Wednesday, 10 June 2015

கல்வி நிலையங்களை வடிவமைப்போம்

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியைக் கொடுக்கிறோம்.

ஆனால் அவற்றை வைத்து ஒரு மாபெரும் கல்விப்புரட்சி செய்திருக்கவேண்டும். எதார்த்தம் சீரழிவையும், இலவசமாகக் கிடைத்ததை விற்றுவிடும் செய்திகளை மட்டுமே தருகிறது.

இந்த கணினிகளை வைத்து எவ்வாறு நவீன கல்விக்கூடங்களைக் கட்டமைப்பது, சமகாலத் தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்கிக்கொள்ளும், தமிழ் வழியில் கல்வி கற்கும், உலகளவில் போட்டியிடும் ஒரு மாணவ சமுதாயத்தை உருவாக்குவது என்பது குறித்த எனது சிந்தனைகள் பின்வருமாறு.

1. இலவசக் கணினியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வழங்குவது.

2. எல்லா அரசுப்பள்ளிகளையும் ஒரு மைய தகவல் தொகுப்போடு இணைப்பது. பள்ளிகளில் வைபை இணையத் தொடர்பினை வழங்குவது.

3. ஆறாம் வகுப்பிலிருந்து எல்லா வகுப்பறையிலும் ஒரு மேசைக் கணினியும், ஒளிபரப்புக் கருவியும் (projector) வைத்திருப்பது. பள்ளிக்கு என ஒரு Scanner வசதியுடன் கூடிய நகலெடுக்கும் கருவியும் இருக்கவேண்டும்.

4. ஆசிரியர்கள் வகுப்பிற்குள் வந்தவுடன் அந்த கணினியில் தங்களது வருகையைப் பதிவுசெய்து உள்நுழையவேண்டும். இது ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்களா என்பதை உறுதி செய்யும்.

5. எல்லா ஆசிரியர்களுக்கும் ஒரு மடிக்கணினி வழங்குவது. அவர்கள் அந்தக் கணினியை வைத்து பள்ளிகளுக்கு வெளியில் என்னசெய்கிறார்கள் என்பது பள்ளிக்கு வந்து அவர்கள் Networkல் உள்நுழைந்தவுடன் அரசுக்குத் தெரியவேண்டும். தவறான பயன்பாடு என்றால் அவர்கள்மீது துறைரீதியான் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

6. எட்டாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவேண்டும்.

7. ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு தனி அடையாள எண்ணும், கடவுச்சொல்லும் இருக்கும். அவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அவர்களது கணினியின் வழியே Networkல் உளிநுழையவேண்டும்.

8. ஒவ்வொரு பாடத்திற்கான மேற்கோள் புத்தகங்களை அந்த மைய தகவல்தொகுப்பில் வைத்திருக்கவேண்டும். மாணவர்கள் அவற்றை தங்களது கணினியில் சேமித்தோ அல்லது பள்ளியின் இணைய இணைப்பில் இருக்கும்போது நேரடியாகவோ படித்துக்கொள்ளாம்.

9. ஆசிரியர்கள் தாங்கள் அந்தந்த நாளில் என்னென்ன பாடங்களை எடுக்க இருக்கிறார்களோ அவற்றிர்கான குறிப்புகளையும், தகவல்களையும் தங்களது கணினியில் சேமித்து வைத்து ஒளிபரப்புக் கருவியின் வழியாக விளக்கியும், மாணவர்களுக்கு தகவல்தொகுப்பின் வழியாகவும் அனுப்பியும் கற்பிக்கவேண்டும்.

10. மாணவர்கள் தங்களது வீட்டுப்பாடங்களையும், புதிய கற்றல்களையும் தங்களது கணினியில் பதிவுசெய்து பள்ளிக்கு வந்தவுடன் அதை மையதொகுப்பில் பதிவேற்றவேண்டும். அவ்வாறு ஆவர்கள் பதிவேற்றியதை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சலாக அனுப்பவேண்டும். காகிதத்தில் எழுதவேண்டிய வீட்டுப்பாடங்களை ஆசிரியர்கள் சரிபார்த்தபின்பு Scanner கருவியை வைத்து மின்னகலெடுத்து மைய தொகுப்பில் ஏற்றவேண்டும்.

11. ஆசிரியர்கள் வருடத்துக்கு இத்தனை மணிநேரம் வகுப்புகளுக்கு வரவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவேண்டும். பாடங்களை கணினியின் துணைகொண்டு முடித்திருக்கவேண்டும், மாணவர்களது வீட்டுப்பாடங்களை சரிபார்த்தல், அவர்களது கேள்விகளுக்கு விடையளித்தல் ஆகியன இப்போது கணினியில் பதிவாவதால் திறமையான ஆசிரியர்களை அடையாளம் காணமுடியும். அது அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும்போது சரியான நபர்களுக்கு சரியான உயர்வு வழங்க ஏதுவாக இருக்கும்.

