வறுமைக்கோட்டைக் கடக்கும் வழி.
நாட்டில் இன்னமும் முப்பதுகோடிப்பேராவது இன்னமும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கின்றனர். அதாவது இருபது சதவீதம் மக்கள். உலகில் வறுமையில் இருக்கும் மக்களில் கணிசமானவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். அரசும் தன்னாலியன்ற மாணியங்களையும் இலவசங்களையும் தந்து இந்த வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பவர்கள் பசியில் வாடாமல் பார்த்துக்கொள்ள முயல்கிறது.
ஆனால் பொருளை இலவசமாகத் தந்தால் அது விரையம்தான். கல்வியை இலவசமாகத் தந்தால் நிச்சயமாக அது பலரையும் அந்த நிலையிலிருந்து மேலே பொண்டுவரும். ஆனால் கல்வி இலவசமாக இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டுமே? அதற்குத்தான் சத்துணவுத் திட்டங்களைக் கொண்டு வந்தனர். அப்படி கல்வியை சத்துணவோடு உட்கொண்ட பலர் அந்த வறுமைக்கோட்டைத் தாண்டும் வல்லமையைப் பெற்றனர். இத்தனை செய்தும் இன்னும் பலர் வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பது எதனால்?
உழைக்கும் எண்ணம் இல்லாமை, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று கல்வியின் அவசியத்தை உணராமை, அரிசி இலவசமாகக் கிடைக்கிறது, பருப்பெல்லாம் ரொம்பக் கம்மியா கிடைக்குது அதனால நான் சம்பாதிக்கிறதக் கொண்டு தினமும் குடிப்பேன் அல்லது ஊதாரித்தனம் செய்வேன் என்று இன்றைய உழைப்பில் வரும் பணத்தை சேமிக்காமல் வீணாக்குவது ஆகியனதான் முக்கியக் காரணம்.
உழைக்கும் எண்ணமே யாரையும் முன்னேற்றும். அடுத்தது கல்வி. தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் குழந்தைகளுக்கு எப்படியாவது கல்வியை வழங்கியே ஆகவேண்டும் என்று நினைக்கும் ஒரு குடும்பம் தனது இரண்டாம் தலைமுறையில் தானிருக்கும் நிலையிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் முன்னேறியிருக்கும்.
என் குடும்பத்தையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். என் தாத்தாவுக்கு சொத்து எதுவும் பாத்தியப்படவில்லை. அவர் தனது அண்ணன் குத்தகைக்கு ஓட்டிய நிலத்தில் கூலிக்கு வேலை செய்தார். என் பாட்டி தினமும் பால் வாங்கி அதை தயிராகவும் மோராகவும் மாற்றி இருபது லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பானைகள் இரண்டை தலையில் தூக்கி நடந்து சென்று விற்று சம்பாதித்திருக்கிறார். அவர்கள் கஷ்டப்பட்டாலும் அப்பாவையும் அத்தையையும் படிக்க வைத்தார்கள். அறுபதுகளிலேயே அவர்களை பியுசி வரை படிக்க வைத்தனர். இது அப்பாவை திருப்பூருக்கு குடிபெயரவும் மில்களில் வேலை செய்யவும் வாய்ப்பளித்தது. தாத்தாவும் தான் சேமித்த பணத்தில் ஒரு நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து கூலி என்கிற வருவாய் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறினார். அப்படியே மேலும் தான் சேமித்த பணத்திலும் தன் மகன்கள் சம்பாதித்த பணத்திலும் ஒரு விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி அடுத்த கட்டத்துக்கு தன் குடும்பத்தை நகர்த்தினார்.
அப்பாவுக்கும் படிப்பு ஒரு புது உலகத்தை திறந்தது. அவரும் மில் வேலையிலிருந்து ஒரு பனியன் கம்பனி துவங்குமளவு முன்னேறினார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களைத் தாங்கிக்கொண்டே என்னையும் அக்காவையும் பட்டதாரி ஆக்கிவிட்டார்கள். இப்போது தொழிலை விட்டுவிட்டாலும் அவர் விவசாயியாக நாளைக்கு பன்னிரண்டு மணிநேரத்துக்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த கல்வி, உழைப்பு மற்றும் சேமிப்பு. இதன் அவசியத்தை உணர்ந்தால் ஒரு தலைமுறை போதும். வறுமைக்கோடு என்பதெல்லாம் குறைந்த காலத்துக்கு இருக்கும் தற்காலிக நிலைதான்.
எத்தனையோ பேர் இந்த முப்பதாண்டுகளில் வறுமைக் கோட்டைத்தாண்டி வெளியேறியிருக்கிறார்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பவர்களின் எண்ணிக்கை 1990களில் 35%லிருந்து இன்று 21%மாகக் குறைந்திருக்கிறது. அரசு பல மாணியங்களை வழங்குகிறது. அவற்றுக்கு பொருளாதார ரீதியிலான பயணர்களைக் கண்டடையவேண்டும். இது தேவையற்ற பொருளாதார விரையத்தைக் குறைக்கும். கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் ஆக்கிடவேண்டும். இது மேலும் பலரை வளர்ச்சி நீரோட்டத்தில் இணைத்திடும். அடுத்த பத்து வருடங்களில் பதினாலு வயது பூர்த்தியடைந்தவர்களில் அடிப்படைக் கல்வியின் பரவல் நூறு சதவீதம் என்று இலக்கு வைத்து செயல்படவேண்டும். அதுதான் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு அச்சாணியாக இருக்கும். எல்லோருக்கும் உழைக்கும் எண்ணம் வந்துவிட்டாலே வறுமை என்பதெல்லாம் பழங்கதையாகிவிடும்.
No comments:
Post a Comment