Sunday, 30 August 2015

மதுவிலக்கு!!!

மதுவிலக்கு அமலில் இருந்தபோது வருடா வருடம் திருட்டுத்தனமாக சாராயம் குடித்து மாட்டிக்கொண்டவர்களின் எண்ணிக்கை. (நன்றி ஆனந்த விகடன்)

1961 - 1,22,689
1962 - 1,29,977
1963 - 1,23,006
1964 - 1,37,714
1965 - 1,65,052
1966 - 1,89,548
1967 - 1,90,713
1968 - 2,53,607
1969 - 3,06,555
1970 - 3,72,472

1961ல் தமிழகத்தின் மக்கள்தொகை 3.36 கோடி. 1971ல் தமிழகத்தின் மக்கள்தொகை 4.11 கோடி. அதாவது 1971 வாக்கில் மொத்த மக்கள்தொகையில் 1% பேர் திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சிய/விற்ற/குடித்த வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த குற்றத்தைச் செய்தவர்களில் பன்னிரண்டரை சதவீதம்பேர்தான் என்று தோரயமாக வைத்துக்கொள்வோம். நமது சட்டத்தையும் காவல்துறையையும் பலர் ஏமாற்றிக்கொண்டிருப்பது நாம் அறிந்ததே. அதனடிப்படையில் நூறு பேர் திருட்டுத்தனமாக சாராயம் குடிக்கிறார்கள், அவர்களில் இருபத்தைந்து பேரை மட்டுமே காவல்துறை கைது செய்தது என்று வைந்துக்கொள்வோம்.அதிலும் பாதிப்பேர் லஞ்சம் கொடுத்தும் சிபாரிசுகளிலும் தப்பித்தனர் என்று வைத்துக்கொண்டால் திருட்டுத்தனமாக சாராயம் குடித்த அந்த நூறுபேரில் 12.5பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர் என்றாகிறது. அப்படிப்பார்த்தால் 1971ல் மொத்த மக்கள்தொகையில் 8% பேர் திருட்டுச் சாராயம் குடித்ததாகக் கொள்வோம்.

2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள்தொகை 7.2 கோடி. இப்போதும் எட்டு சதவீதம்பேர்தான் குடிப்பதாக வைத்துக்கொண்டாலும் தோரயமாக 60 லச்சம்பேர் குடிக்கின்றனர். இத்தனை பேரும் திருட்டுத்தனமாகக் குடிக்க எத்தனித்தால்!!! அவர்களில் 12.5% பேரை காவல்துறை கைது செய்தாலும் 7.5 லச்சம் பேர் கைதாவார்கள். நூறு புதிய சிறைச்சாலைகள் கட்டவேண்டி இருக்கும்.

இதனால்தான் கருணாநிதியும் எம்ஜிஆரும் மாற்றி மாற்றி மதுவிலக்கை ரத்து செய்வது அமல் படுத்துவது மறுபடியும் ரத்து செய்வது என்று குழப்பியடித்துக் கொண்டிருந்தனர். மக்களில் கணிசமானோர் குடிக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் மதுவிலக்கை குருட்டுத்தனமாக அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும். அதோடு பிணக்காடாகத் தமிழகம் மாறிவிடும்.

இதற்கெல்லாம் ஒரே மாற்று பூரண மாதுவிலக்கல்ல. தனிநபர் ஒழுக்கத்தை மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வாழ்வியலோடு இணைப்பதுவே சிறந்த தீர்வாக இருக்கும். குடிக்கும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்லித்தரவேண்டும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு, ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம், குடித்தால் என்னென்ன சாப்பிடவேண்டும், உடற்பயிற்சியின் முக்கியத்துவம், அளவுக்கு அதிகமாகக் குடிக்கிறோமா என்பதை எப்படி உணர்ந்து கொள்வது என்பன போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும், போதையைத் தருவதைத்தவிர உடலுக்கு எந்த நன்மையையும் செய்யாத இந்த கரும்புச் சக்கைச் சாராய வகைகளை முற்றாக ஒழித்துவிட்டு கள், அரிசி, கோதுமை பழங்கள் முதலியவற்றின் சாறுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் சாராய வகைகளை அறிமுகப்படுத்த வேண்டும். இவைதான் பொறுப்பான செயல்பாடுகள்.

உதாரணமாக தென்கொரியாவில் 2005ஆம் ஆண்டு கிட்டத்தட்ட முன்னூறு கோடி பாட்டில் (375மில்லி, 21-30% சாராய செரிவுள்ள) சோஜு (அவர்களது பாரம்பரிய சாராயம்) குடித்திருக்கிறார்கள். அவர்களது இன்றைய மக்கள்தொகை 5 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் நம்மவர்களைப் போல மொடாக்குடியர்கள்தான். ஆனால் அங்கு இங்கு நடப்பதைப்போல மதுவிலக்கு நாடகமெல்லாம் நடப்பநில்லை. மாறாக எவ்வளவு குடித்தால் நல்லது என்கிற ஆராய்ச்சிகளை நடத்துகிறார்கள். கொரிய குடும்ப மருத்துவக் கழகம் ஒரு சராசரி கொரியன் ஒரு வாரத்துக்கு 112 கிராம் அல்லது 8 கிளாஸ் சாராயம் எடுத்துக்கொள்ளலாம் என்கிறது. ஒரு கிளாஸ் என்றால் 14 கிராம் சாராயம். ஒரு கிளாஸ் என்பது 150 மிலி வைன், 45 மிலி லிக்கர், 360 மிலி பீர் அல்லது 90 மிலி சோஜுவுக்குச் சமம். அதவும் குடிக்கும்போது முகம் சிவக்கும் தன்மை கொண்டவர்கள் மேற்சொன்னதில் பாதி அளவுதான் குடிக்கவேண்டும் என்கிறார்கள் கொரிய மருத்துவர்கள்.

இப்படி ஆராய்ச்சிகள் எதுவுமில்லை. ஆனால் மொட்டையாக சாராயத்தை ஒழிக்கிறேன் என்று கூவுபவர்கள் ஓட்டுப் பொறுக்க மட்டுமே கூவுகிறார்கள் என்பது நமக்குப் புரியாமல் இல்லை.

கொசுரு: இந்த அரசியல்வாதிகள் அவர்களது தொண்டர்களுக்கு சாராயம் வாங்கித்தராமல் ஒரு கூட்டமும் நடத்தமுடியாது என்று சமீபத்தில் தந்தி தொலைக்காட்சி கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் திரு தொல்.திருமாவளவன் சொன்னார். தனது கட்சிக்காரர்கள் நடத்தும் சாராய ஆலைகளை மூடச் சொல்வாரா அவர் என்றெ திரு பழ நெடுமாறன் கேட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment