Sunday, 30 August 2015

மரம் நட்டி

என் தாத்தா ஒரு கொய்யா மரத்தையும் ஒரு நெல்லி மரத்தையும் நட்டு வைத்திருந்தார். இரண்டும் நான் வளரும் போதே காய் பிடிக்க ஆரம்பித்து விட்டன. சில பப்பாளி மரங்களும் இருந்தன. வருவோர் போவோரெல்லாம் அந்த கனிகளை பறித்து உண்டு கொண்டிருந்தோம். ஆனால் யாருக்கும் இன்னொரு மரம் நடவோ அல்லது எடுத்ததைத் திருப்பித் தரவோ எண்ணமில்லை.

அணில்களும் வவ்வால்களும் கிளிகளும் காக்கைகளும் இந்த பழங்களை எங்களோட பங்குபோட்டு கொண்டன. எனக்கு சிறு வயதில் இவற்றை விரட்டிவிடுவதுதான் பொழுதுபோக்கு.

இப்படியே போகும்போது வீட்டுக்கு முன்னே ஒரு மரம் வைத்தால் நிழல் கிடைக்கும், மரம் வளர்த்தால் மழை கிடைக்கும் என்று வகுப்பில் படிக்க, அந்த உந்துதலோடு அப்பாவை நச்சரித்து தோட்டத்துக்குள் தேடி மூன்று வேப்பஞ்செடிகளை எடுத்து வந்த நட்டு வைத்தோம். ஒன்றை மாடு கடித்துவிட்டது. மற்ற இரண்டும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

அப்போது வீட்டில் சில கஷ்டம். வீட்டுக்கு முன் நெல்லி இருந்தால் அது ஆகாது என்று கொளுத்திப் போட அதில் பக்கென்று பத்திக்கொண்ட நான் அந்த மரத்தை வெட்டிப் போட்டேன். எனக்கு பள்ளிப்பருவத்தில் மரம் வெட்டுவது ஒரு போதை. எதையாவது கத்தியைக் கொண்டு வெட்டிக்கொண்டிருப்பேன். எங்கள் தோட்டத்திலிருக்கும் பல தென்னை மரங்கள் நான் கொத்தி விளையாடியதன் வடுவை இன்றும் சுமந்து கொண்டிருக்கின்றன.

இன்று தோட்டத்துக்குள் போய்ப் பார்த்தால் புதிதுபுதிதாக எத்தனையோ கொய்யாச் செடிகளும் பப்பாளிச் செடிகளும், பாதாமிக்காய் செடிகளும், கறிவேப்பிலைச் செடிகளும், அரசு, ஆல், வேம்பு போன்ற செடிகளும் ஆங்காங்கே முளைத்துக் கொண்டிருக்கின்றன.

நாம் வளர்த்த மரத்தின் பலன்களை அறுவடை செய்வதிலேயே குறியாக இருந்துவிடுகிறோம். ஆனால் நமக்கான அந்த கனிகளை பங்குபோட வருவதாக நாம் எண்ணிக்கொண்டு விரட்டியடிக்கும் அந்த பறவைகளும் அணில்களும் நமது மரங்களில் உண்ன அந்த ஒற்றைக் கனிக்கு ஈடாக இன்னும் எத்தனையோ செடிகளை நடவு போட்டுக் குடுத்து நம்மைக் கடனாளியாக்கிவிடுகின்றன.

அந்த ஒற்றைக் கொய்யா மரம் இன்று நான்கு கொய்யா மரங்களாகப் பரவி நிற்கிறது. அந்த ஒற்றை வேம்பு இன்று தோட்டத்தின் மூளை முடுக்கெல்லாம் வேப்பஞ்செடிகளாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. யாரும் நடாமலேயே பாதாமி மரங்களும், சர்கரைப் பழ மரங்களும் முளைத்து வளர்ந்துகொண்டிருக்கின்றன!

ஒன்று மட்டும் நிச்சயம். மனிதர்கள் நாம் மொத்தமாக செவ்வாய்க்குப் போய்விடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பத்தே வருடம் பூமியை எட்டிப்பார்க்காமல் அங்கேயே இருந்துவிடுவோம். அந்தப் பத்து வருடம் போதும். பூமி மீண்டும் சோலைவனமாக மாறிவிடும்!!!

No comments:

Post a Comment