Sunday, 30 August 2015

நானும் காதலும்

நானும் காதலும்!!!

அந்த பொண்ணு!!! அவ்ளோ அழகு... ஒரு வெள்ளிக்கிழமை அவங்க சரவணம்பட்டி பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தாங்க. அவங்க புளியம்பட்டி. நான் சத்தி. அன்னைக்குத்தான் அவங்கள மொதவாட்டி பார்த்தேன். அப்பப்பா!!!

கூட என்னோட நண்பன். மைசூர் போற கர்நாடக அரசு சொகுசுப் பேருந்து வந்தது. அந்த வண்டியில முன்னாடி மட்டும்தான் கதவு. வண்டி வந்தவுடனே ஒரு ஆறேழு பேர் முந்தியடிச்சு ஏறிட்டாங்க. இப்போ நான், என் நண்பன் மற்றும் அவள். அந்த பொண்ணு ஏற முற்படும்போது இவன் தன்னோட பெரீஇஇய டிராவல் பேக குறுக்க நீட்டி அந்த இடைவெளியில ஏறிட்டான். அவங்களும் அடுத்து நான் என்ன செய்யப்போறேன்னு என்ன பார்த்தா. நாமதான் இந்தக் கதையில நாயகனாச்சே!! "நீங்க ஏறுங்க"னு சொல்லிட்டு வழிவிட்டு நின்னேன். அந்தப் பொண்ணும் நன்றிங்கனு சொல்லிட்டு ஒரு புன்முறுவல உதிர்ந்துட்டு ஏறிட்டா. உள்ள ஏற்கனவே நல்ல கூட்டம். வண்டியோட எஞ்சின் கூட்டுக்கு மேல அந்தப் பொண்ணு உக்காரவும், சரி உள்ள இடிபாட்டுக்குள்ள போகவேண்டாம், இப்படியே படியில நின்னபடியே இவங்கள சைட் அடிப்போம்னு நான் அங்கேயே நின்னுட்டேன்.

இப்போ என்னோட நண்பன் வந்தான். அந்த பொண்ணு முன்னாடி தான் சாதிச்சதாக் காட்ட அவன் எழுதுன ஏதோவொரு மென்பொருளப் பத்தி என்கிட்ட அளந்தான். நாமதான் இயந்திரவியலாச்சே! ஒன்னும் புரியல. அவன அப்படியே கலாய்ச்சு அனுப்பிடலாம்னு நான் ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்.இவனுக்கு அது புரியல, தொடர்ந்து தொனதொனனு பேசிட்டே இருக்கவும் நான் ஓட்டவும் அந்த பொண்ணுக்கு சிரிப்பு வந்துடுச்சு. அப்பாடா சிரிக்க வச்சுட்டோமே!!! இப்படியே இவன வச்சே இன்னைக்கு அந்த பொண்ணுகிட்ட பேசிடனும்னு, "அப்பறம், மச்சி நீ காலையில சாப்பிட்ட இட்லிய பத்தியும் சொல்லேன்! எங்களுக்குப் பொழுது போகனுமே"னு சொன்னதும் அந்தப் பொண்ணு சிரிக்கவும் பையனுக்கு தன்னதான் ஓட்டுறாங்கனு புரிஞ்சுடுச்சு. உடனே என்ன முறைச்சுட்டு நான் உள்ள போறேன்னு போயிட்டான்.

நானும் அதான் சந்தர்பம்னு அவங்ககிட்ட "என்னங்க மழையடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கா"னு கேட்டேன். அவ "ஆமாங்க. அவரு உங்க நண்பரா", நான், "ஆமாங்க. நல்ல பையன்தான், ஆனா என்ன செய்ய அடிக்கடி இப்படி காதுல ரத்தம் வர வச்சுடுவான். இப்படி அவன ஓட்டியே நாங்களும் பொழுதப் போக்கிடுவோம். உங்களுக்கு பொழுதுபோகனும்னா சொல்லுங்க அவன மறுபடியும் தூண்டிவிட்டா போதும்!". அவ "ஹஹஹா. பாவமுங்க விட்டுடுங்க!" நான் "ம்ம்ம், எனக்கு போரடிக்கும். பரவாயில்லை, அப்ப நாம பேசலாமா?? " அவ (சிரிது வெட்கத்துடன், "நல்லா பேசுறீங்க!!" "நான் நிரஞ், நீங்க!" அப்படியே அன்னூர் வரைக்கும் அறிமுகப்படலம் ஓடுச்சு..

