தமிழகம் பாலைவனமாகிறது. தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் பற்றாக்குறைக்கான காரணங்கள் என்ன, தண்ணீர் பற்றாக்குறையை எப்படி எதிர்கொள்வது என இந்து நாளேட்டில் ஒரு கட்டுரையைப் படித்தேன். கட்டுரை முழுவதும் அருமையான தகவல்கள். ஆனால் தீர்வாக முன்வைக்கப்படுவது முட்டாள்தனமாக இருக்கிறது.
தகவல்: தமிழகத்தின் மொத்த பரப்பில் 38% விவசாய நிலமாக இருக்கிறது, அதில் 30% பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. தமிழகம் 19.3%அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறையை கொண்டுள்ளது. அதாவது கிடைக்கும் தண்ணீரின் அளவுக்கும் தேவைக்குமான இடைவெளி.
ஆசிரியர் முன்வைக்கும் தீர்வு : நெல் பயிரிடும் பரப்பு அதிகமாக இருப்பதால்தான் தமிழகத்தில் தண்ணீருக்கான தேவை அதிகரிக்கிறது. நெல் வளர வயல்களில் பலநாட்களுக்கு நீர் நின்றிருக்கு வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் தமிழகம் நெல் பயிரிடும் பரப்பையும், விவசாயப் பரப்பையும் குறைக்க வேண்டும். நகரமயமாதலை இன்னும் ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறார்.
நிரஞ் : தகவல்களுக்கு நன்றி.
ஆனால் உங்களது முடிவுகள் முட்டாள்தனமாக இருக்கின்றன. நெல்லுக்கு நீர் அதிகம் தேவைப்படுவது உண்மைதான். ஆனால் இதை தமிழக அரசு, வேளாண் அறிவியல் மையங்கள் மற்றும் விவசாயிகள் ஏற்கனவே எதிர்கொள்ளத் துவங்கிவிட்டனர். செம்மை நெல் சாகுபடி முறையில் பாதி அளவுதான் தண்ணீர் தேவைப்படுகிறது. இப்போது தமிழக வேளாண்துறை இதில் அதிகமாக கவனம் செலுத்திவிருகிறது. அதோடும் குறைவான நீர் மற்றும் வரட்சியைத் தாங்கி வளரும் பல பாரம்பரிய நெல் ரகங்கள் இருக்கின்றன. அவற்றை இன்னும் பரவலாக்க வேண்டும். நீர் வளம் குறைவான மற்றும் நிலத்தடி நீரை அதிகம் நம்பியிருக்கும் மாவட்டங்களில் நெல்லுக்கு மாற்றாக ராகி, கம்பு, குதிரைவாலி, சாமை, தினை முதலிய சிறுதாணியங்களைப் பயிர் செய்யலாம். இவற்றுக்குக் குறைவான அளவே நீர் தேவைப்படும் என்பதோடு முதலீடும் குறைவே. மேலும் தமிழக மக்களின் உணவு முறையில் சிறுதாணியங்களை மீண்டும் புகுத்துவதும் முக்கியம். அப்போது தேவை அதிகரிக்கும். தேவை அதிகரித்தால் அது நேரடியாக சாகுபடிப்பரப்பை அதிகரிக்கும்.
