Sunday, 30 August 2015

பயிற்சி நிறுவனங்களும் சமூகக் காரையான்களும்

இருபதுக்கும் மேற்பட்ட தேசிய வங்கிகளில் பணி வாய்ப்பை அளிக்கும் ஒருங்கிணைந்த வங்கி போட்டித் தேர்வில் ஒரே முயற்சியில் வெற்றிபெற எங்களது பயிற்சி மையத்தில் சேர்ந்திடுங்கள்! இப்படி ஒரு விளம்பரத்த இன்னைக்குப் பார்த்தேன்.

இந்தியாவப் பிடிச்சிருக்க நோய்கள்ல மிக முக்கியமானது இந்த நுழைவுத் தேர்வுப் பயிற்சி மையங்கள்.

ஒரு தேசிய வங்கியின் செயல்பாடு என்ன. அவர்களுடைய ஒரே குறிக்கோள் பினான்சியல் இன்குலூசன். அதாவது அனைவருக்குமான நியாயமான நிதித் தேவைகளை நிறைவேற்றுவது, உறுதிப்படுத்தப்பட்ட முதலீட்டு வாய்ப்புகள உருவாக்குவது. ஆனா இந்த குறிக்கோள அடைஞ்சிருக்கோமா? இல்லையே. வங்கிகள் தங்களோட சொந்த முயற்சியில இந்த இலக்க அடைஞ்சிருக்கணும். ஆனா அரசாங்கம் ஜன் தன் யோஜனா திட்டத்த அறிவிச்சு வங்கிகள வேலை வாங்குது.

சரி ஏன் நடக்கல? அந்த குறிக்கோள அடையற முயற்சியில முன்னணியில நிக்கறவங்கதான் இந்த போட்டித் தேர்வுகள் வழியாத் தேர்ந்தெடுக்கப்படுற வங்கி அதிகாரிகள். ஆனா இந்தத் துறையில நான் இதச் சாதிக்கணும்கிற குறிக்கோள் இருக்கவங்களுக்கான வாய்ப்பு, துறை ரீதியான அறிவு/குறிக்கோள் இல்லாத இந்தமாதிரியான பயிற்சி நிறுவனங்கள்ல படிச்சுட்டு அத அப்படியே இந்தத் தேர்வுல துப்புறவங்களால பறிக்கப்படுது.

இதோட விளைவுகள் என்ன? வங்கிகளோட செயல்பாடா இருக்க வேண்டிய நிதியாதாரத் தேவைகள ஈடு செய்தல் கந்து வட்டிக்காரனால ஈடு செய்யப்படுது. நியாயமான முதலீட்டு வாய்ப்புகள் மக்களப் போய் சேருவது கிடையாது.

இதேதான் இந்திய அரசும் மாநில அரசுகளும் நடத்துற ஆட்சி நிர்வாகப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும். ஐஐடி ஐஐஎம் முதற்கொண்டு பல கல்வி நிலையங்களுக்கு நடத்தப்படுற நுழைவுத்தேர்வுகளுக்கும்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு எல்லாருக்கும் பரிச்சயமான யுபிஎஸ்சி நடத்துற ஐஏஎஸ் ஐபிஎஸ் மாதிரியான இருபத்தாறு பணிகளுக்கான குடிமையியல் பணிகள் நுழைவுத்தேர்வ எடுத்துக்குவோம். அதுல மொத்தம் மூனு சுத்து இருக்கு,

1) முதனிலைத் தேர்வு,
2) பிரதீனத் தேர்வு.
3) நேர்முகத் தேர்வு.

இந்த முதனிலை சுற்றுல ரெண்டு தனித் தேர்வுகள். பொது அறிவுத் தேர்வும் இயல்திறன் ( ஆப்டிட்யூட்) தேர்வும். முன்ன இந்த ஆப்டிட்யூட் தேர்வு கிடையாது. அதுக்குப் பதிலா புவியியல், தாவரவியல் மாதிரியான ஒரு விருப்பப் பாடம்.

இந்த விருப்பப்பாட முறையில தேர்வாக பள்ளிக் காலத்துல இருந்து தேர்வுப் பயற்சி மையத்துல சேர்ந்து படிக்கணும். ஏன்னா அங்க படிச்சவங்கதான் தேர்வாகமுடியும்கிற மாதிரியான ஒரு நிலை. ஏன்னா எழுதறவங்கள்ல தேர்வாகறவங்கனு பார்த்தா தொன்னூறு சதவீதம் இந்த தேர்வு மையங்கள்ல படிச்சவங்களாத்தான் இருப்பாங்க.

ஆனா இந்த நிலைய மாத்த யுபிஎஸ்சி ஒரு முயற்சி செஞ்சு முதனிலைத் தேர்வுல இருந்து விருப்பப் பாடத்த தூக்கிட்டு அதுக்கு பதிலா ஆப்டிட்யூட் தேர்வ அறிமுகப் படுத்துனாங்க.

