ஹெல்மெட்!
மாநகரத்திலிருந்து வெளியேறும் நான்குவழிப்பாதை. நகரத்தின் நெரிசல்கள் குறைந்து வெறும் சாலையாக இருந்தது. அவன் தனது இரு சக்கர வாகனத்தின் வேகத்தைக் கூட்டினான். வண்டி எழுபது கிமீ வேகத்தை அடைந்தது. அந்த காவல்துறை சோதனைச் சாவடியைத் தாண்டி இடதுபக்கமாக ஒரு சாலை வந்து இணைகிறது. இரண்டுமுறை ஒலியெழுப்பிவிட்டு வண்டியின் வேகத்தை அறுபதாகக் குறைத்தான். அந்த சாலையிலிருந்து கிளம்பிய ஒரு ஒளிப்பொட்டு திடீரென இவனது வழியில் குறுக்காக வந்துவிட்டது. தனது வண்டியின் விசையைக் குறைத்தபடியே இடது பக்கமாக வண்டியை சாய்த்து ஒதுங்கியபடியே அந்த வெளிச்சப் புள்ளியைத் தாங்கிய வண்டியை கடக்க முயல்கிறான். அந்த இடைச்சொருகிய வண்டி பதட்டத்தில் நின்றுவிட இவன் கணக்குப்போட்டபடி இடிபடாமல் தாண்ட முடியவில்லை. இவன் வண்டியின் பின்பக்க இன்டிகேட்டர் அந்த வண்டியில் மோதியது.
அவனது வண்டியை பார்க்க அடுத்தநாள் காவல்துறை சாவடிக்குப் போயிருந்தபோது அந்த காவலர் அதற்குப்பிறகு நடந்ததைச் சொன்னார் இவன் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் உருண்டதாகவும், வண்டி கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று கரணமடித்து விழுந்ததாகவும் சொன்னார். அதில் ஒரு கரணம் இவனது முதுகைக் களமாக்கியது அவன் முதுகில் உள்ளங்கையளவு இருந்த இரண்டு தீக்காயங்களைப் பார்த்தபோது தெரிந்தது.
நல்ல வாட்டசாட்டமான இருபது வயது இளைஞன். களையான முகம். அவனது சிகையமைப்பும் முகமும் அவனைப் பார்ப்பவர்களுக்கு திரைப்பட நடிகர் ஆர்யாவை நியாபகப்படுத்தும். அந்த விபத்து நடந்து இரண்டாவது மணிநேரத்தில் மருத்துவமனையில் அவனைப் பார்த்தேன். என் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் வந்தது. நெற்றியில் ஒரு அங்குல அளவுக்கு கிழிந்திருந்தது, வலது புருவத்துக்குப் பக்கவாட்டில் ஆரம்பித்து கண்ணத்தில் தடம்பதித்த இன்னொரு கிழிசல், மேல் பற்கள் இரண்டைக் காணவில்லை, இன்னொன்று மேலே எழும்பில் ஏறியிருந்தது, அவனது உதடுகள் கிழிந்து வீங்கியிருந்தன, அவனது வலது காதுக்குப் பின்புறம் சாலைநில் உராய்ந்ததால் பலத்த காயம்.
முதுகில் பட்ட தீக்காயங்கள் மெதுவாக ஆறிவிட்டன. அவன் பற்களுக்கு பொய்ப்பல் கட்டிவிட்டார்கள். முகத்தில் பட்ட காயங்கள் ஆறவும் தையல்களைப் பிரிக்கவும் நான்கு மாதங்களாகிவிட்டன. காதுகளுக்குப் பின்புறம் உராய்வினால் தீய்ந்துபோன சதைகள் தழும்பாகிவிட்டன. அவை புற்றுநோய் தாக்கிய சதைகள் போல தொடர்ந்து வளர்ந்து ஒருகட்டத்தில் காது பந்துபோலாகிவிட்டது. அதற்கு பிலாஸ்டிக் சர்ஜரி செய்து காதைக் காப்பாற்றிக்கொண்டான்.
முகத்திலிருக்கும் தழும்புகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அவற்றை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொள் என்றபோது மறுத்துவிட்டான். தான் அன்று செய்த தவறுகளை நினைவில் வைத்துக்கொள்ள அந்த தழும்புகள் அவசியமென்றான்.
அவன் அன்று செய்த தவறுகளில் எனக்குத் தவறாகத் தெரிந்தது ஒன்றுதான். அவன் ஹெல்மெட் அணியாவில்லை. அந்த சாவடியில் அன்று பணியிலிருந்த காவலரும், அவன் விழுந்தபோது அவனை ஓடிச்சென்று தூக்கிய ஒரு வாயில் காவலரும், அவனுக்குச் சிகிச்சையளித்த மருத்துவரும் சொன்னது இதுதான், "ஹெல்மெட் போட்டிருந்தா அவன் முகம் தப்பியிருக்கும்". அவன் புது வாகனம் வாங்கியதாகச் சொன்னபோது நான் அவனிடம் சொன்னது ஒன்றேதான், ஹெல்மெட் வாங்கியாச்சா? அப்பறம் வாங்கிக்கலாம் என்றான். ஆயிரத்தைனூறு பெறுமதியுள்ள அந்த ஹெல்மெட்டை வாங்கும் முன் அவனது முகத்துக்கு மட்டும் ஒரு லட்சம் செலவாகியிருந்தது...
இது கதையல்ல நிஜம்... நீதிமன்றம் உத்தரவிடும் வரையிலோ, அரசு சொல்லும் வரையிலோ, காவலர்கள் உரிமத்தை ரத்துசெய்யும் வரையிலோ காத்திருக்காதீர்கள். உடனே ஒரு ஹெல்மெட் வாங்கிவிடுங்கள்.
No comments:
Post a Comment