தோனியின் கங்குலியின் பிறந்தநாட்களன்று அவர்களை வாழ்த்தாதவர்கள் சொற்பமாகத்தான் இருந்திருப்போம். அப்படியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு வருடம் ஐபிஎல்லில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதும் வருந்தாதவர்கள்ளும் சொற்பமாகத்தான் இருப்போம்.
ஆனால் இந்த கொண்டாட்டத்துக்கும் துக்கத்துக்கும் இடையில் பல விளையாட்டுக்களும் அவற்றை விளையாடுபவர்களும் அல்லாடிக் கொண்டிருப்பதும் உண்மை.
1970-80 களில் இளைஞர்களாக இருந்தவர்களிடையே கைப்பந்து விளையாட்டு பிரபலமாக இருந்திருக்கும். அப்போது இந்திய அளவில் பல கைப்பந்து அணிகள் பிரபலமாக இருந்தன. குறிப்பாக இன்றுபோல் அன்றும் பல முன்னணி வீரர்களுடன் அரசுத்துறைகளின் (பல்வேறு மாநில காவல் துறை, மத்திய பாதுகாப்புப்படைகள், ரயில்வே, வங்கி அணிகள்) அணிகள் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தன.
அப்படிப்பட்ட அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு கைப்பந்து கிளப் நமது திருப்பூரைத் தளமாகக் கொண்ட TTP அல்லது Tiruppur Textiles Private ltd நிறுவனத்தினர் நடத்திய அணி. அப்போது திருப்பூர் நகரம் துணிகளுக்கு மட்டுமன்றி கைப்பந்து விளையாட்டுக்கும் தேசிய அளவில் பிரபலமான ஊர். எனக்குத் தெரிந்து இரண்டாயிரத்தின் ஆரம்பம் வரைகூட திருப்பூரில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றிருந்தன. நஞ்சப்பா அல்லது பிஷப் உபகாரசாமி ஆண்கள் உயர்நிலைப்பள்ளிகளின் பிரம்மாண்ட விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இப்போதும் அப்போதுமாக இப்போதும் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் அணி என்ன அவ்வளவு பிரபலமான அணியா? ஆம். அன்றைய காலத்தில் பல நாயகர்களை உருவாக்கிய, இந்தியா முழுவதும் பல வெற்றிகளைக் குவித்த அணி அது. இன்றைய விளையாட்டுத் தந்தைகளான அபிசேக் பச்சன், சீனிவாசன், தாய்மார்களான சில்பா, பிரீத்தி போன்று விளையாட்டை ஒரு வணிகமாக மாற்றியவர்களைப் போலல்லாமல் தங்களது வணிகத்தில் வரும் வருமானத்தைக் கொண்டு ஒரு அணியை நடத்தியவர்கள்.
இந்த அணியின் பயிற்சிமுறையே அசாத்தியமானது. கிட்டத்தட்ட இராணுவத்தைப்போல. அதிகாலை ஐந்து மணிக்கு மைதானத்தில் வரிசைநில் நிற்கவேண்டுமாம். தவறுபவர்கள் மைதானத்தைச் சுற்றி பல சுற்றுக்கள் ஓடவேண்டும். காலை உணவு வரை பயற்சி. உணவு முடித்து பின் மீண்டும் பயிற்சி, மதிய உணவு, பின் மீண்டும் பயிற்சி. இப்படியே ஒரு நாளைக்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணிநேரம் பயிற்சியிருக்கும். யானையைக்கட்டி தீணிபோடுவதுபோல் கடுமையாக உழைக்கும் இளைஞர்களின் பசிக்கு சர்வதேச தரத்தில் உணவு போட்டு விளையாட்டை வளர்த்து வந்திருக்கிறார்கள். இன்றைய கிரிக்கெட் கிளப்புகள் எனும் சூதாட்ட விடுதிகளைப்போலெல்லாம் அவர்கள் உணவுக்கு ஒரு ஸ்பான்சர், உள்ளாடைக்கு ஒரு ஸ்பான்சரெல்லாம் தேடவில்லை.
பத்துமாதங்களுக்குப் பக்கமாக பயிற்சி போட்டி என்று இருந்துவிட்டு அவரவர்களும் இரண்டு மாதம் ஓய்வெடுத்துக்கொள்வார்கள். பிறகு அவர்களது விளையாட்டு வருடம் விசாகப்பட்டனத்தில் ஆரம்பிக்கும். அதே காலை ஐந்து மணிக்குத் துவங்கும் பயிற்சியில் கூடுதலாக கடற்கரை மணலில் ஓடும், கைப்பந்து விளையாடும் பயிற்சிகள். நாற்பத்தைந்து நாட்கள் இப்படி. ஊர்விட்டு சுற்றம்விட்டு கடுமையாகப் பயிற்சி எடுப்பவர்களின் உடலில் ஒருவித வெறி மிகுந்திருக்கும், அணியில் பிணைப்பு அதிகமாகியிருக்கும்.
இந்தப் பயிற்சி முடிந்தவுடன் ஒரு பயிற்சித்தொடர். ஏதாவது ஒரு அணியை அழைத்து திருப்பூரில் விளையாடுவார்கள். அந்த அணியிடம் தோற்கும்படியாக பயிற்சியாளர் டிடிபி அணியின் ஆட்டமுறையை சொதப்பலாக அமைத்திருப்பாராம். இத்தனை நாள் பயிற்சிக்கு அப்பறம் முதல் போட்டியிலேயே தோல்வியென்றால்? தோற்றதற்கு வீரர்களுக்கு கடும் திட்டு கிடைக்கும். அந்த தோல்வியின் வலியும் திட்டின் அவமானமும் விளையாட்டு வீரர்களின் மனதிலும் உடம்பிலும் வெறியாக ஏறிட அடுத்த போட்டியிலேயே எதிரணியை துவம்சம் செய்துவிடுவார்களாம். தொடர்ந்து பலமாதங்கள், பல்வேறு ஊர்களில் போட்டிகளில், தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றி பெறுமளவுக்கு அந்தப் பயிற்சியும் பயிற்சிக்குப் பின்னான முதல் போட்டியிலேயே கிடைத்த தோல்வியும் அந்த அணியை உருமாற்றியிருக்குமாம். எல்லாம் முடிந்தபின் கடைசியாக மும்முரமான வருடத்தை நிறைவுசெய்ய wrap up ஆக பல்வேறு ஊர்களில் காட்சிப்போட்டிகளில் பங்கேற்று அதில் களைப்பில் சில போட்டிகளில் தோற்றும்விட்டு ஊர் திரும்புவார்கள். இதில் கிடைக்கும் பரிசுப் பொருட்களும் பணமும் அணியில் இருப்பவர்களுக்கு மட்டும். நிர்வாகம் அணிக்காக செலவு மட்டும் செய்திருக்கிறது. அணியால் வரவு ஏதுமில்லை.
என் அப்பா சத்தியமங்கலத்தை அடுத்த கொடிவேரியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இயல்பிலேயே மிகவும் துடிப்பான அவரை அவரது பள்ளி விளையாட்டுப் பயிற்சியாளர் தடகளத்தில் தள்ள இவரும் பள்ளி காலத்திலேயே பல சாதனைகள் புரிய பிறகு திருப்பூரில் டிடிபி அணியில் விளையாடும் வாய்ப்பு வந்தது. அப்பா அந்த அணிக்காக பன்னிரண்டு வருடம் விளையாடியிருக்கிறார். அவர் டிடிபி நூற்பாலையின் பணியாளர். ஆனால் ஆலைக்கு சம்பளம் வாங்க மட்டுமே போவாராம். அதுவும் போட்டித்தொடர்கள் இல்லாத நாட்களில் திருப்பூரில் இருக்கும் ஏதாவது ஒரு நாளில் போய் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கான சம்பளத்தை மொத்தமாக கையேழுத்துப் போட்டு வாங்கிக்கொள்வாராம். இவரைப் போலவே எல்லா கைப்பந்து வீரர்களும் அங்கு ஊழியர்கள். எழுபதுகளிலேயே அணியின் வீரர்களுக்கு பஜாஜ் செடாக் ஸ்கூட்டர் வழங்கியிருக்கிறார்கள்.
