Sunday, 30 August 2015

களப்பலி

அவர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. பள்ளிக்கூடத்துக்கு அருகில் மதுக்கடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பல ஊர்களில் ஊருக்குள் இருக்கும் மதுக்கடைகளையே ஊருக்கு வெளியில் மாற்றியிருக்கும் வேளையில் பள்ளிக்கு அருகிளிருக்கும் மதுக்கடையை மூடச்சொல்லி மக்கள் ஆண்டுக்கணக்கில் போரடவைத்தது அரசின் தவறு.

சரி. இனிப் போராடினால் உயிரைக் குடுத்துப் போராடத் தேவையில்லை. அவரவருக்கும் குடும்பம் இருக்கிறது. தலைமை ஏற்பவர்களின் வழிகாட்டுதல் போராடும் மற்றவர்களுக்குத் தேவை. தலைமை ஏற்பவர்கள் கூட்டத்தின் முன்னால் நிற்கவேண்டும். ஆனால் இப்படி உயிரை விடுவது போராட்டத்துக்கு எந்த வகையிலும் நன்மை செய்யாது. இந்த ஒரு மதுக்கடை மட்டுமில்லையே! இன்னும் எத்தனையோ மதுக்கடைகள் சமுதாயத்துக்ககு இடையூறு விளைவிப்பனவாக இருக்கின்றன. இது யுத்தமென்றால் அந்த யுத்தத்தின் ஒரு களம்தான் உண்ணாமலையில் இருக்கும் மதுக்கடையை வேறிடத்துக்கு மாற்றும் போராட்டம். இப்படி ஒவ்வொரு மதுக்கடைக்கும் ஒரு உயிர் என்றால் இருக்கும் ஆறாயிரத்தி சொச்சம் மதுக்கடைகளுக்கு பல்லாயிரம் குடும்பங்கள் துயரக்கடலுக்குள் மூழ்க வேண்டுமா!? இன்னும் எத்தனையோ போராட்டக்களங்களில் உங்களது வழிகாட்டுதலும் தலைமையும் தேவைப்படுமே?

உயிர் என்பது விலைமதிப்பற்றது. இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயமாக அந்தக் கடையை வேறிடத்துக்கு மாற்றியிருக்கலாம். ஆனால் உயிரை விட்டால்தான் ஒரு போராட்டம் வெற்றியிடையும் என்பது தவறான புரிதல். ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்கு இங்கு எத்தனையோ பேர் தங்களது உயிரை விட்டனர். ஆனால் என்ன பயன்? அரசியல்வாதிகள் வீர வணக்கம் வைப்பதற்குமட்டும்தான் அந்த தியாகங்கள் பயன்படுகின்றன. அதேபோல்தான் இனி சசி பெருமாளின் இறப்பும்.

காந்தி எத்தனையோ களங்களில் முன்னணியில் நின்று போராடியிருக்கிறார். ஆனால் அவர் உயிர்போகும் வரை போராடியிருப்பார், உயிரைக் குடுத்து போராடியிருக்கமாட்டார். அவருக்கு எப்போது போராடவேண்டும் என்பதோடு எப்போது போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்பதும் தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவரால் தனது உயிரை விடாமல் நேரம் பார்த்து இந்த ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறும் அரசியல்வாதிகளையெல்லாம் விட சர்வ வல்லமை படைத்த வெள்ளையனை வெளியேற்ற முடிந்தது. வெள்ளையனை எதிர்பதில் பல லச்சம் பேர் தங்களது உயிரை இழந்ததும் நடந்திருக்கிறது. ஆனால் அந்த உயிர்கள் எதிரியை எதிர்பதில் போன உயிர்கள். ஆனால் இங்கு எதிரி யார்? நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம்தானே! சர்வ வல்லமை படைத்த நம்மை போர்களத்தில் வீழ்த்திய வெள்ளையனில்லையே. இவர்களை அடுத்தாண்டு தேர்தலில் வீழ்த்தலாமே!

அன்று முடியவில்லை என்றால் அடுத்து என்ன செய்யலாம், வேறு வழிகள் என்ன இருக்கின்றன, நீதிமன்றங்களில் மக்கள் மன்றங்களில் என்ன வாதங்களை முன்வைத்து நீதியைப் பெறலாம், அரசியல் ரீதியாகக் காய்நகர்த்தினால் இந்தப் போராட்டத்தை வெற்றிபெறவைக்க முடியுமா என்றெல்லாம் சிந்திக்கலாம். வெற்றி பெரும்வரை போராடவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் வெற்றிக்கு உயிர் விலை என்பது யுத்தகளத்தைத் தவிர மற்ற இடங்களில் ஏற்கமுடியாதது.

அறவழிப் போராட்டம் என்பது அறத்தின் துணையோடு களத்தில் நேர்பட எதிர்ப்பது. எங்களால் அதெல்லாம் முடியாது. நாங்கள் இப்படிப்பட்ட பிரச்சினைகளைப்பற்றிப் பதிவுகள் போடுவதோடோ, டீக்கடையில் பேசிக்கொள்வதோடோ சரி. களத்தில் இறங்கிப் போராடுவதெல்லாம் முடியாத செயல். இதுதான் இங்கு பல கோடிப்பேரின் நிலையும். ஒரு மரணம் எங்களை உசுப்பிவிடாது. லச்சம் பேர் மரணமடைந்தபோதும் நாங்கள் நிலைகலங்காமல் தான் இருந்தோம். இனியாவது போரடுபவர்கள் உயிரைக் குடுத்து என்பதை மறந்துவிடுங்கள்.

No comments:

Post a Comment