ஒரு பத்து நாட்களுக்கு முன் என் அப்பச்சியின் வீட்டுக்கு போய்வந்தேன். அவர் நிலம் கோபியில் கீழ் பவானி வாய்க்கால் பாசணப்ரப்பில் வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசணத்திற்கு இந்த பருவத்தில் நீர் விடமாட்டார்கள். வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் வீழ்ந்துவிட்டது. அதோடும் இந்தாண்டு மழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்ட வரட்சியின் காரணமாகவும், திடீரென சுழற்றிய சூரைக்காற்றின் காரணமாகவும் கோபி பகுதியில் விவசாயம் படுத்துக்கிடக்கிறது. பலரும் வாழை பயிரிட்டிருந்தனர், நன்றாக விளைந்திருந்த வாழையை சூறைக்காற்று வீழ்த்தி பலரையும் நட்டப்படுத்தி விட்டது. தற்போதைய நிலவரப்படி கதிலி வாழை ஒரு கிலோ ரூபாய் ஐம்பதுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
என் அப்பச்சியும் தன் நிலத்தில் வாழை போட்டிருக்கிறார். நான் போயிருந்த போது வாழை கிலோ நாற்பதுக்கு விற்றுக்கொண்டிருந்தது. முருகனின் அருளால் எங்களது வாழைகளுக்கு சூறைக்காற்றில் பாதிப்பில்லை. ஆனால் கிணற்றில் ஒரு நாளைக்கு இரண்டு பாத்தி பாயுமளவுக்குத்தான் தண்ணீர் ஊறிக்கொண்டிருந்தது. அதனால் மிகுந்த வருத்தத்திலிருந்தார். இதற்குமுன் ஒரு பத்து வருடத்திற்கு இதேபோன்ற சூழ்நிலையில் மஞ்சள் விதைத்ததிருந்தார். அதுவும் நன்றாக விளைந்து வந்திருந்தது. கிழங்கு ஊறும் பருவத்தில் ஆனால் இதுபோன்ற வரட்சியில் கிணறு வற்றிப்போக, பயிரைக் காப்பாற்றிட ஆழ்துளைக் கிணறுகளை தோண்டிட முடிவு செய்து கிட்டத்தட்ட இரண்டு லச்ச ரூபாயை, வங்கிக்க கடன், கையிலிருந்த காசு, வெளியில் கைமாத்து வாங்கி என மூன்று கிணறுகளை அமைத்து, அதில் இரண்டில் தண்ணீர் வராமல் ஏமாற்ற, ஒன்று மட்டும் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் தண்ணீர் தந்து சில நாளில் ஓய்ந்தும் போனது... அந்த வருடம் மஞ்சளுக்கு செய்த செலவு மட்டும் கிட்டத்தட்ட மூன்று லச்சம் ரூபாய். அதில் அடைந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி, மிச்சமிருக்கும் கடனுக்கு இன்றளவும் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார்.
இப்போது இந்த வருட வாழையை நம்பிக்கொண்டிருந்த வேளையில் வரட்சிக்கு அதையும் பலிகொடுக்க வேண்டியிருக்குமோ என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஆழ்துளைக் கிணறுகள் பற்றி யாரோ பேசினார். கிணற்றை அமைக்க வேண்டாம், ஆனால் யாராவது வல்லுனரைக்கொண்டு தண்ணீர் கிடைக்கும் இடைத்தையாவது அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்று பேசினார்கள். ஆனால் நானும் என் அம்மாவும் அதெல்லாம் வேண்டாம் என்றோம். கடந்த முறையும் நான் அப்படிச் சொன்னபோது "நீ சின்னப்பையன், உனக்கு இந்த விவரம் பத்தாது என்று அடக்கிவிட்டார்கள்". ஆனால் இம்முறை நான் விடவில்லை. "இந்த வரட்சியானது ஒரு சுழற்சி முறையில் வந்து கொண்டிருக்கும். அதற்காக ஆழ்துளை கிணறுகள் எனும் பெரும் பொருட்செலவு செய்து சூதாடுவது மூடத்தனம், அதை விட்டு யாராவது நீரை காசுக்கு விற்றால் அதை வாங்கி ஒரு முறை மட்டும் பாய்ச்சலாம். எப்படியும் அணை கொஞ்சமாவது நிரம்பும். பிறகு அரசே ஒரு பத்து நாட்களுக்கு மட்டுமாவது நிலத்தில் நீர் ஊற என தண்ணீர் திறந்து விடும். அடுத்த வருடம் சொட்டுநீர் அமைப்பை போட்டுவிடலாம், நமக்கு குறு விவசாயி என்ற மாணியம் கிடைக்கும். இரண்டு பாத்தி மட்டும் பாயுமளவே தண்ணீர் இருந்தாலும் மூன்று ஏக்கர் நிலத்தில் நிற்கும் பயிருக்கு நீர் கொடுக்கலாம் என்றேன்." என் அப்பச்சியும் எனது கருத்தை ஏற்றுக்கொண்டார். இன்று போயிருந்த போது கிட்டத்தட்ட பத்தாயிரத்து ஐநூறு செலவு செய்த எட்டு நடை வண்டிகளில் வந்த தண்ணீரைக் கொண்டு இரண்டு ஏக்கர் வாழைத்தோப்புக்கு ஒரு சுற்று தண்ணீர் பாய்ச்சியாயிருந்தார்கள். இப்போது கிணற்றிலும் மீண்டும் இரண்டு பாத்தி பாய்ச்சுமளவுக்கு நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை 65 அடி நிரம்பியிருக்கிறது. இன்னும் ஒரு பத்து நாள் மலைகளில் மழை பெய்தால் எப்படியும் சுதந்திர நாளன்று குறைந்தது 80 அடியை எட்டிவிடும். அப்போது நிச்சயம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவார்கள். அது வரை தாக்குப்பிடித்தால் போதும்.
விவசாயத்தில் எடுக்கும் ஒரு தவறான முடிவு பத்தாண்டுளின் சம்பாத்தியத்தை ஒரு வருடத்தில் அழித்துவிடும் அல்லது அடுத்த பத்தாண்டுகளுக்காவது கடனாளியாக்கிவிடும்...
இதில் ஒரு கொசுறு என்னவென்றால், தண்ணீரை எங்களுக்கு விற்றவர் முதலில் ஒரு நடை 1000 ஆகுமென்றார். ஆனால் முதல் நடை வருமுன் மீண்டும் அழைத்து ஒரு நடை 1400 ஆகிறது என்றார். ஏனென்று கேட்டபோது தண்ணீரை பழுவுந்தில் நிரப்ப மின் மோட்டர் பயன்படுத்தக்கூடாது அதனால் வாடகைக்கு எஞ்சின் ஒன்றை வாங்கியிருப்பதாகச் சொன்னார். வெளியில் விசாரித்தபோது விவசாயப் பயன்பாட்டிற்கு கிடைக்கும் மின்சாரத்தை பிற காரணங்களுக்குப் பயன்படுத்தினால் அது சட்டப்படிக் குற்றம் என்பது தெரிந்தது. அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடைக்கு 1400 குடுத்து தண்ணீர் வாங்கினோம்... ம்ம்ம்
No comments:
Post a Comment