அப்பா வளர்ந்த ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அரிசிச் சோறு, இட்லி, தோசை போன்றவை திருவிழாக்களில் மட்டுமே உண்ணக் கிடைக்குமாம். கறியோ எப்போதாவது ஒருநாள் கிடா வெட்டும்போதுதான். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த பல திறமையான இளைஞர்களின் வாழ்வில் திருப்புமுணையாக கைப்பந்தும் டிடிபி போன்ற கிளப்களும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
கொடிவேரி, உப்பிலிபாளையம், மேட்டூர், திருப்பூர், சேலம் என தமிழக வரைபடத்தில் தெரியாத ஊர்களில் பல்வேறு குடும்பச் சூழல்களில் பிறந்து வந்த இளைஞர்கள் பலரை இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக மாற்றிய பெருமை கைப்பந்துக்கும் டிடிபி கிளப் அணிக்கும் உரியது. டிடிபி அணியைச்சார்ந்த அப்பா உட்பட வருடத்துக்கு குறைந்தது ஆறுபேர் தமிழக அணிக்காகவும், இரண்டு மூன்றுபேர் இந்திய அணிக்காகவும் விளையாடியிருக்கிறார்கள். இந்த அணியில் விளையாடிய ரமணராவ் மற்றும் ஸ்ரீரிதர் ஆகிய இருவரும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருது மற்றும் பிற்காலத்தில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோனாச்சார்யா விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறார்கள். அப்பா 77லிருந்து எட்டு வருடம் தமிழக அணிக்காக தொடர்ந்து ஆடியிருக்கிறார்.
ஆனால் எண்பதுகளின் மத்தியில் கிரிக்கெட் மெல்ல மெல்ல இந்திய விளையாட்டுக் களத்தை ஆக்கிரமிக்க ஹாக்கியோடு கைப்பந்தும், கைப்பந்தோடு டிடிபி கிளப்பும் தங்களது இறுதி மூச்சினை விட்டுவிட்டன.
இன்று அரசு உதவி செய்தால்தான் கிரிக்கெட் தவிர பிற விளையாட்டுக்களை விளையாடுபவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகூட கிடைக்கும் என்பது தலைவிதி.
தமிழகத்தை தலைகுணிய வைத்த நமது பெருமைமிகு கிரிக்கெட் கிளப்புக்கு சார்பாக இன்று விசில்போடும் போது டிடிபி போன்ற கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுக்களை வளர்க்க முயலும் பல கிளப்புகளின், தமிழகத்தில் அன்று நாயகர்களாக வளம்வந்த என் தந்தையும் அவரது அணியினரையும் போன்ற பிற விளையாட்டுக்களை அற்புதமாக விளையாடும் பல இளைஞர்களின் திறமையைக் கண்டுகொள்ளாமல் மழுங்கடித்து அவர்களை ஏங்க வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு கசப்பான உண்மை!?
இவ்வளவு நாள் இல்லாமல் கடந்த சில நாட்களாக இந்த உண்மை என்னைக் குடைந்தெடுக்கிறது. ஆம். நானும் கிரிக்கெட் மோகத்தில் பல திறமைகளை வியக்கமுடியாதபடி கண்களுக்கு இத்தனை நாள் கடிவாளம் போட்டுக்கொண்டிருப்பவன்தான்.
No comments:
Post a Comment