அடுத்தது கரும்பு. கரும்பு பயிரிடும் பரப்புக்கான தேவை சர்கரைக்கான தேவையால் அதிகரிக்கிறது. இதை எதிர்கொள்ள சர்கரையின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு பனைவெல்லம், கருப்பட்டி போன்றவற்றின் பயின்பாட்டை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தின் சூழலுக்கான மரம் பனை. எல்லா மரங்களும் பட்டுப்போனாலும் வரட்சிக்கு கடைசியாக மடியும் மரம் பனையாகத்தான் இருக்கும். இப்போது விவசாயம் குறைவாக நடக்கும் பகுதிகளிலும், வரண்ட பகுதிகளிலும் அதிகப்படியாக பனை மரங்களை நடவு செய்ய ஆரத்பிக்கலாம். எல்லா விவசாயிகளும் தங்களது தோட்டத்தில் ஐந்து பனை மரங்களை நடுவு செய்யும்படி ஊக்குவிக்கலாம். அரசு தனது பொது விநியோகத் திட்டத்திலிருந்து சர்கரையை நீக்கிவிட்டு பனை வெல்லம், கருப்பட்டி முதலியவற்றை மாணிய விலையில் விற்கலாம். இது பனை மரங்களுக்கான தேவையை அதிகரிப்பதோடு, சர்கரைக்கான தேவையைக் குறைத்து கரும்பு சாகுபடிப் பரப்பைக் குறைக்க உதவும்.
அதிகப்படியாக பருப்பு வகைகளைப் பயிரிடலாம். அரிசியைக்கூட இறக்குமதி செய்துகொள்ளலாம். சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்தால் அரிசிக்கான தேவை குறைந்துவிடும். ஆனால் நாம் பருப்பு வகைகளை அதிகமாக இறக்குமதி செய்துபொண்டிருக்கிறோம். அதற்கும் ஒரு விடிவு ஏற்பட்டதாக இருக்கும்.
இப்படியாக அதிக நீர் தேவைப்படும் இரண்டு பயிர்களின் பரப்பைக் குறைத்து விட்டாலே வவசாயத்துக்குத் தேவையான நீரின் அளவு குறைந்துவிடும்.
அடுத்தது, இந்தக் கட்டுரையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஊரை ஏமாற்றும் தந்திரம். ஏதோ விவசாயத்தால் தான் தமிழகத்தில் நீருக்குப் பற்றாக்குறை நிலவுவதாகக் கற்பிப்பது.
தமிழகத்தில் நீருக்கான பற்றாக்குறை ஏற்படுவதற்கு முக்கியமான காரணிகளில் முதன்மையானவை நீர் நிலைகளை வணிக நோக்கத்துடன் ஆக்கிரமிப்பதும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு சுத்தீகரிக்கப்பட்டு மறு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் வீணாக்கப்படும் நீரும்தான்.
உதாரணமாக கொங்கு மண்டலத்தின் நீராதாரமாக விளங்குபவை மூன்று ஆறுகள். அவற்றில் நொய்யலாறு சாயக்கழிவுகளால் நாசப்படுத்தப்பட்டதால் திருப்பூர் நகரின் திண்ணீர் தேவையை ஈடுகட்ட பவானியாற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழல். இந்த கழிவுநீர் ஆற்றோடு ஆற்றின் வழித்தடமெங்கும் நிலத்தடி நீரையும் வீணாக்கிவிட்டது. இதனால் எத்தனை ஏக்கர் விவசாய நிலம் வீணாகிவிட்டது?
திருப்பூர் மட்டுமல்ல. வேலூர், சென்னை, ஈரோடு என தமிழகத்தில் நீராதாரங்களை மாசுபடுத்தும் தொழில் நகரங்கள் ஏராளம்.
தொழில் பெருக்கம் அவசியம். ஆனால் நீரை சுத்தீகரித்து மறு பயன்பாட்டுக்கு உட்படுத்துவதுதானே ஆரோக்கியமான நீர் மேலாண்மையாஎஅ இருக்கமுடியும்?
நீராதாரங்கள் மாசுபடுவது ஒரு புறமென்றால், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது இன்னொரு பக்கம். சென்னை நகருக்குள்ளும் சுற்றிலும் இருந்த எத்தனையோ ஏரிகளை கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்துவிட்டோம். இதே நிலைதான் தமிழகம் முழுவதும். எத்தனையோ பேருந்து நிலையங்களும் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்களும் முன்பு நீர்நிலைகளாக இருந்த இடங்களின் மேல்தான் நின்று கொண்டிருக்கின்றன.
