Wednesday, 10 June 2015

நாடி சோதிட அனுபவம்!! பாகம் #1

இந்த நாடி சோதிடம்கிறத ஜாதகம் பார்க்கிற மாதிரி எல்லாரும் பார்க்கப் போறதில்லை. ஊருல இருக்க கோவிலுக்கெல்லாம் போயும், கிளியில இருந்து கம்பியூட்டர் வரைக்கும் சோசியம் பார்த்தும் வீட்டுல விளக்கேத்துறதுல இருந்து கெடா வெட்டுறது வரைக்கும் பரிகாரம் செஞ்சும் சாமி கண்ணத் திறக்காத நிலையில் ஏதாச்சும் அற்புதம் நடக்காதானு தவிக்கும் போது எவனாச்சும், "நீங்க எதுக்கும் ஒருவாட்டி வைத்தீசுவரன் கோவிலுக்குப் போங்க... அங்க நாடி சோசியம் பாக்கிறான்.. உங்க வலது கை கட்டைவிறல் ரேகை மட்டும் போதும் , போன ஜென்மத்துல என்னவா இருந்தீங்கங்கறதுல இருந்து இனி உங்க வாழ்க்கை என்னாகப் போகுதுங்கிறது வரைக்கும் சும்மா புட்டுப் புட்டு வச்சிடுவாங்க"னு உசுப்பேத்த, சரி அதையும் பார்ப்போமேனுதான் பலரும் அங்க போறாங்க.. அதாவது தன்னோட கஷ்டம் தீர ஒரு வழி கிடைக்கும்னு நம்பறவன் போறான்.

இந்த நம்பிக்கையத்தான் ஏமாத்துறதுக்கு உபயோகப்படுத்திக்கிறாங்க...

சரி நான் ஏன் நாடி சோசியம் பார்த்தேன். என்னதான் சொல்றான்னு பார்ப்போமே, உண்மையிலேயே கட்டவிரல் ரேகைய வச்சு நம்ம பத்தின எல்லாத்தையும் ஒருத்தன் சொல்லிடுவானா? அந்த ஓலைச் சுவடிகளில எல்லாத் தகவலும் இருக்கும்னு சொல்றது உண்மையா? அல்லது இதெல்லாம் பொய்யும் புரட்டும்னா எப்படி ஏமாத்துறாங்க? இந்த கேள்விகள் டீமாண்டி காலனி படத்துல வர்ர நாடி சோசியம் காட்சியப் பார்த்தவுடனே உதயமாச்சு. அடுத்தநாளே சென்னையில இருந்து காரைக்கால் போற வேலையிருந்தது. அப்போ உடன் வந்த நண்பர் ஒருத்தர் போற வழியிலதான் வைத்தீசுவரன் கோவில் இருக்கு, நாம அங்க போய் சாமி கும்பிடலாம்னு சொன்னார். அட, அந்தப் படத்துலயும் இந்த ஊர்ல இருந்துதான ஓலைச்சுவடி வருதுனு சொன்னாங்க? அப்போ நாம நாடி சோசியம் பார்கிறோம்னு கிளம்பிட்டோம்.

ஊருக்குள்ள நுழைஞ்சா நாடி சோசியக் கூடாரங்கள்தான் எங்கபார்த்தாலும். திருப்பூர்ல தடுக்கிவிழுந்தா பனியன் கம்பெனியிலதான் விழனும், அப்படி இந்த ஊருல நாடி சோதிடக்கூடங்கள். இத்தன நாடி சோதிட நிலையங்களப் பார்த்ததும் மனசு "இது புருடா" அப்படினு சொல்லுச்சு. போய் வண்டிய ஓரமா நிப்பாட்டுன உடனே ஒரு தரகன் வந்தான், "சார் நாடி சோசியம் பாக்குறீங்களா? நல்லாப் பாக்குற ஒரு இடம் எனக்குத் தெரியும் வாங்க"னு கூப்பிட்டான்.. இல்ல நாங்க கோவிலுக்குப் போகனும்னு சொல்லிட்டு கோவிலுக்கு வழி கண்டுபிடிச்சு போனோம். தரகனும் கூடவே வந்தான். கோவிலுக்குப் போனா நாலு மணிக்குத்தான் நடை திறக்கும்னு சொல்லிட்டாங்க. சரி கோவிலுக்குள்ள பிரசாதக் கடை வச்சிருந்தவர் கிட்ட "இங்க யாருங்க நாடி சோசியம் பாக்குறதுல வல்லவர்"னு கேட்டோம். அவர்," நான் வெளியூருங்க. எனக்குத் தெரியாது"னு சொல்லும்போதே ஒரு அரை டவுசர் வந்தான்.. "அண்ணே, கோவிலுக்கு வெளிய போனதும் இடது பக்கம் போனா ஒரு நல்ல இடம் இருக்குண்ணே"னு சொன்னான்.

சரி இடது பக்கமே போவோம்னு வெளிய வந்தவுடனே முன்ன பாத்த அதே தரகன் வந்தான். "வீட்டுல வச்சு ஒருத்தர் நாடி சோதிடம் பார்கிறார். அங்க போலாம். நிச்சயம் நல்லதா சொல்வாங்க"னு சொன்னான். சரி அங்கயே போவோம்னு கிளம்புனோம்.

அது கொஞ்சம் பெரிய வீடுதான். வராண்டாவுல கொஞ்சம் நாற்காலி. உள்ள ஹால்ல ஒரு ஓட்டை சோபாவும் கொஞ்சம் நாற்காலிகளும். ஹால்லையே ஒரு அலுவலகம் மாதிரி ஒரு மூலையில மேசை ஒன்ன போட்டு வச்சிருந்தானுக. சுத்தியும் நிறைய சாமி படம் அப்பறம் சுவர், கதவு சாளரம்னு எல்லா இடத்துலயும் நாமத்த போட்டு வச்சிருந்தானுக. இவனுக சைவமாத்தான இருக்கனும்? என்ன நாமம்? ஒருவேளை நம்ம நெத்தியில போடப் போறதத்தான் இப்படி குறிப்பா உணர்த்தறாங்களோனு எங்களுக்கு சந்தேகம்!!! ஹால்ல இருந்து இன்னும் மூனு அறைகளுக்கு கதவு இருந்தது. அதுல ரெண்டு உள்ளார இருந்து பூட்டியிருப்பாங்க போல. சோதிடம் பாக்க வந்த குடும்பம் ஒன்னு உள்ள உக்காந்து இருந்தாங்க. குடும்பத் தலைவர் மாதிரி இருந்த ஒரு மத்திய வயதுக்காரர் முகத்துல அவ்வளவு பதட்டம், இனியாச்சும் ஒரு விடிவு பொறக்காதானு கண்ல ஒரு ஏக்கம். அப்பறம் அந்த டீமாண்டி படத்துல நாடி சோசியருக்கு அல்லைக்கையா ஒருத்தர் இருப்பாருல, அதே மாதிரி குருவிக்கூட்டு தலையோட ஒருத்தர் இருந்தார். இவருக்கு நான் வச்ச பேர், குருவிக்கூட்டுச் சித்தர்.

உங்கள்ல யாருக்குப் பார்க்கனும்னு குருவிக்கூட்டுச் சித்தர் கேட்டார் மூனு பேரு எழுந்தோம். மொதல்ல ஒரு பெரிய நோட்டீச கையில குடுத்தார். அதுல என்னென்ன தகவல்கள நாடி சோதிடத்துல பார்க்கலாம்னு போட்டிருந்தது. அதாவது பேர், அப்பா அம்மாவோட பேர், உடன் பிறந்தவங்க எத்தனை பேர், போனஜென்மத்துல என்னவா இருந்தோம், இனி என்ன பண்ணப்போறோம், திருமனமாகுமா, குழந்தை பாக்கியம், உடல் நலம் எப்படியிருக்கும்னு பொதுப்படையான விசயங்கள் மட்டும் தெரிஞ்சுக்க பொது காண்டம் படிக்கனும். அதுதான் பேசிக் லெவல். அதுக்கு மொதல்ல நம்ம சுவடிய கண்டுபிடிக்கனும். சுவடிய கண்டுபிடிச்சா மட்டும்தான் கட்டணம். முன்னூறுரூபாய். அப்பறம் இந்த எல்லா விசியத்தையும் புட்டுப் புட்டு வைக்க ஒவ்வொரு விசயத்துக்கும் தனி காண்டம் படிக்கனும். அதுக்கெல்லாம் இருநூறுல இருந்து ஆயிரத்தைனூறு வரைக்கும் தனி கட்டணம்.

அந்த விளக்கமெல்லாம் கொடுத்துட்டு ஒரு சின்ன குறிப்பேட்ல இருந்து ஒவ்வொருத்தருக்கும் ஒரு தாள் கிழிச்சார். வலது கை கட்டை விரல ஒரு மையேட்டுல (ink pad) வக்கச் சொல்லி அந்த தாள்ல பதிய சொன்னார். நான் வேணும்னே உருட்டுனேன், "உருட்டாதீங்க, அப்படியே  வச்சு எடுங்க"னு சொன்னார். "அட, ஒரு வேலை உண்மையிலேயே ரேகைய வச்சு சுவடியக் கண்டு பிடிச்சிடுவாரோ" அப்படினு நினைக்கிற அளவுக்கு அவர் நடிப்பு இருந்துச்சு. ஒவ்வொருத்தரும் மூனுவாட்டி ரேகைய பதிஞ்சோம். தாள்கள வாங்கிட்டு அதுல மொதல்ல பதிஞ்சவரோட தாள அவர் அலைபேசியில பேசிட்டே கசக்கிட்டார். அப்பறம் மூனு பேரோட தாளையும் எடுத்துட்டு வீட்டுக்குள்ள போயிட்டார். கசங்குன தாள்ல எப்படி ரேகைய பார்ப்பார் இவர்ன்னு சந்தேகத்தோட போய் உக்கார்ந்தோம்.

