானது 14கோடி எக்டர் என்றளவில் நிலைத்திருக்கிறது ஆனால் விவசாயிகளின் எண்ணிக்கை 7 கோடியிலிருந்து 14கோடியாக உயர்ந்திருக்கிறது... ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு கோடி விவசாயிகளை எண்ணிக்கையில் கூட்டிக்கொண்டிருக்கிறோம்" என்று சொல்லியிருக்கிறது... அதாவது பதினாலுகோடி விவசாயிகளின் மற்றும் விவசாயம் சார்ந்து பிழைக்கக்கூடிய மேலும் முப்பதுகோடிக்கும் குறையாதவர்களின் வாழ்வியல் ரீதியிலான பிரச்சினைகளை நாம் மொட்டையான தட்டையான ஒரு சட்டதிருத்தத்தை வைத்து தீர்மானிப்பதை விட மூடத்தனம் வேறேதுமில்லை...

சாலைகளை அமைப்பது முக்கியம். அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பயன்பாட்டாளர் கட்டணம் செழுத்தவேண்டும்.. இது அந்த சாலையை அமைக்க முதலீடு செய்தவர்கள் தாங்கள் போட்ட பணத்தைத் திரும்ப லாபத்துடன் எடுப்பதற்கு ஏதுவான திட்டம்.. ரூபாயின் மதிப்பு சரியும்போதும் விலையேற்றத்துக்கு தக்கவாரு ஈடு செய்து லாபத்தை காப்பாற்றிக்கொள்ளவும் அவர்களால் கட்டணத்தை அதிகப்படுத்த முடியும்... இப்படி அந்த முதலீட்டாளர்களின் பணத்துக்கு இத்தனை வகைகளில் அரசு பாதுகாப்பாக இருக்கிறது...

சரி.. முதல் போட்டு சாலை அதைத்தவர்கள் லாபம் பார்பது குறித்து இவ்வளவு சிந்திக்கும் நாம், அந்த சாலை அமைந்த இடத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு தொகையை மட்டும் குடுத்தால் போதும் அதை வைத்து அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள் என்று தீர்மானிப்பது எப்படி நியாயமாகும்? எடுத்துக்காட்டாக, இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு விவசாயிக்கு விவசாயத்தைத் தவிர வேறேதும் தெரியாது.. அவர் அந்த விவசாயத்தை திறமையாக செய்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார். இப்போது அவரது நிலத்தைப் பிடிங்கிக்கொண்டு அவருக்கு ஒரு ஐந்து லச்சம் பணத்தை அரசு பொடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் அதை வைத்து என்ன செய்துவிடமுடியும்?அந்த ஐந்து லச்சம்தான் அவரது ஒட்டுமொத்த முதல்...  வங்கி வட்டியாக வருடத்துக்கு 40000 கிடைக்கும்... இதை வைத்து அவர் குடும்பம் எப்படிப் பிழைக்கும்? ரூபாயின் மதிப்பு திடீரென சரிகிறது என்று வைத்துக்கொள்வோம், அவரது பணமும் சேர்ந்தே சரியுமல்லவா... அப்படிப்பட்ட சூழலில் அவரது முதலுக்கு என்ன பாதுகாப்பு?? அவரது குடும்பம் பிழைக்க என்ன வழி?

விவசாயியை விடுவோம். அவருக்காவது நிலத்தின் மதிப்புக்கு பணம் கிடைக்கும்.. விவசாயக் கூலிகளுக்கு என்ன வழி? அவர்கள் நாடோடிகளாகவே வாழவேண்டியதுதானா?? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்?? அந்த கூலித்தொழிலாளி ஒரு நாளுக்கு தன்னால் திறமையாக செய்யமுடிகிற வேலையைச் செய்து இருநூறு கூலி வாங்கிக்கொண்டிருக்கிறார்.. வருடம் முழுவதும் நிலங்களில் ஏதோவொரு வேலை கிடைக்கிறது... ஆனால் இப்போது அவரை வேறு தொழிலுக்குப் பழகிக்கொள் என்று சொல்வது எப்படிச் சாத்தியமாகும்???

சாலை பயன்பாட்டுக்கு வசூலிக்கப்படும் பணத்தில் ஒரு தொகையை அந்த நிலம் சாலையானாதால் தங்கள் வாழ்வியலை இழந்து நிற்பவர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்களாமே... அது அவர்களுக்கு சில காலத்துக்கு வேறு தொழில்களுக்குப் பழகும் வரை ஒரு ஒத்தாசையாக இருக்குமல்லவா... அரசு எல்லாருக்கும் வங்கிக்கணக்கு துவங்குகிறது. அந்தப் பணத்தை அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவும் வைத்தும்விடலாம்...

தொழிற்சாலைகள் முதல் சாலைகள் வரை அந்தந்த பகுதியில் பல்லாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லாமல் அமைத்து என்ன முன்னேற்றத்தை உறுதி செய்யமுடியும்???

பழைய உலகில் விளைநிலங்களே நெடும் மற்றும் தொழிற்ச் சாலைகளாகப் பரிணமித்திருப்பது உண்மையே... ஆனால் அதெல்லாம் மெதுவாக நிகழ்ந்த மாற்றங்கள்.. ஆனால் இங்கு ஒரு சட்டத்தைக்கொண்டுவந்து அரசே நில அபகரிப்புக்கு ஊக்கியாகச் செயல்படுவதுதான் குற்றமாகும்...

சந்தை மதிப்பைவிட நான்கு மடங்கு என்பது சரி. ஆனால் சந்தை மதிப்பு என்பதை எப்படி நிர்ணயிக்கப்போகிறார்கள்? இங்கே சந்தை மதிப்பு என்பது பரும்பாலும் கருப்புபணப் புழக்கத்தின் வெளிப்பாடே. அப்படியிருக்கையில் சந்தை மதிப்பு என்பதை எதைவைத்து உறுதிசெய்வார்கள்?  இதெல்லாம் அரசே நிலங்களைக் கையகப்படுத்தி குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்கும் ஊழல்களுக்கு வித்திடும் விதைகள்...

தொழிற்சாலைகள் என்பது அவ்வப்பகுதி மக்களுக்கு பணிவாய்ப்பு வழங்குபவையாக இருக்கவேண்டும்,,. உதாரணமாக திருப்பூர் நகரம் ஒரு விவசாய பகுதியில் உருவான தொழில் நகரம்.. ஆனால் அது எந்தவித அரசின் தூண்டலுமில்லாது உருவானது.. அங்கு விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாகிப் பரிணமித்திருக்கின்றன. ஆனால் சுற்றுவட்டப் பகுதியினரின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நகரமாகப் பரிணமித்திருக்கிறது... அந்த வகையிலான அந்தந்த பகுதியினரின்  வேலைவாய்ப்பை அரசு கொண்டுவந்திருக்கும் இந்த சட்டதிருத்தம் உறுதிசெய்யாதபோது இதன் சமுதாயரீதியிலான பயன் என்ன?

சாலைகளாகவும் தண்டவாளங்களாகவும் விளைநிலங்கள் பரிணமிக்கும்போது அந்த நிலத்தை அந்த திட்டத்துக்கு கொடுத்த அந்த விவசாயிக்கும் அந்த நிலத்தால் வேலைவாய்ப்பு பெற்றுவந்த மற்றோருக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை குறிப்பிட்ட காலத்துக்கு வழங்குவது தவறாகாது தேசிய நட்டமாகிவிடாது என்பது என் வாதம்...

No comments:

Post a Comment