அடுத்தது பிரதானத் தேர்வு. இதுல ஆங்கிலம், இந்திய மொழி, ரெண்டு பொது அறிவு, கட்டுரை, ஒவ்வொரு விருப்பப் பாடத்துலயும் ரெண்டு தாள்னு ரெண்டு விருப்பப் பாடம். ஆக மொத்தம் ஒன்பது தேர்வுகள். இதுல மொழிப் பாடங்களோட மதிப்பெண்கள் கணக்குல வராது. ஆனா இந்த தேர்வுல அதிக மதிப்பெண் பெற விருப்பப் பாடங்கள்ல அதிக மதிப்பெண் எடுத்தாகணும். அதுக்கு பயிற்ச்சி மையத்துக்குப் போகணும். இந்த நிலைய மாத்தவும் யுபிஎஸ்சி ஒரு மாற்றத்தக் கொண்டு வந்தாங்க. அதாவது ஒரு விருப்பப் பாடத்த தூக்கிட்டு அதுக்கு பதிலா கூடுதலா ரெண்டு பொது அறிவுத் தேர்வுகள அறிமுகப்படுத்துனாங்க.

ஆனா இந்த மாற்றங்கள் வந்ததும் ஒரு பெரிய போராட்டம் நடத்துனாங்க. யாரு? இந்த பயிற்சி மையங்கள்ல படிக்கிற பசங்களும் பயிற்சி மையங்கள் காசு கொடுத்து இறக்கிவிட்ட அடியாட்களும்! ஏன் போராட்டம்?

ஒரு விசயத்த யோசிச்சுப் பாருங்க. புவியியல், கணிதம், இயர்பியல், இயந்திரவியல் பொறியியல் மாதிரியான விருப்பப் பாடங்கள்ல இருந்து எத்தன விதமான கேள்விகளக் கேட்க முடியும்? புவியியல்ல புதுசா செவ்வாய் கிரகத்தோட புவியியல் பத்தின கேள்வியா கேட்கமுடியும்? அதுதான் இந்த பயிற்சி மையங்களோட தந்திரம். ஒரு பதினஞ்சு வருசத் தேர்வுகள்ல வந்த கேள்விகள ஒரு தொகுப்பா எடுத்து அந்த கேள்விகளுக்கான பதில வகுப்பெடுத்து மனப்பாடம் செய்ய வைக்கிறதுதான் பெரும்பாண்மையான பயிற்சி மையங்களோட வேலை.

இப்ப தேர்வு முறையில ஒரு மாற்றம் வருது. முதநிலைத் தேர்வுல இனி பயிற்சி மையங்களால தேர்வடைய வைக்க முடியாது. பிரதானத் தேர்வுல ஓரளவுக்கு உதவ முடியும். அதனால அவங்களோட வியாபாரம் பாதிக்கப்படுது. ஐஏஎஸ் தேர்வுல தேர்வானா நிறைய சம்பாதிக்கலாம்னு இந்த தேர்வு மையங்கள நம்பியிருந்த கூட்டத்தோட கனவுல மண் விழுது. அப்பறம் என்ன? போராட்டம்தான்.

ஆனா யுபிஎஸ்சி இதுக்கு மசியல. முதினிலைத் தேர்வுல விருப்பப்பாடத்தயும், பிரதானத் தேர்வுல ஒரு விருப்பப் பாடத்தையும் தூக்கிட்டாங்க. இதனால ஒரு நல்ல பயன் என்னனா, என்ன மாதிரி வேலைக்குப் போய் குடும்பத்தக் காப்பாத்திட்டு இந்தக் கனவ துரத்த நினைக்கிறவங்களால முதினிலைத் தேர்வ தாண்ட முடிஞ்சது. ஆனா இன்னும் பிரதானத் தேர்வு முறைய மாத்தனும். இந்த பள்ளிகள்ல தேர்வு வைக்கிற மாதிரி வச்சு இன்னும் பயிற்சி நிறுவனங்கள்ல படிக்கணும்கிற நிலைய நீடிக்க வைக்கிறது ஏற்புடையதா இல்லை.

இந்த பயிற்சி நிறுவனங்கள்ல படிக்கிறவங்க பெரும்பாலும் இந்த மாதிரியான சேவைகள பணம் காய்க்கிற மரமாப் பார்கிறவங்க. அதுக்கு இந்த தேர்வு மையங்கள்ல படிக்கிறது ஒரு முதலீடு. பல தேர்வு மையங்கள்ல லச்சங்களக் கொட்டி படிக்கிறாங்க. இந்த லச்சங்கள் வியாபம் மாதிரியான ஊழல்களுக்கு அடித்தளம்.

டெல்லி யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சி தர்ர நிறுவனங்களோட தலைநகரம், ஆந்திரம் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான தலைநகரம். இப்ப மூலைமுடுக்கெல்லாம் பயிற்சி மையங்கள் புற்று மாதிரி முளைச்சிருக்கு. இந்த பயிற்சி மையங்களால சுய சிந்தனையாளர்களுக்கான வாய்ப்பு பறிபோகுது. சுய சிந்தனையாளர்கள் இல்லாத இடத்துல தலைமைப் பண்போ மாற்றத்துகான விதையோ விழாது!

சமுதாயம் மாறணும்னாவோ முன்னேறணும்னாவோ முதல்ல போட்டிகள் சுய திறமையாள எதிர்கொள்ளப்படணும். இல்லாட்டி தலையாட்டிகளும் பணம் பிடுங்கிகளும் தான் தலைமையில இருப்பாங்க.

No comments:

Post a Comment