12. வாரத்துக்கு ஒருமுறை ஒரு பாடத்துக்கு மாநில அளவில் வல்லுநர்கள் இணைய வழியில் பாடமெடுக்கவேண்டும். அதை மாணவர்கள் தங்களது வகுப்பறையிலிருக்கும் ஒளிபரப்புக் கருவியின் வழியே கண்டும் கேட்டும் கற்கவேண்டும். அதாவது ஒரு வாரம் தாவரவியல் பேராசிரியர் ஒருவர் வகுப்பெடுப்பார், மறுவாரம் ஒரு கணினி வல்லுநரோ அல்லது கணிப்பொறித்துறையில் புதிதாக சாதனைபடைத்திருக்கும் ஒரு இளைஞரோ ஒரு வகுப்பெடுப்பார். இவ்வாறு மாணவர்களை தங்களது பாடதிட்டத்தைத் தாண்டியும் புதிய விடயங்களைக் கற்கும் வாய்ப்பும், தங்களது பாடங்களிலிருப்பதை அந்தந்த துறை வல்லுநர்களிடமே நேரடியாகக் கற்பதையும் உறுதிசெய்யமுடியும்.
ஆசிரியர்களுக்கு அவர்களது துறைகளிலிருக்கும் வல்லுநர்கள் தரும் துறைரீதியான விளக்கங்கள் அவர்களது கற்பித்தலை மேலும் செம்மையாக்கும்.

13. அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது பள்ளிகளின் செயல்பாடு குறித்த விமர்சனங்களையும், வசதிக்குறைபாடுகளையும் தங்களது கணினியின் வழியே நேரடியாக கல்வித்துறைக்கு புகாராகத் தெரிவிக்கும் வசதியிருக்கவேண்டும்.

14. ஒவ்வொரு மாணவரும் தங்களது பாடத்திட்டத்திலிருக்கும் ஏதாவது மூன்று பாடங்களைப்பற்றியும், ஏதாவது மூன்று பொதுவான விடயங்களைப்பற்றி (சமூக அக்கறை, புதிய தொழில்நுட்பம், தேச நலன், தமிழ் வளர்ச்சி, வேளாண்மை, தொழில்) இணையத்தில் தேடி தகவல்களைத் தொகுத்து தங்களது வகுப்பில் ஒளிபரப்புக்கருவியின் துணையோடு அதை மற்றமாணவர்களுக்கு விளக்கவேண்டும். அவர்கள் சொல்வதிலிருக்கும் தவறுகளை ஆசிரியர்கள் சரிசெய்து விளக்கவேண்டும்.

15. தேர்வுகள் கணினியில் பாதியும் காகிதத்தில் பாதியுமாக இருக்கவேண்டும்.

16. இதையெல்லாம் அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தினால் தணியார்ப்பள்ளிகளின் மீது தீராக்காதல் கொண்டிருக்கும் பல பெற்றோர் அரசுப்பள்ளிகளை நோக்கி தங்களது பார்வைகளைத் திருப்புவர்.

17. தேவையற்ற மாணியங்களைக் குறைத்துக்கொண்டு தமிழகம் கல்வியில் அதிக அரசு முதலீட்டைக் கொண்டுவரவேண்டும்.

18. தமிழகம் ஒரு அறிவியல் வல்லரசாக மாறும் வாய்ப்பு உருவாகும்.
உங்களது கருத்துக்களை முன்வையுங்கள் சொல்லாடுவோம்.