அன்னூர்ல நிறைய பேர் இறங்கிட்டாங்க. உள்ள கொஞ்சம் இருக்கைகளே காலியாச்சு. அவன் "டேய் இருக்கை காலியாயிருக்கு. வாடா"னு என்னக் கூப்பிட்டான், நான் அவங்களப் பாத்தபடியே, "இல்லடா எனக்கு இங்கதான் சவுகரியமா இருக்கு"னேன். அவ மறுபடியும் வெட்கப் புன்னகை ஒன்ன உதிர்க்க, அப்பாடா இன்னைக்கு நமக்கு ஒன்பது கிரகமும் உச்சத்துல இருக்கும்போலனு மறுபடியும் கடலை போட ஆரம்பிச்சுட்டேன். கொஞ்ச நேரம் கூட அவனுக்குப் பொறுக்கல,  ஏதோ சொல்லிக்கிட்டே மறுபடியும் வந்தான், அவ என்னப் பார்க்க, நான் வெளிய எட்டிப் பார்த்துட்டு, "மறுபடியும் மழை வரும்போலயே"னு சொல்லவும், அவ கலகலனு சிரிக்கவும், அவனுக்கு புரிஞ்சுடுச்சு நான் அவனத்தான் ஓட்டுறேன்னு. மறுபடியும் கோவிச்சுட்டுப் போயிட்டான். அப்பறம் அவ புளியம்பட்டியில இறங்கற வரைக்கும் பேசிட்டு இருந்தோம்,

அடுத்த வாரம் மொத நாலு நாளும் ஒரே பேருந்துலதான் போனோம்... தினமும் பேசிட்டே போய் ஒரு அன்டர்ஸ்டாண்டிங் வந்துடுச்சு... அந்த வெள்ளிக்கிழமை எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால நான் அவள மறந்துட்டேன். என்கூட வேலை செய்யுற பையன் பஸ் ஸ்டாப்ல இருந்து போன் பண்ணான் "பார்ட்னர், அவங்க உங்களுக்காக வெய்ட் பண்றாங்க. ரெண்டு பாயிண்ட் டூ பாயிண்ட் வந்தும் அவங்க ஏறல. என்ன பாத்ததும் என்ன சுத்தி நீங்க இருக்கீங்களானு பாத்தாங்க. சீக்கிரம் வாங்கனான்"

நானும் உடனே அடுத்த அஞ்சாவது நிமிசத்துல இன்னொருத்தன பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ண சொல்லி போயிட்டேன்... அவங்க எனக்கு தெரியாம என்ன பாத்தாங்க. அப்பறம் என்ன நினைச்சாங்கனு தெரியல அண்ணூர் போற டவுன் பஸ் ஒன்னு வந்துச்சா, அதுல ஏறிட்டாங்க...

அவங்க நடை ஒரு தினுசா அழகா இருக்கும். அவங்க பஸ்ல ஏறும்போதுதான் பாத்தேன்... என்னடா எங்கேயோ பாத்த உருவமா இருக்கே? அவங்க புளியம்பட்டிக்கு தான போகனும்? எதுக்கு அண்ணூர் போறாங்க? அதுவும் டவுன் பஸ்லனு எனக்கு யோசனை

அப்பத்தான் பாத்தேன் உள்ள இருந்து அவங்க என்ன பாத்தத.. நான் பாத்த உடனே திரும்பிக்கிட்டா..  ஓ... நம்மகிட்ட விளையாடுறாங்க!!" அதையும் பாப்போமேனு அங்கேயே நின்னுட்டேன்...

அப்ப மணி ஆறு முப்பது... 6.35, 6.40, 6.45 பாயின்ட் டூ பாயின்ட் எல்லாம் விட்டுட்டு 6.55 பஸ்ல ஏறுனேன். அந்த பஸ் அண்ணூர் பஸ் ஸ்டாண்டுக்குள்ள நுழையும்போதே ரன்னிங்ல இறங்கிட்டேன்... அப்பறம் பஸ் வெளிய வரும்போது முன்னாட ஏறி படியில நின்னுட்டேன்.

பஸ் புளியம்பட்டியில போய் நின்னதும் இறங்கி படிக்குப் பக்கத்துல நின்னுட்டேன். நாலு பேர் இறங்குனாங்க... அஞ்சாவதா அவங்க இறங்குனாங்க!!!!

அவங்க என்னப் பாக்க, நான் அவங்களப்பாக்க!!! அவங்க கண்ல அவ்ளோ வியப்பு!!! அப்படியே வெக்கமா ஒரு சிரிப்பு!!! அம்மம்மா!!!

இறங்கி என்னப் பாத்து நின்னாங்க... ஹாய்னு சொன்னேன்!!! ஹாய்னு சொல்லிட்டு வெக்கப் பட்டுட்டே ஓடிட்டாங்க... அவங்க அப்பா அங்க இருந்தாரா நான் சரி திங்கள் கிழமை பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்...

ஆனா ஞாயிற்றுக் கிழமை மேலாளர் கூப்பிட்டு திங்கள் மதியமா அலுவலகம் வா... திங்கள்ல இருந்து நீ second shiftனு சொன்னாரா... அப்பறம் அவங்கள பாக்கவே முடியல... அவங்க மேல காதல் இருக்குற மாதிரி எனக்கு தெரியலயா, சரி மறுபடியும் விதி இருந்தா அவங்கள பாக்கலாம்னு விட்டுட்டேன்..  விதி இல்லையா இல்ல எனக்கு வேலை முக்கியமாப்போச்சானு தெரியல.. அப்பறம் அவங்களப் பாக்கவே இல்ல...

இப்படி இங்க ஒன்னு அங்க ஒன்னுனு காதலா இல்ல வயசுக்கோளாரானு தெரியாமையே பரவசப்படுத்திட்டு போன நினைவுகள் ஏராளம்!!!

No comments:

Post a Comment