உதாரணமாக போரூர் ஏரி முன்னர் 900 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியாக இருந்தது. ஆனால் இன்று அந்த ஏரியின் பரப்பு 300 ஏக்கராக சுருங்கிவிட்டது. தமிழகத்தில் ஒரு காலத்தில் 39,000ஏரிகள் இருந்தன ஆனால் இன்று எத்தனை மிஞ்சி இருக்கின்றன என்னு எண்ணிப்பார்த்தால் கண்களில் கண்ணீர்தான் மிஞ்சும். சென்னையில் நூற்றுக்கணக்கில் இருந்த குளங்களின் எண்ணிக்கை இன்று முப்பதாகக் குறைந்துவிட்டது.
நீர்நிலைகள் குறைவதால் ஏற்படும் பாதிப்பு என்ன? நீர்நிலைகள்தான் மழையைத் தேக்கி வைத்து வரட்சிகாலங்களில் பயன்பாட்டுக்குத் தரும். ஆனால் இன்று நீர் நிலைகளை நாம் அழித்துவிட்டதால் பெய்யும் மழை அப்படியே வடிந்து ஓடிவிடுகிறது. உதாரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கெடுக்கும் காலங்களில் விநாடிக்கு பல லட்சம் கன அடி நீர் கடலில் வீணாகக் கலந்துவிடுகிறது. அந்தக்காலத்தில் ஏரிகளையும் கன்மாய்களையும் வெட்டி இப்படியாக கடலில் வீணாகும் நீரைத் தேக்கிவைத்துதான் தமிழகம் முழுவதும் வெள்ளாமை எடுத்தனர்.
அடுத்தது மணல் கொள்ளை. ஆற்றுப்படுகைகளில் மணலை அள்ளுவதால் ஆற்றில் ஓடும் நீர் நிலத்தடிக்குப் போகாமல் ந்ள்ரடியாகக் கடலை அடைந்துவிடுகிறது. குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு முக்கயமான காரணம் ஆறுகளில் மணல் கொள்ளை போவதுதான்.
நகர மயமாதலால் தமிழகம் தண்ணீர் வளங்களை வேகமாகத் தொலைத்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினைகளைக் களையாமல் மேலும் நகரமயமாக்குதலை ஊக்குவிப்பதுதான் தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையைச் சரி செய்வதற்கான வழி என்பது எப்படிப்பட்ட மூடத்தனம்? விவசாயத்தின் மீது பழி போட்டுவிட்டு நகரங்களை புன்னிய சேத்திரங்களாகக் காட்டி யாருக்கு சாமரம் வீசப் பார்கிறீர்? இதற்குப் பின்னிருக்கும் லாபிகள் எப்படிப்பட்டவை?
பல்லாயிரம் வருடங்களாக தமிழகத்தில் விவசாயம் நடந்து வருகிறது. ஆனால் இந்த இருநூறு வருடங்களில் தான் தமிழகத்தில் இயந்திரத் தொழில்கள் பெருகி வருகின்றன. பல்லாயிரமாண்டுகளாக விவசாயம் நடந்தும் பாலைவனமாகாத தமிழகம் கடந்த முப்பது வருடங்களில் பாலையாக மாறிக்கொண்டிருப்பது உங்கள கண்களுக்குத் தெரியவில்லையா?
நுட்பமாக மக்களை ஏமாற்றும் இதுபோன்ற தந்திரங்களுக்கு இந்து போன்ற பிரபலமான பல லட்சம் பேர் படிக்கும் நாளிதழ்கள் இடந்தருவது வேதனையான விசயம்.
அந்த கட்டுரையைப் படிப்பதற்கான இணைப்பு இதோ,
http://m.thehindu.com/opinion/op-ed/the-desertification-of-tamil-nadu-rice-and-private-wells-exacerbate-states-water-crisis/article7549810.ece
No comments:
Post a Comment