இந்த திசையில் நடந்த உரையாடல்கள்,

நண்பர் 1- சிந்தனை எல்லாம் அருமைங்க.
ஆனா கழிப்பறை கூட ஒழுங்கா இல்ல பாதி பள்ளிகள்ல
ஆசிரியர்களுக்கு எவ்வளவு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் அவங்க வரோம் நாலு கத்து கத்துறோம் சம்பளம் வாங்குறோம் போறோம்னு இருக்காங்க.
போதுமான பயிற்சி அவங்களுக்கு இல்ல.
மாணவர்கள் மடிக்கணினி வெச்சு என்னவெல்லாம் செய்யலாம்ன்னு சொன்னீங்களே. பசங்க அது எதையும் செய்ய மாட்டானுவ. ஒன்னு ரெண்டு பேரைத் தவிர்த்து மத்த எல்லாரும் வீட்டுல அனுப்புறதால தான் பள்ளிக்கு வரானுவ. மொதல்ல படிப்போட அவசியத்தை புரிய வெக்கணும். ஆசிரியர்கள் மாணவர்கள் இடையில நல்லுறவு மேம்படுத்தணும்.
நீங்க சொன்ன டெக்னாலஜிகல் டெவலப்மெண்ட் நம்மூருக்கு வரதுக்கு இன்னும் சில பல வருசமாவும். ஆனா ஒவ்வொரு ஊர்லயும் வேலைக்கு போற இளைஞர்கள் ஒன்னு சேர்ந்து சிறு சிறு குழுவா பிரிஞ்சு ஒவ்வொரு அரசுப்பள்ளியவும் தத்தெடுத்து அங்க வசதிகளை மேம்படுத்தி பசங்க நல்லா படிக்க ஏதுவா கிளாஸ் எடுக்கறது மூலமாவோ இல்ல தேவையான மெட்டீரியல் கொடுக்கறது மூலமாவோ உதவலாம்.
இப்ப இருக்கற நிலையில் ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளியிலும் ஒரு ஆடியோ விசுவல் அமைப்பு கொண்ட ரூம் இருக்கு.
அந்த அறையை முறையா பயன்படுத்த ஒவ்வொரு வகுப்புக்கும் நேரம் ஒதுக்கி அவங்க பாடத்துக்கு ஏற்ப வீடியோக்களை ப்ளே செய்யலாம்.
ஆனா இது எல்லாத்துக்கும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வேணும்.
ஒரு சிலர் தான் உதவுவாங்க.
மத்தவங்க ஒரு மணி நேரம் கேட்டதுக்கே துரத்தி அடிப்பாங்க :)
இந்த ரெண்டுமே அனுபவப்பட்டுருக்கோம்..

நான் - இந்த எதார்த்தம் எனக்கும் ஓரளவு தெரியும். இந்த எதார்த்த நிலைய மாத்தறதுக்குத்தான் நான் தொழில்நுட்பத்த சார்ந்து பள்ளிகல வடிவமைக்கனும்னு சொல்றேன். இப்ப அரசு கணினி வழியிலதான் கல்வி அப்படிங்கிற முடிவ எடுத்தா ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கண்டீப்பா உண்டு. பயிற்சிக்கப்பறமும் கணினிய இயக்க முடியாத ஆசிரியர்கள் வீட்டுக்குத்தான் போயாகனும். கற்பித்தலுக்கும் தொடர் கல்வி அவசியம். கற்பிக்கனும்கிற எண்ணமிருக்க ஆசிரியர்களுக்கு கணினி அவங்களுக்குத் தரக்கூடிய கற்பித்தலானது ஒரு வரம். படிக்கனும்கிற எண்ணமிருக்க மாணவர்களுக்கும் இது வரம். ஏன்னா அவங்க ஆசிரியர்களோட இயலாமையத்தான்டியும் அவங்களால கற்க முடியும். அதனாலதான் அரசு இதக் கொள்கை முடிவா அறிவிக்கனும்னு சொல்றேன். ஆனா அப்படிப்பட்ட தொலைநோக்குள்ள அரசு இப்போதைக்கு இல்ல. இன்னும் பத்தாண்டுகளுக்கும் வராது. அதனால நீங்க சொல்ற "interventions by responsible knowledgeable persons" அவசியம். ஆனா ஒரு சமுதாயமா நாம நான் சொல்ற அந்த கற்பனையான நிலைய நோக்கி நகரனும். தேர்தல் வாக்குறுதியா இத கேட்கனும். ஆனா அதுக்கு அரசியல்வாதிகள விட அதிகமா மக்கள்கிட்ட நாம இதன் அவசியத்தப் பிரச்சாரம் பண்ணனும். அது நடக்காதுங்கிறதும் எனக்குத்தெரியும். அதனால இப்போதைக்கு நீங்க முயற்சி பண்றது சரியான பாதை. ஆனா அதுவும் பெரிய அளவில மாற்றத்த உண்டுபண்ணாது.

நண்பர் 1- பெரிய அளவுல முயன்றா பெரிய அளவுல கொண்டு வரலாம் ஜி.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு corporate social responsibility இருக்கில்லயா? எப்படி இருந்தாலும் காசு செலவு பண்ணி கணக்கு காட்ட வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க.
அவங்கள புடிச்சு அந்த காசை pool செஞ்சு நாம செய்யலாம்.
இப்பயே கோவைல நிறைய பேர் அப்படி தான் செய்றாங்க.. இன்னும் கொஞ்சம் ஆர்கனைஸ் செஞ்சு இதையெல்லாம் ஒழுங்குபடுத்தினா நல்லா கொண்டு வரலாம். தனித்தனியா செய்றவங்களுக்கு இடையில ஒரு கனெக்டிவிட்டி இருக்க மாட்டுது..அதான் பிரச்சனை..
சரி பண்ணிடலாம்...

No comments:

Post a Comment