ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன்! பொன்னியின் செல்வனில் வரும் மூன்று நாயகர்கள். இவர்களின் வாழ்க்கையையும் சுபாவங்களையும் கல்கி காட்டியிருக்கும் விதம் அலாதியானது.
ஆதித்த கரிகாலன் : பேரரசர் வம்சத்தில் பிறந்திவன். மாபெரும் வீரன். இளம் வயதிலேயே செயற்கரும் வீரச்செயல்கள் புரிந்தவன். தன் தீரத்தால் பட்டத்திளவரசனானவன். யாருக்கும் அஞ்சாத இயல்புடையவன். அவன் இள வயதில் களத்தில் புரிந்த வீரச்செயல்கள் இளைஞர்களின் உள்ளத்தில் கிளர்ச்சி உண்டாக்கச் செய்பவை. பெருங்கனவுகளும் அவற்றைச் சாதிக்கும் ஒப்பற்ற வீரமும் கொண்டவன். தன் காதலுக்காகவும் அதனால் தான் இழைத்த அநீதிகளுக்காகவும் வருந்திக்கொண்டு குரோதமும் காதலும் மாறி மாறி ஆட்டிவைக்க மனம் கலங்கி வாழ்பவன். முன்கோபமும், அவசரமும் அதிகம். எத்தனையோ பெருங்காரியங்கள் செய்யும் வாய்ப்புகள் இருந்தும் தனது மனதைக் கட்டுப்பாட்டில் வைக்காததால் கனவுகளுக்குச் செயல்வடிவம் குடுக்கும் முன்னே வீழ்கிறான்.
அருள்மொழி வர்மன் : பேரரசர் குலத்தில் பிறந்தவன். தொட்டதெல்லாம் பொன்னாகும் வரம் பெற்றவன். வயதுக்கும் தோற்றத்துக்கும் மீறிய தலைமைப் பண்புகளும் கனவுகளும் கொண்டவன். யாரையும் வசீகரிக்கும் தன்மையும் தன் படைகளைப் போலவே எதிரிகளின் அபிமானத்துக்கும் உரியவன். எப்பேற்பட்ட சூழலும் அவனுக்குச் சாதகமாகிறது. அவன் நினைத்ததெல்லாம் கைகூடுகிறது. ஆனாலும் தனக்கு பாத்தியமான பேரரசை பிறருக்கு விட்டுக்கொடுத்து அதில் இன்பம் காண்பவன். தனக்கெனப் பிறந்திருக்கும் பெண்ணிடம் காதல் கொள்கிறான்.
வந்தியத்தேவன் : யாருமற்ற அநாதை. முற்காலத்தில் அவன் குலம் அரசாண்டதின் எச்சமாக நாடும் வீடுமற்று வாழ்ந்தபோதிலும் அரையன் எனும் பட்டத்தைச் சுமப்பவன். தன் எஜமானர்களின் ஏவலுக்கு கட்டுப்பட்டவன். தான் நினைத்தபோது தூங்கவும் திங்கவும் வாய்ப்பற்று விதியின் இழுப்புக்கு உடன்பட்டவன். ஆனால் எந்த சூழலையும் சமாளிக்கும் துணிவும் மதியூகமும் படைத்தவன். பெண்களைக் கண்டால் வழிபவன். ஆனால் மனத்தை ஒருத்தியிடம் மட்டுமே பரிகொடுக்கிறான். அவள் பேரரசனின் மகளானாலும் தன் காதலை அவன் கைவிடவில்லை. எடுத்த காரியங்களை முடிக்க எத்தனைப் பிரயத்தனங்களும் செய்தாலும் விதியின் போக்குக்கு எதிராக அவனால் எதுவும் செய்யமுடியாது. தன் உழைப்பாலும் விதியின் போக்காலும் உன்னதமான நிலைகளை அடைகிறான்.
இந்த மூன்று கதாப்பாத்திரங்களின் இயல்புகளை உலகில் வாழும் மனிதர்களுக்குப் பொருத்திப்பார்க்கலாம். அத்தனை மனிதர்களையும் ஒரு பிரமிடாக நிறுத்தி வைத்தால் ஆதித்த கரிகாலன்கள் அதன் அடியிலும் அருள்மொழி வர்மன்கள் அதன் முனையிலும் நிற்பார்கள். அவர்கள் சொற்பமானவர்களே. உலகின் போக்கில் தாக்கம் ஏற்படுத்தும் முன்னே ஆதித்த கரிகாலன்கள் தீர்ந்து போவார்.. உலகின் போக்கில் பெரும் மாற்றங்களை அருள்மொழி வர்மன்கள் போகிற போக்கில் செய்துவிட்டுப் போவார்.. ஆனால் அந்த உலகின் இயக்கம் வத்தியத்தேவன்களின் அடுத்து என்னவென்று தெரியாத பயணத்தில்தான் இருக்கிறது. அவர்கள்தான் கைகூடாத கனவுகளுடன் போராடுபவர்கள். அவர்களின் வாழ்க்கைதான் மனிதகுலத்தின் பயணத்தை ஒரு கோட்டில் கொண்டு செல்வது. அருள்மொழி வர்மன்கள் அதன் திசைகாட்டிகள். ஆதித்த கரிகாலன்கள் அந்த பயணத்தை மாற்றும் வல்லமை கொண்டிருந்தும் தடைக்கற்களாக முடிந்து விடுபவர்கள். யாரும் ஆதித்த கரிகாலன்களாக முடியும். வந்தியத்தேவர்கள் தங்கள் மனத்தை அலைபாயவிடும் போது ஆதித்த கரிகாலர்களாக முடிந்து போகிறார்கள். ஆனால் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் அருள்மொழி வர்மர்களாக முடியாது. வந்தியத்தேவர்கள் தங்களது லட்சியங்களுக்காக உயிரையும் உணர்வுகளையும் விட்டுக்கொடுத்து உழைக்கும்போது அருள்மொழி வர்மர்களாகப் பரிணமிக்கிறார்கள்.
இங்கு முக்கியமானது நம் மனதை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதே. உடல் வலிமையோ, மனிதர் துணையோ, பொருள் வளமோ மனதின் வலிமைக்கு முன் நிற்க முடியாது. அப்படிப்பட்ட மனதை நாம் நம் கட்டுக்குள் வைத்திருக்கும்போது செய்ய தினைப்பதையெல்லாம் அவை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் செய்யும் ஆற்றலைப் பெருகிறோம்.
மனம் விசித்திரமானது!! அது மடுவாகவும் மலையாகவும் உருமாறும் ஆற்றல் கொண்டது!!!
No comments:
Post a Comment