கொஞ்ச நேரத்துல உள்பக்கமா பூட்டியிருந்த ஒரு கதவு திறந்துச்சு. ஒரு அம்மா வெளிய வந்தாங்க. அந்த நடுத்தர வயது குடும்பத் தலைவரோட குடும்பத் தலைவி அவங்க. அப்பறம் அதே அறையில இருந்து ஒருத்தர் பட்டையும் கொட்டையுமா கையில ஒரு சுவடிக் கட்டோட வந்தார். இவருக்கு நான் வச்ச பேர்- பண்டித சிகாமணி" "நான் போய் உங்க சுவடிய தேடி எடுத்துட்டு வாரேன்"னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயிட்டான். கொஞ்ச நேரத்துல கையில முன்ன வச்சிருந்த சுவடிக் கட்டு மாதிரியே இன்னொரு கட்ட எடுத்துட்டு வந்து அந்தம்மாகிட்ட "வாங்கம்மா, உங்க நாடிக்கு காண்டம் பாத்துடுவோம். இப்ப கூட யாராச்சும் வாங்க"னு சொல்லிட்டு அந்த அறைக்குள்ள போயிட்டார். இவங்க குடும்பத்துல இருந்து ஒரு மூனு பேர் அந்தம்மாகூட உள்ள போனாங்க. மறுபடியும் உள் பக்கமா தாழ் போட்டுட்டாங்க. அப்ப இன்னொரு கதவும் திறக்க அதே குடும்பத்தச் சேர்ந்த இன்னொரு ஆணும் ஒரு பெண்ணும் தலையில இடி விழுந்த மாதிரி முகத்த வச்சுகிட்டு வந்தாங்க. அப்பறம் அவங்க பின்னாடி ஒரு பெரிய பண்டிதர் வந்தார்..

இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த இன்னொரு அறைக்குள்ள போனவங்க திரும்பி வந்தாங்க. அந்த நடுத்தர வயதுக்காரர் முகத்துல சோகம் வழிய ஆரம்பிச்சிடுத்து. வெளிய வந்த நம்ம சிகாமணி அந்த தலைவர மேசைக்குக் கூட்டிட்டுப் போய் ஒரு நோட்ல என்னமோ எழுதிக் குடுத்தார். அப்பறம் காண்டம் பாத்ததுக்கு, பரிகார பூசைக்குனு காசு வாங்கிக்கிட்டார். எவ்வளவுனு தெரியல ஆனா குறைஞ்சது எழு அல்லது எட்டு ஐநூறு ரூபாய் தாள்கள அவர் எண்ணிக் கொடுத்தார்.

நாங்க எல்லாரும் அப்பவே முடிவு பண்ணிட்டோம். பொது காண்டம் மட்டும்தான் பார்கிறதுனு.

அப்பவே அந்த குருவிக்கூட்டுச் சித்தர் கையில ஒரு சுவடிக் கட்டோட வந்து ஒரு பிறந்த தேதிய சொல்லி, அது யார்னு கேட்டார். நண்பர் ஒருவர் நான்தான்னு சொல்ல, அவர அந்த ரெண்டாவது அறைக்குள்ள கூட்டிப் போனார். நாங்களும் பின்னாடியே போக, "ரேகைக்காரர் மட்டும்தான் வரனும், மத்தவங்க காண்டம் படிக்கிறப்போ வந்தாப் போதும்"னு குருவிக்கூட்டுச் சித்தர் சொல்லிட்டார்.. நாங்களும் சரி போய்ட்டு வாங்கனு சொல்லிட்டு உக்காந்துட்டோம்...

அந்த பூட்டுன அறைக்குள்ள இருந்து ஏதோ மந்திரம் சொல்ற சத்தமும், செந்தமிழ்ல ஏதோ ஓதுற சத்தமும் மெல்லிசா கசிஞ்சுது. ஏதோ பெரிய லெவல்ல ரேகைய ஆராய்வாங்க போலனு யோசிச்சிட்டு இருந்தேன்... அப்போ நம்ம கதாநாயகர் பண்டித சிகாமணி வந்தார், என்னோட பிறந்த நாளச் சொல்லி யாருனு கேட்டார்... நான்தான்னு சொல்லவும் என்ன வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போனார்.. உள்ள போய் எதிரெதிரா போட்டிருந்த ரெண்டு நாற்காலிகள்ல வீட்டுக்கு நடுவுல இருந்த நாற்காலியில என்ன உட்கார வச்சிட்டு அறைக் கதவ தாழிட்டார்... மங்கலான வெளிச்சம்.. சாம்பிராணிப் புகையும் சந்தனக்குச்சி புகையும் ஒன்னாக் கலந்து அந்த புலுக்கத்துல எனக்கு மேற்கொண்டும் மயிர்கூச்செறிய வச்சுது... பண்டிதர் பழந்தமிழ் பா ஒன்ன அடித்தொண்டையில இருந்து பாடிட்டு, பதினெட்டாம்படி முனியில இருந்து ஈசன் வரைக்கும் துணைக்குக் கூப்பிட்டு ஏட்டப் பிரிச்சார்...

தொடரும்!

No comments:

Post a Comment